நெஞ்சொடு கிளத்தல்: உறவின் ஆழத்தைப் பேசும் உளவியல் நூல்!

நூல் அறிமுகம்: நெஞ்சொடு கிளத்தல். (நாவல்)

”வாசிக்கத் தெரிந்த கரங்களுக்குத்தான் ராகம் பிடிபடும். நேசிக்கத் தெரிந்த உள்ளங்களுக்குத்தான் நெஞ்சம் பிடிபடும்…” என்பார்கள்.

இந்த அனுபவபூர்வமான வாசகங்களை மையப் பொருளாகக் கொண்டு, அண்ணன் ராஜ்மோகன் உருவாக்கியுள்ள அற்புத புனைப் படைப்பு நூல் தான் ‘நெஞ்சொடு கிளத்தல்’.

கிளத்தல் என்பதற்கு புலப்படும்டி கூறுதல் (To express clearly) என அகராதி சொல்கின்றது. சற்றே ஆழமான, பொருள் புதைந்த தலைப்பு.

மனப்பிறழ்வு கொண்ட ஒரு பெண்ணின் கற்பனையில் வெளிப்படும் ஒரு புதிய உலகம் என்ற அறிமுகத்தோடு, கற்பனை உலக உளவியலை கருப்பொருளாகக் கொண்டு, கதை வடிவமாக்கி உள்ளார், உளவியல் துறையில் பல ஆண்டுகாலம் உழுதுவரும், உலாவரும் அண்ணன் ஆசிரியர் ராஜ்மோகன்.

மனப்பிறழ்வு, கனவு – நனவுலக மாற்றுப் பயணம், பாரகோசம், சிக்மண்ட் ப்ராய்ட் – இவைகள் கதையின் பின்புல உளவியல் நியாயங்கள்.

மகாபாரத இளவரசி குந்தி, மாற்று வடிவில் திருநெல்வேலி வட்டப்பாறை கிராம எளிய குடும்பத்துக் குந்தியாய், அறியாப் பருவத்தில் வயிற்றில் கருவாங்கி அது குழந்தையாய் உருவாகி வந்த வினைதாங்கிய தாய் – இது கதையின் அடித்தளம்.

தன் ஆசிரியர் மூலம் கதையில் கேட்ட, கனவுலகில் வடிவமைத்த – தங்கமீன் இராஜகுமாரன், ஒருநாள் இரவு உள்ளூர் குளக்கரையில், நனவுலகில் வந்து அப்பெண்ணை ஒரு குழந்தைக்குத் தாயாக்கிவிட்டு சென்று விடுகிற நிகழ்வு கதையின் மையக்கரு.

நடைமுறையில் இது சாத்தியமா? விஞ்ஞானத்திற்குப் புறம்பானதா? இது வேறு விவாதம்.

கதைக்கு கை, கால் வேண்டுமா?, ஆனால் அதற்கு உயிர் இருந்தால் போதும். அந்த வகையில் இது உயிரோட்டமான ஒன்று.

உளவியல் ரீதியான முடிச்சுக்களுடன் ஏறத்தாழ அரை நூற்றாண்டிற்கும் மேலாக, நகர்புறவாசியான அண்ணன் ராஜ்மோகன் அவர்களின் இந்த கிராமத்துக் கதை வாசனை, அவரது அனுபவ முதிர்வின் மிகப்பெரும் சாதனை.

ராஜ்மோகன்

பழைய சோறுடன் பச்சமிளகாய் கலந்த அமுது. வியக்க வைக்கும் படைப்பு. மாறுபட்ட சிந்தனை கொண்ட வேறுபட்ட கதை. அழகியல் செறிவு. நன்று.

நெல்லை மண்ணின் மணம் வீசும் கிராமத்து வாழ்வு வழக்கு முறைகள், சொல்லாடல்கள், கதையெங்கும் தனித்துவத்துடன் நம்மை கைப்பிடித்து கடைசிவரை அழைத்துச் செல்வது இதன் தனிச்சிறப்பு.

கிராமத்து சமுக அமைப்பு, பழக்கவழக்கங்கள், குளக்கரை, கோவில் கொடை, சாமியாடி, கணியான் கூத்து, கூத்துக் கலைஞன், வளையல்காரன், மருத்துவச்சி, மருத்துவமனை, சகோதர உறவின் ஆழம்,

– இவை போன்ற பலவற்றின் விவரிப்பு நம்மை அப்பகுதியின் ஒரு பார்வையாளராய் மாற்றி விடுகின்றது.

கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களால் விடியல் பெற்ற எண்ணற்ற விளிம்புநிலை குடும்பங்கள் நெல்லைப் பகுதியில் ஏராளமாக உள்ளன.

அளவிடாமுடியா, ஈடு இணையற்ற, தன்னலமற்ற, மரியாதைக்குரிய இந்த நிறுவனங்களின் சேவை மனிதநேய வரலாற்றின் மைல் கற்கள் என்பதே சரி.

முக்கியமாக, கதையில் ஏதாவது ஒரு பாலியல் விபத்தினால் பாதிக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்ட தாய்மார்களின் அபலைக் குழந்தைகளின் அனாதரவுக் குரலும் உளவியல் வலியும் மெல்லிய கோடாய் கடைசிவரை ஊர்ந்து செல்வது, நம் மனதை உளி கொண்டு தாக்குகிறது.

இதனை ஆசிரியர் அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

மிகச்சிறு வயதில் தாய் / தந்தை இவர்களை இழந்து பிளவுக் குடும்பத்தில் (Broken family) ஆதரவின்றி வாழும் குழந்தைப் பருவம் ஆற்றொணாத் துன்பம் நிறைந்தது.

அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதன் ரணவேதனையை உணரமுடியும். கதையெங்கும் அது அடிநாதமாய் இழையோடுகிறது.

அந்தரங்கம் புனிதமானது. அது அம்பலப்படுத்தப்பட்டு, பிறரால் கேள்விக்குறியாகி, கேவலக்குறியாகும் போது வரும் அவமானம் அளவிடாமுடியா அவலத்திற்குரியது.

இதை வாழ்வில் தொடர்ந்து சந்திக்கும் குந்தியும் கயலும் தான் கதையின் நாயகிகள்.

தன் கருவிற்குக் காரணமான ஆணை கனவில் மட்டுமே கைநீட்ட முடிந்த தாயாக குந்தி.

தன் தகப்பன் இன்னாரென்று இதனால் சொல்லமுடியாது கடைசி வரை அல்லலுறும் மகளாக கயல்.

இவர்கள் இருவரையும் சுற்றி வரும் எண்ணற்ற கதைமாந்தர்கள்.

நல்ல நட்புக்கு உதாரணமாய் சுந்தரி – சந்திரன் தம்பதி. உன்னமான உயர் உள்ளம் கொண்ட ஆசிரியர் மதி. குன்றத்து விளக்காய் நிற்கும் டேனியல் பாதர்.

தத்தெடுத்த மகளையும் தவறவிட்டுத் தவிக்கும் பேச்சி – பச்சை தம்பதி.

கடைசியில் கதைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆசிரமவாசியான ராஜ்குமார் மார்ட்டின் உட்பட பலரும் தங்கள் பாத்திரத்தை அளவுகுறையாமல் நிறைவு செய்கிறார்கள்.

மொத்தத்தில் கட்டாயம் ஒவ்வொருவரும் ஒருமுறையாவது படிக்க வேண்டிய அற்புதமான புதினம் ‘நெஞ்சொடு கிளத்தல்’.

இதன் படைப்பாளி அண்ணன் ராஜ்மோகன் எத்தனையோ சாதனைகளுக்குச் சொந்தக்காரர்.

அவரால் விழிபெற்று, வழிகண்ட இளைய தலைமுறைகள் (நான் உட்பட) ஏராளம். அவரின் சமூக – உளவியல் படைப்புகளில், கீரீடத்தில் இதுவும் ஒரு வைரக்கல். வணங்குகிறேன் இன்னும் இவைகள் தொடர.

இதை சிறப்புற பதிப்பித்து வெளியிட்ட டிஸ்கவரி பப்ளிகேசன்ஸ் திரு. வேடியப்பன் அவர்களுக்கும் எம் நன்றி…வாழ்த்துகள்.  

****

நெஞ்சொடு கிளத்தல்! (நாவல்)
ராஜ்மோகன், உளவியல் நிபுணர்.
டிஸ்கவரி பதிப்பகம்
பக்கங்கள் – 204
விலை – ரூ. 250/-

****

நூலாசிரியர் பற்றி…

முனைவர் N. ராஜ்மோகன்  மனிதர்களின் நடத்தை குறித்த உளவியல் பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்.

உளவியல் குறித்து ஆங்கிலம் மற்றும் தமிழில் நூல்கள் வெளியிட்டுள்ளார்.

மனித வளத்துறையின் தலைவராக இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றியவர்.

கடந்த 25 ஆண்டுகளாக போதி (Bodhi) என்ற நிறுவனத்தின் மூலம் பல்வேறு சிறப்பு பயிற்சிகளை தனியார் மனிதவளத் துறையில் உள்ள சிறந்த நிறுவனங்களில் பல்வேறு மட்டங்களில் பணியாற்றுபவர்களுக்கு இந்த நிறுவன மூலம் பயிற்சி வழங்கப்படுகிறது.

மாணவர்களின் தகுதித் திறன் குறித்த ஆய்வுகள் மூலம் அவர்களது உளவியல் குறித்த அறிக்கைகளை பெற்றோர்களிடம், மாணவர்களிடம் பகிர்ந்து கொண்டு தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் தேர்வுகள் நடத்தி வருகிறது.

நூல் விமர்சகர் பற்றி…

முனைவர். ராஜ மதிவாணன்.
நேரு இளைஞர் மைய மாநில ஒருங்கிணைப்பாளர் இந்திய அரசு. (பணி நிறைவு)

நெல்லை, அரும்புகள் அறக்கட்டளை இயக்குநர்.

சிறந்த நாடகக் கலைஞர். ‘தேடல்’ என்ற நாடகக் குழுவை கல்லூரி நாட்களில் இயக்கியவர்.

உயர் பொறுப்புகளில் பணியாற்றி தற்போது சூழல்கள் சார்ந்த சமூகப் பணிகளை தனது துணைவியார் திருமதி லதா மதிவாணன் அவர்களோடு அரும்புகள் அறக்கட்டளை மூலம் தமிழக வனத்துறையுடன் இணைந்து தமிழக முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

நூல் மற்றும் நூலாசிரியர் குறித்து தமிழ்பாலன்…

அன்பு அண்ணன் முனைவர் என் ராஜ்மோகனின் அரிய படைப்பான ‘நெஞ்சொடு கிளத்தல்’ நூல் கூறும் உண்மைகள் ஏராளம்.

தமிழில் ‘சித்த பிரமை’ என்று அழைக்கப்படும் Paracosm என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட, தனது நோய் என்னவென்றே தெரியாமல் கனவுகளில் சஞ்சரித்த ஒரு பெண்ணின் வாழ்வின் அவலங்களையும் அவர் வெற்றி பெற்றதற்கான சூழல்களையும் அவரது மகளின் வாயிலாக சித்தரிக்கும் சிறந்த நாவலாகப் படைத்துள்ளார்.

அன்பு நண்பர் மதிவாணன் அவர்கள் நூல் குறித்த ஆழமான பார்வையை முன்வைத்துள்ளார்.

நாங்கள் இருவரும் அண்ணன் ராஜ்மோகன் அவர்களோடு கல்லூரிக் காலம் தொட்டு நட்பில் இணைந்திருக்கிறோம்.

மனநோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் பலரும் விழிப்புணர்வு இல்லாத சமூகத்தில் வாழ்ந்து கொண்டு வருகின்றனர். இதில், படித்தவர்களும் வசதி படைத்தவர்களும் பாமரர்களும் அடக்கம்.

இதுபோன்ற உளவியல் பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு வழங்குவதற்கான அறிவியல் ஆராய்ச்சிகள் உலக அளவில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Comments (0)
Add Comment