கேட்பதற்கு சற்று அதிர்ச்சியான சம்பவம்தான். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு பிரபல வார இதழின் முதல் பக்கத்தில் வெளியான ஒரு புகைப்படம்.
அப்போதைய நிலையில் பார்க்கும் வாசகர்களை அதிர வைத்தது. பத்து வயதுக்கு உட்பட்ட சில சிறுவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து, மது அருந்திய நிலையில், கையில் மது பாட்டிலுடன் போஸ் கொடுத்திருந்தார்கள்.
சென்னையில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு அருகே உள்ள ஓரிடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் அது.
அடுத்த பக்கத்தில் இம்மாதிரியான இளம் சிறுவர்கள் மது அருந்துவது பற்றிய கவலை தெரிவிக்கிற ஒரு சிறு கட்டுரையும் வெளியாகி இருந்தது.
இதழ் வெளிவந்ததும் அந்தக் குறிப்பிட்ட புகைப்படத்தில் இடம்பெற்ற சிறுவனின் தந்தை சென்னையில் உள்ள வங்கியில் பணியாற்றி வந்த கடைநிலை ஊழியரான அவர் தன்னுடைய மகன் இந்த நிலையில் கையில் மதுபாட்டிலுடன் இருக்கும் படம் வெளிவந்து ஏற்படுத்திய அதிர்ச்சியில் தற்கொலை செய்து கொண்டார்.
இதற்கடுத்து சிறுவர்கள் மதுவை அருந்துவது எத்தகைய ஒரு விளைவை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கு ஒரு கடுமையான உதாரணத்தைப் போல இருக்கிறது மேலே குறிப்பிட்ட சம்பவம்.
முன்பு அபூர்வமாக காணப்பட்ட இத்தகைய சம்பவங்கள் தற்போது மிகவும் பரவலாக அதிகரித்திருக்கின்றன.
இளைஞர்கள் பால் பேதமற்ற நிலையில், இன்று வெவ்வேறு மதுபானங்களை மிகவும் இயல்பாக அருந்தக்கூடிய நிலையில் இருக்கிறார்கள்.
இதைவிட, பள்ளியில் படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் கூட இத்தகைய மதுவைக் கூட்டாக அருந்துவது வெவ்வேறு வீடியோ பதிவுகளாக வெளிவந்து பார்ப்பவர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
மாணவர்கள், அவருடைய பிறந்தநாளோ அல்லது அவர்கள் குடும்பம் சார்ந்த விழாவோ அல்லது நண்பர்களுடனான கொண்டாட்டமோ எந்த நிகழ்வாக இருந்தாலும் அதில் மதுபானப் பகிர்வு என்பது தற்போது நடைமுறையாகிவிட்டது.
இந்தநிலையில் பள்ளி வகுப்பறையில் கூட மதுவருந்திய நிலையில் மாணவர்கள் வந்து ஆசிரியர்களுடன் தகராறு செய்தது குறித்த செய்திகள் தற்போது அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்.
ஆக, மிக இளம் வயதிலேயே இத்தகைய மது அருந்தும் பழக்கத்திற்கு நமது இளைய தலைமுறையினர் ஆளாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் காணும் எதார்த்தமாக இருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, மிக இளம் வயதிலேயே மதுப் பழக்கத்திற்கு ஆளாகி இளைஞர்களான பலர் பல்வேறு உடல் சார்ந்த பாதிப்புகளுக்குள்ளாகி இருக்கிறார்கள்.
சிலர் கல்லீரல் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையை அணுகி இருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட பழக்கத்திற்கு ஆளாகி, திருமணம் முடித்த இளைஞர்களில் பலர் குழந்தை பெறுவதற்கான சக்தியையும் இழந்த நிலையில் இருக்கிறார்கள் என்பது தமிழகம் முழுவதும் இருக்கிற வெவ்வேறு மருத்துவமனை ரெக்கார்டுகளில் இருந்து தெரிந்துகொள்ள முடியும்.
ஆக, ஒரு பொதுவெளியில் இன்றைக்கு மது அருந்துவது ஒன்றும் சமூகக் குற்றமல்ல, அது நாகரியத்தின் இயல்பான ஒன்று என்ற மனநிலை இன்று உருவாகி இருக்கிறது.
ஆனால், இதன் பின்விளைவாக என்னென்ன நிகழ்வுகள் நடக்கின்றன என்பதைதான் நாம் முன்பு பார்த்தோம்.
தற்போது தமிழகத்தில் ஏறத்தாழ 5,300 மேற்பட்ட மதுபானக் கடைகள் தமிழகம் எங்கும் பரவி இருக்கின்றன.
ஆண்டு ஒன்றுக்கு சுமார் 55,800 கோடி அளவுக்கு விற்பனை மது மூலமாக கிடைத்துக் கொண்டிருக்கிறது.
அதாவது தமிழகத்தில் குறிப்பிட்ட வருமானத்தை ஈட்டக்கூடிய ஒரு திட்டமாக தற்போது டாஸ்மார்க் திட்டம் இருக்கிறது.
இதைத் தவிர தமிழகத்தில் கள்ளக்குறிச்சியிலும், திண்டிவனத்திலும் நடந்த கள்ளச்சாராய சாவுகள் வெளியில் இருக்கும் கள்ளச்சாராய புழக்கத்தையும் வெளிப்படுத்துகின்றன.
இந்த நிகழ்வுகள், எந்த ஆட்சி பொறுப்புக்கு வந்தாலும் அதே நிலையில் நீடித்துக் கொண்டிருக்கிறது என்பதுதான் விசித்திரமாக இருக்கிறது.
அதே சமயத்தில் 2011ல் திமுக அப்போதைய தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைத்த முதல் வாக்குறுதி, தாங்கள் பதவியேற்றதும் முதல் கையெழுத்து மதுவிலக்காகத்தான் இருக்கும் என்பதை வெளிப்படையாக அறிவித்திருந்தது.
ஆனால், அப்போது அதிமுக தான் வெற்றி பெற்றது. அப்போதும் மதுபான விற்பனையை படிப்படியாக குறைப்பதாக அதிமுக தரப்பில் அறிவிக்கப்பட்டது.
அதற்கடுத்து வந்த திமுக அரசு படிப்படியாக மதுக்கடைகளின் எண்ணிக்கையை குறைப்போம் என்கிற அளவில் ஒரு தமிழக அளவில் 500 கடைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இருந்தாலும் திருவிழா காலமாக இருந்தாலும் சரி, தேர்தல் காலமாக இருந்தாலும் சரி டாஸ்மாக்கின் விற்பனை பல மடங்கு உயர்ந்திருப்பதையும் அதை உயர வைக்க நமது அதிகாரிகளே பாடுபட்டிருப்பதையும் நாம் நடைமுறையிலேயே காண முடியும்.
தற்போது தமிழர்களின் உடல் ஆரோக்கியத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் அவர்களுடைய உடல் நலன் மதுவினால் எந்த அளவுக்கு சீரழிந்திருக்கிறது என்பதை எந்த கிராமத்திலும் நகர்புறத்திலும் உள்ள மருத்துவமனைக்கு செல்கிறவர்கள் உணர முடியும்.
குறிப்பாக அரசு மருத்துவமனையிலேயே கல்லீரல் பாதிக்கப்பட்டு அதனால் சிகிச்சை பெற வருகிறவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருப்பதை நேரடியாக உணர முடியும்.
இந்த நிலைக்கு யார் முற்றுப்புள்ளி வைக்கப் போகிறார்கள்?
தமிழர்கள் மேல் உண்மையாகவே அக்கறை இருக்குமானால் தற்போது பரவலாகிக் கொண்டிருக்கிற இந்த மதுபான விற்பனை குறித்து, அடுத்து ஆட்சிப் பொறுப்புக்கு வரும் எந்தக் கட்சியும் மதுவிலக்கு விஷயத்தில், ஒரு உறுதியான முடிவை எடுக்க வேண்டும்.
அண்மையில் ஒரு தொலைக்காட்சியில் வாக்காளப் பெருமக்களிடம் கேட்கப்பட்ட எதிர்பார்ப்புகளில் ஒன்றாக மதுவிலக்கும் ஆயிருக்கிறது.
எப்போது மதுவிலக்கை அமல்படுத்தி நம் இளைய தலைமுறையினரை, அவர்களுடைய எதிர்காலம் சிதைந்து வரக்கூடியச் சூழலில் இருந்து அவர்களை விடுவிப்பார்கள் என்கின்ற கவலையுடன் பெற்றோர்கள் பரிதவித்துப் பேசுவதைப் பார்க்க முடிகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று வாக்களிக்க இருக்கும் தமிழக வாக்காளப் பெருமக்கள் சார்பிலான ஒரு வேண்டுகோள்தான் மதுவிலக்கு படிப்படியாக குறைக்கப்பட வேண்டும் என்பது.
இந்த வேண்டுகோளை எந்தக் கட்சி உரிய பரிவுடன் பரிசீலித்து, அதை நடைமுறைப்படுத்தும் என்பதுதான் அனைவரும் எதிர்பார்க்கிற,
‘குடி குடியைக் கெடுக்கும்’ என்கின்ற லேபிளுடன் ஒட்டப்பட்டிருக்கிற அந்த வாசகத்தின் அர்த்தத்தை சரியாக உணர்ந்து கொண்டவர்களின் செயலாக இருக்கும்.
– யூகி