நூல் அறிமுகம்:
எத்தனையோ சிறந்த பின்னணிப் பாடகர்களை, பாடகிகளைத் தமிழ் சினிமா கண்டிருக்கிறது.
ஆனால், இசை அரசி என்று கொண்டாடப்படும் ‘புலபாக சுசீலா’ என்கிற பத்மபூஷன் பி. சுசீலாவின் சாதனையை இனிவரும் தலைமுறையில்கூட யாரும் முறியடிக்க வாய்ப்பில்லை.
ஏனென்றால் உலக அளவில் 17,965 பாடல்களைப் பாடிய ஒரே பாடகி என கின்னஸ் உலக சாதனை நிறுவனம் சான்று அளித்திருக்கிறது!
அது மட்டுமல்ல; இந்திய மொழிகளில் அதிகமாகப் பாடிய வரலாற்றுச் சாதனைக்காக ‘ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ சான்று அளித்திருக்கிறது.
இந்தச் சாதனையை அவர் ஒரே நாளில் நிகழ்த்திக் காட்டிவிடவில்லை. தேனில் குழைத்த இனிய குரல், இளமையில் இசைக் கல்லூரியில் முறையான பயிற்சி, பதின்ம வயதில் சென்னை வானொலியில் கிடைத்த முதல் வாய்ப்பு,
திரையிசையின் மீது அவருக்கு இருந்த ஆத்மார்த்த ஈடுபாடு, ஜி.ராமநாதன் LOITSET முதல் திரைப்பாடல் வாய்ப்பைப் பெற்று வெளிச்சம் பெற்றதும், தொடர்ந்து கிடைத்த வாய்ப்புகளில் பெயர் பெற வேண்டி இட்ட இடையறாத உழைப்பு,
எல்லாப் பாடல்களையும் சிறப்பாகப் பாடிவிட வேண்டும் என்கிற முழு ஈடுபாடு என பாட்டுலகில் காட்டிய திறமும் அர்ப்பணிப்பும்தான் அவரை இந்த அளவுக்கு உயர்த்தி இருக்கின்றன.
அவரது இசைப் பயணத்துடன் அவரது தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தையும் இணைத்து தனக்கே உரிய சுவாரசியமான மொழியில் பதிவுசெய்திருக்கிறார் திரையிசை விமர்சகர் பி.ஜி.எஸ். மணியன்.
ஏற்கெனவே ‘திரையிசை மும்மூர்த்திகள்’, ‘திரையிசைத் திலகம் கே.வி.மகாதேவன்’ ஆகிய இரண்டு வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதிப் பாராட்டுப் பெற்றவர். திரை நட்சத்திரங்களுக்குச் சற்றும் குறையாத புகழுடையவர்கள் இசையமைப்பாளர்களும் பாடகர்களும்.
அப்படிப் பட்டவர்களின் வாழ்க்கை வரலாறுகள் முறையாக எழுதப்படாத நிலையில், அந்தக் குறையை பி.ஜி.எஸ்.மணியனின் எழுத்துகள் போக்கிவருகின்றன.
சுசீலாவின் புகழ்பெற்ற பாடல்களை அவர் பாடிய அனுபவங்களின் கதையாகவும் இந்தப் பெரிய புத்தகம் நமக்குக் காட்டுகிறது.
பன்முகக் கலைஞர் சிவகுமார், எழுத்தாளர் ராஜேஷ்குமார், இயக்குநர் விக்ரமன், இசையமைப்பாளர்கள் சிற்பி, அமுத பாரதி, ரமேஷ் விநாயகம் உள்படப் பல முக்கியக் கலைஞர்களின் அணிந்துரைகள் இந்நூலுக்குச் சிறப்பு சேர்த்திருக்கின்றன.
*************
நூல்: இசையரசி பி.சுசீலா: ஒரு சகாப்தத்தின் இன்னிசைப் பயணம்
ஆசிரியர்: பி.ஜி.எஸ்.மணியன்
வைகுந்த் பதிப்பகம்
நாகர்கோவில் – 629002
பக்கங்கள்: 450
விலை: ரூபாய். 450/-
தொடர்புக்கு: 94420 77268