ஆளுமைகளின் அனுபவங்களைச் சொல்லும் நூல்!

நூல் அறிமுகம்:
 
எழுத்தாளர் இரா.நாறும்பூநாதன் எழுதிய ‘யானைச் சொப்பனம்’ நூலில் நாம் நன்கு அறிந்த மனோன்மணியம் சுந்தரனார், அயோத்திதாசர் ஆகியோர் மட்டும் அல்லாமல் வேறு எத்தனையோ ஆளுமைகள் பற்றி அறியத் தந்திருந்தார்.
 
பாளையங்கோட்டையில் கச்சேரி செய்த பாடகர் திருச்சி லோகநாதன் கச்சேரி அன்று பிறந்த தன் மகனுக்கு நகரசபை சேர்மன் பெயரையே (டி.எல்.மகராஜன்) சூட்டிய ஆச்சரியமான செய்தியும் இதில் இடம்பெற்றிருக்கிறது.
 
1952-ல் ஆதீனப் பொறுப்பை ஏற்றதும் ஆதீனங்கள் பல்லக்கில் பட்டினப்பிரவேசம் வரும் வழக்கத்தை தவிர்த்து பல்லக்கை மூலையில் போட வைத்து ஆதீனத்தில் முதல் புரட்சி செய்த தவத்திரு குன்றக்குடி அடிகளார் பற்றி தெளிவாக அறிய முடிகிறது.
 
இந்நூலில் திருநெல்வேலி என்கிற ஊரைப்பற்றி மட்டுமின்றி பாரதியாரின் தந்தை சின்னசாமி ஐயர் எட்டயபுரம் அருகே நிறுவிய நூற்பாலையில் இருந்து, லட்சுமிகாந்தன் கொலை வழக்கு வரை பல்வேறு வித்தியாசமான தலைப்புகளில் நாறும்பூநாதன் எழுதியிருந்தார். 
 
1917-ம் ஆண்டு முதுகலை சட்டப்படிப்பில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவராகத் தேர்ச்சியடைந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிந்து,
 
திருநெல்வேலி நகராட்சி உறுப்பினராகவும் நெல்லையப்பர் கோவில் தர்மகர்த்தாவாகவும் பணிபுரிந்து, இறுதிக் காலத்தில் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டு வீட்டு வாடகை கொடுக்க கூட வழியின்றி வறுமையில் வாடி ஐம்பத்தியாறாவது வயதில் காலமான கா.சு. பிள்ளை பற்றி விளக்கமாக எழுதியிருக்கிறார்.
 
பாளையங்கோட்டை நகரில் பல்வேறு தெருக்களுக்குச் சங்க இலக்கியப் பெயர்களும் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களின் பெயர்களும் சூட்டப்படக் காரணமாக இருந்த தமிழறிஞர் சி.சு.மணி பற்றிய அரிய விஷயங்களை அறிந்து கொள்ள முடிகிறது.
 
பெண்கல்வி இல்லாத காலத்தில் பெண்கள் கல்வி பயில, தனது பள்ளி சக மாணவிகளுடன் சேர்ந்து 300 பவுன் தங்கத்தை வசூலித்து இங்கே அனுப்பி கல்விச்சாலை உருவாக்கிய இங்கிலாந்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுமி சாராள் தக்கர் பற்றி விரிவாகத் தந்துள்ளார்.
 
இந்தியாவின் இரண்டாவது பார்வைத்திறன் குறைந்தோர் பள்ளியை 137 ஆண்டுகளுக்கு முன்பு பாளையங்கோட்டையில் துவங்கிய அனி ஜேன்,
 
“நீண்ட காலம் உயிரோடு இருக்க மாட்டாய். உனது மனைவியிடம் சொல்ல வேண்டாம் என்று சொன்ன டாக்டரும் இறந்து போயிட்டார். எனது மனைவியும் இறந்து போயிட்டாள். நான் மட்டும் இன்னும் இந்த 91 வயது வரையில் இருக்கிறேன்” 
 
பேராசிரியர் டேவிட் பாக்கியமுத்து, பேராசிரியர் சரோஜினி பாக்கியமுத்து தம்பதி, கோவில்பட்டி ஓவியர் ராமலிங்கம், தொல்லியல் ஆய்வாளர் செந்தில் செல்வகுமாரன் என்று ஏராளமான பேரைப் பற்றிய தகவல்கள் கொட்டிக் கிடந்த நூல் தான் யானைச் சொப்பனம்.
 
நூலாக்கம் செய்த காலத்திலேயே சிலரை நேரில் போய்ச் சந்தித்து உரையாடி விட்டு வந்த அனுபவங்களையும் எழுதியிருந்தார்.
 
ஊக்கு, பந்தி சாப்பாடு, பிள்ளையார் எறும்பு, அல்வா, கடம்பூர் போளி, சுருக்குப்பை, வேட்டி, பவுண்டன் பேனா, ஜோல்னா பை இப்படி எந்தத் தலைப்பையும் நாறும்பூநாதன் இந்நூலில் விட்டு வைக்கவில்லை இரா.நாறும்பூநாதன்
 
– நன்றி: முத்துக்குமார் சங்கரன்
 
*****
 
நூல் : யானைச் சொப்பனம்
ஆசிரியர் : நாறும்பூநாதன்
பதிப்பகம் : நூல்வனம்
பக்கங்கள் : 174
விலை : ₹ 120/-
Comments (0)
Add Comment