நிகோபார் திட்டம்: அழித்தொழிப்பு வேலையின் ஆரம்பம்!

நூல் அறிமுகம் :

* “அந்தமானைப் பாருங்கள் அழகு…” என்ற அருமையான பாடல் வரிகள் 80களில் நமது காதில் இனிமையாக ஒலித்தது!

இன்றோ, காலம் உருண்டோடிய பின்னர் “அந்தமானைப் பாருங்கள் அழுகிறது” என்று சொல்லும்படி ஒரு மாபெரும் அழித்தொழிப்பு வேலையின் ஆரவாரம் கேட்கின்றது!

* அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தின் பெரிய தீவான கிரேட் நிக்கோபார் (Great Nicobar) தீவில் ஒன்றிய அரசு மெகா திட்டம் ஒன்றை ரூபாய் ஒரு லட்சம் கோடி மதிப்பில் நிறைவேற்றத் துடிக்கின்றது.

தீவின் பல்லுயிர் வளங்களை அழித்து, சிதைத்து, இடம் பெயர்த்து எப்படியாவது அந்த திட்டத்தை கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பில் செயலாற்றுகின்றது.

* அந்த மெகா திட்டம் பற்றியும் அதன் பாதகங்கள் பற்றியும் தெளிவான தகவல்களைத் தருகின்ற, பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கட்டுரைகளைத் தொகுத்து வெளிவந்த ஆங்கில நூல் – The Great Nicobar Betrayal.

அதன் தமிழாக்கம் தான் – நிகோபார் பெருவஞ்சனை என்ற இந்த படைப்பு !

* ஆங்கில தொகுப்பின் ஆசிரியர் முனைவர் பங்கஜ் சேக்சாரியா (Pangaj Sekhsaria).

புகழ்பெற்ற இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலர், ஆராய்ச்சியாளர், கல்வியாளர், பத்திரிக்கையாளர்.

தற்போது அவர் மும்பையிலுள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT, Mumbai) இணைப் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.

* இந்த நூலை தமிழாக்கம் செய்தவர் பேராசிரியர் த. முருகவேள். இவர் ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், பறவைகள் ஆராய்ச்சியாளர்.

தற்போது சென்னையிலுள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றுகின்றார்.

அவரது எளிமையான தமிழ்நடை இந்த நூலை அனைவரும் படித்துப் பயனடைய உதவுகின்றது.

* அந்தமான் நிக்கோபார் தீவுக் கூட்டத்தில் ஏறத்தாழ 350க்கும் அதிக எண்ணிக்கையில் தீவுகள் பரவிக்கிடக்கின்றன. அவற்றில் 35தீவுகளில் மட்டுமே மக்கள் வசிக்கின்றார்கள். மொத்த தீவுகளின் பரப்பளவு 8249 ச.கிமீ (Sq.km)ஆகும்.

* இவற்றில் கிரேட் நிக்கோபார் தீவின் பரப்பளவு மட்டும் 910 ச.கிமீ. மொத்த தீவுகளும் வெப்ப மண்டல மழைக் காடுகளையும் (Tropical Rain Forests) வியக்கத்தக்க பல உயிரினங்களையும் கொண்ட கிரேட் நிக்கோபார் உயிர்க்கோளப் பாதுகாப்பு பகுதியாக (Great Nicobar Biosphere Reserve – GNBR) இருந்து வருகின்றது.

* இயற்கை வளங்களின் அழிவின் மேல் எழுப்பப்படும் வளர்ச்சி பற்றியும் அவை ஏற்படுத்தப் போகும் பேரழிவு பற்றியும் அதை நிறைவேற்ற நடத்தப்படும் ‘பெருவஞ்சனை’ (Betrayal) பற்றியும் இந்த நூலில் உள்ள தகவலின் அடிப்படையிலும் எனது சொந்த அனுபவத்தின் படியும் இந்த அறிமுகவுரை உங்களுக்காக :

* திட்டத்தின் பெயர் :
பெரிய நிக்கோபார் தீவின் முழுமையான வளர்ச்சித் திட்டம் (Great Nicobar Island Development Project – GNIDP) 2021.
திட்ட உருவாக்கம் : நிதி ஆயோக் (NITI Aayog)
திட்ட மதிப்பு: ரூ 72,000 கோடி – 2021 மதிப்பில்.
ரூ 1,00,000 கோடி – 2026 மதிப்பில்.
மொத்த பரப்பளவு : 166 ச. கிமீ.

* திட்டம் நிறைவேற்றப்படும் இடம் : இந்திரா பாயிண்ட் (தெற்கு முனை) முதல் தென் கிழக்கிலுள்ள கலாத்தியா வளைகுடா வரை, மற்றும் அதன் மேற்குப் பகுதியை உள்ளடக்கியது.

திட்டம் நிறைவேற 25 முதல் 30 ஆண்டுகள் பிடிக்கும்.

* திட்டத்தில் அடங்கியுள்ள முதன்மையான வேலைகள் :
1) கலாத்தியா வளைகுடா (Galatheya Bay) பகுதியில் மிகப் பெரிய சரக்கு போக்குவரத்து கண்டெய்னர் துறைமுகம் ரூ 45,000 கோடி மதிப்பில்.

2) ஒரு பன்னாட்டு விமான நிலையம் (International Airport) 4கி.மீ நீள ரன்வே கொண்டது.

3) ஒரு கேஸ் மற்றும் சூரிய சக்தி மின்நிலையம் (450 MVA)

4) மொத்தமாக ஒதுக்கப்பட்ட 160 ச. கிமீ பரப்பளவிலிருந்து 130ச.கிமீ பரப்பளவில் புதிதாக அமைக்கப்படும் ஒரு பெரிய நகரம்.

5) தற்போதைய மக்கள் தொகை 8000லிருந்து 30 ஆண்டுகளில் 3,50,000 மக்களை கொண்ட நகரத்திற்கான கட்டமைப்புகள் கொண்டது..

* திட்டத்தால் ஒதுக்கப்பட்ட 160 ச. கிமீ பரப்பளவு நிலத்தில் தற்போது இருக்கும் மரங்கள் ஏறத்தாழ 18,65,000. இவைகளில் 10,00,000 (ஒரு மில்லியன்) மரங்களை வெட்டி அப்புறப்படுத்த வேண்டியுள்ளது.

இந்த மரங்கள் குறைந்தது 100 ஆண்டுகள் வயதுடையதும் 100 முதல் 125 அடி உயரமானதும் ஆகும்.. இந்த மரங்களை வெட்டி வீழ்த்தி அப்புறப்படுத்துவதற்கே பல ஆண்டுகள் ஆகலாம்.

* திட்டத்தின்படி 160 ச. கிமீ பரப்பளவில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டிப் பொட்டல் காடாக ஆக்கி விட்டால் – அந்தப் பகுதி இன்றைய மதுரை மாநகராட்சி பகுதியை மொத்தமாக அழித்து விட்டால் (148 ச.கிமீ) எப்படி ஒரு கோர காட்சி போல தோன்றுமோ அதை விட பெரிய பரப்பளவை கொண்ட பகுதியாக, போர்க்களமாக காட்சி அளிக்கும்!

* இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் – நிக்கோபாரில் வெட்டப்படும் ஒரு மில்லியன் மரங்களுக்கு ஈடாக – நிக்கோபாரிலிருந்து 3500 கி.மீ தூரத்தில் உள்ள ஹரியானா மாநிலத்தில் மரங்களை நட்டு, காடுகளை உருவாக்குவார்களாம்..

அதாவது கால் விரலில் அடிபட்டதற்கு நெற்றியில் தைலம் தடவி குணப்படுத்துவது போல!

* கிரேட் நிக்கோபார் தீவின் முழுமையான வளர்ச்சித் திட்டம் கடந்த 22.11.2021ல் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்டது.

திட்டத்தின் பாதகங்கள் பற்றி சூழலியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், மானுடவியலாளர்கள் மற்றும் பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டார்கள்.

ஆனால், திட்டத்திற்கு தேவையான எல்லா சுற்றுச்சூழல் சான்றிதழ்களும் தடையில்லாமல் வெகு விரைவாக வழங்கப்பட்டது.

* எல்லாவற்றிற்கும் மேலாக இவ்விஷயம் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal) வசம் சென்றது. அவர்களின் தீர்ப்பு என்ன தெரியுமா?

” இந்த தீவுகள் காற்று மாசுபாடு, காலநிலை மாற்றத்தை எதிர் கொள்வதில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தவை என்றாலும் வளர்ச்சியை முழுமையாகப் புறக்கணிக்க முடியாது.

ஆகவே திட்டத்திற்கான சுற்றுச்சூழல் அனுமதி வழங்கப்பட்ட விஷயத்தில் தலையிடப் போவதில்லை எனக்கூறி கை கழுவி விட்டது!

* எப்படி எடுத்து விளக்கினாலும் விளங்கிக் கொள்ளாத, விளங்க மறுக்கும் நிறுவனத்தை ‘பசுமைத் தீர்ப்பாயம்‘ என்பதற்குப் பதிலாக ‘ எருமைத் தீர்ப்பாயம்’ (Thick skin) என்று அழைக்கலாம் போல..!

* டிசம்பர் 26ம் நாள் 2004ம் ஆண்டு 9.2 ரிக்டர் அளவில் சுமத்திரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனால் உண்டான சுனாமியும் முதன் முதலில் தாக்கிய பகுதி கிரேட் நிக்கோபார் தீவின் தெற்குப் பகுதி.

அதன் காரணமாக கடற்கரைப் பகுதி 4.5மீ அளவுக்கு கடல் மட்டத்திற்கு கீழே சென்று விட்டது.

* அன்று கரைப்பகுதியில் கம்பீரமாக நின்ற இந்திரா பாயிண்ட் கலங்கரை விளக்கம் தற்போது கடல் சூழ்ந்த தண்ணீரில் அநாதையாக நிற்கிறது.

சுனாமியால் நிக்கோபார் தீவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் மாண்டு போனார்கள்.

அப்படிப்பட்ட பகுதியில் தான் வர உள்ளது நிக்கோபார் மெகா திட்டம் ..!

* குறிப்பாக பாதிப்புக்குள்ளாகும் பழங்குடிக் குழு (Particularly Vulnerable Tribal Group – PVTG) வகையைச் சேர்ந்த ஷோம்பென் (Shompen) மற்றும் நிக்கோபாரி (Nicobares) மக்களின் வாழ்விடம் இந்த தீவு.

* மங்கோலிய இனத்தைச் சேர்ந்த ஷோம்பென் பழங்குடி மக்கள் இந்த தீவில் மட்டுமே பல நூறாண்டுகளாக வசித்து வருகின்றார்கள்.

தற்போது அவர்கள் ஏறத்தாழ 245 பேர் இருப்பதாக தகவல். நாடோடியாகவும் வேட்டையாடுபவர்களாக மட்டுமே வாழ்கிறார்கள். அவர்களது மொழி, வாழ்க்கை முறை பற்றி இதுவரை சரியான தகவல் இல்லை.

சுனாமி அழிவின்போது அடர்ந்த காட்டுப் பகுதியின் உள்ளே இருந்ததால் தப்பித்தார்கள்.!

* நாகரிக வாழ்க்கைப் பாதையை நோக்கி தொடர்ந்து முன்னேறி வரும் இனம் நிக்கோபாரி. தற்போது ஏறத்தாழ 1000 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.

இவர்கள் வாழ்ந்த கலாத்தியா பகுதிகள், மேற்கு கடற்கரை பகுதிகள் சுனாமியில் பெரும் பாதிப்பை கண்டன. சுனாமி பேரலை நிறைய நிக்கோபாரி உயிர்களையும் பறித்தது!

அந்தப் பேரழிவு நிகழ்ந்த இடத்தில் தான் மெகா திட்டத்தின் துறைமுகம் கட்டப்பட உள்ளதாம்!

மீண்டும் ஒரு சுனாமி வந்தால் மெகா திட்டமிட்ட தில்லி பாதுஷாக்கள் பாதுகாப்பாக தப்பி விடுவார்கள் !

இதுவும் பெருவஞ்சனை தான் !

* கலாத்தியா வளைகுடா (Galathea Bay) பகுதியில் தான் சரக்கு கப்பல் துறைமுகம் கட்டப்பட உள்ளது.

இதே பகுதியில் தான் தோணி கடல் ஆமைகள் (Leather Back Sea Turtles) டிசம்பர் குளிர் மாதங்களில் முட்டையிடுவதற்கு 10 – 15 ஆயிரம் கி.மீ தொலைவிலுள்ள இந்தோனேசியா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளிலிருந்து நீந்தி இங்கு வருகின்றன.

* தோணி கடல் ஆமைகள் 5 – 6 அடி நீளமும் 500 முதல் 900 கிலோ வரை எடையும் கொண்டவை. இவைகள் 50 முதல் 100 ஆண்டுகள் உயிர் வாழ்பவை.

மில்லியன் ஆண்டுகளாக இதுபோன்ற கடல் பயணத்தை மேற்கொண்டு, நிக்கோபார் கடற்கரை மணலில் முட்டையிட்டு பின்னர் மணலால் அவற்றை மூடி விட்டு மீண்டும் கடலுக்குள் சென்று விடும்.

* கடல் மணல் சூட்டில் 60 நாட்களில் பொறிக்கப்பட்டு ஆமைக் குஞ்சுகள் வெளியே வரும். பின்னர் கடல் அலைகளால் இழுக்கப்பட்டு அவைகள் கடலுக்குள் சென்று விடும். இப்படிப்பட்ட மில்லியன் ஆண்டு பழமையான அரிய உயிரினத்திற்கு இனி இங்கே இடமில்லாமல் போகும்.!

* இந்த தீவின் மற்றுமொரு அபூர்வ பறவை – நிக்கோபார் மெகாபாட் (Nicobar Megapode).

இது அந்தமான் நிக்கோபார் தீவுகளின் மாநிலப் பறவை.

இந்தப் பறவைகள் நிலத்தில் முட்டையிட்டு அவற்றை உலர்ந்த இலைகளால் ஒரு சிறிய மேடு போல மூடிவிடும்.

அடைகாக்காமல் இலை குவிப்பைக் குறைத்தும் கூட்டியும் ஒரு இன்குபேட்டர் போல அதை இயக்கி, வெப்ப நிலையை சீராக வைத்து குஞ்சுகளை பொறிக்க வைக்கும். இந்த நிலப்பறவையை உயிரியலாளர்கள் தெர்மாமீட்டர் பறவை என்று அழைக்கிறார்கள்.

இனி அரிய இனமான மெகாபாட் பறவைகள் இந்த திட்டத்தின் மெகாவாட் சூட்டில் சாம்பலாகிப் போய் விடும்!

* இவை மட்டுமா…?
இன்னும் பல அரியவகை உயிரினங்களின் இருப்பிடம் இந்த தீவுகள் தான்.
நிக்கோபார் நீண்ட வால் மந்தி (Nicobar Long tailed Macaque)
நிக்கோபார் நீண்ட வால் கிளி (Nicobar Long tailed Parakeet ) இப்படிப் பல…

* 2004ம் ஆண்டு சுனாமி பேரலைகளால் இந்த தீவுகள் பெரிதும் பாதிக்கப்பட்டன.

அன்றைய ஒன்றிய அரசு எங்களது மத்திய பொதுப்பணித் துறைக்கு (CPWD) மறுசீரமைப்பு வேலைகளை (Tsunami Reconstruction Project) செய்வதற்கான பொறுப்பை வழங்கியது.

* எங்கள் பொறியாளர்களோடு நானும் கிரேட் நிக்கோபார் தீவின் கேம்பல் பே (Campbell Bay) தலைமையிடத்திற்கு மாற்றலாகி வந்து ஏறத்தாழ 18 மாதங்கள் (2009 – 10) அங்கு தங்கியிருந்து பணியாற்றும் வாய்ப்பை பெற்றேன்..

* அந்த பணிக் காலத்தில் நிகோபாரிகளின் மறுவாழ்வு இடமான அஃப்ரா பே, கொண்டூல் தீவு, லிட்டில் நிக்கோபார் தீவு, கலாத்தியா ஆற்றுப்படுகை, GNBR காட்டுப் பகுதிகள், இந்திரா பாயிண்ட் ஆகிய இடங்களுக்கு பலமுறை சென்று வரும் வாய்ப்பையும் பெற்றேன்.

* ஒரு முறை ஷோம்பென் பழங்குடி இளைஞர்களை காட்டிற்குள் சந்தித்து ஒரு சில மணித்துளிகள் செலவிட்ட அனுபவம் இப்போதும் நினைவுக்கு வருகின்றது.

* அஃப்ரா வளைகுடா (Afra Bay) பகுதியில் நடைபெற்ற வேலைகள் எனது பொறுப்பில் இருந்ததால் அங்கு வசித்த நிக்கோபாரி பழங்குடி மக்களை தொடர்ந்து சந்தித்து உரையாடும் வாய்ப்பை பெற்றதால் – சுனாமி பேரலை பற்றியும், அதனால் பலியான உயிர்கள் பற்றியும் ஏற்பட்ட சேதங்கள் பற்றியும் நேரடியாக கேட்டுத் தெரிந்து கொள்ளும் அரிய வாய்ப்பையும் பெற்றேன்!

* அதன் காரணமாகவே இதை ஒரு நூல் அறிமுகவுரையாக மட்டும் தயாரிக்காமல் எனது சொந்த அனுபவங்களிலிருந்து அறிந்ததையும் இணைத்து வழங்கியுள்ளேன். இதை எனது கடமையாக கருதுகின்றேன்.

* நூலின் மூல ஆசிரியர் பங்கஜ் சேக்சாரியா அவர்கட்கும், தமிழாக்கம் செய்த பேராசிரியர் த. முருகவேள் அவர்கட்கும் எனது நன்றியையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்..!

பொ. நாகராஜன்

*******************

நூல் அறிமுகம்: நிகோபார் பெருவஞ்சனை
தொகுப்பாளர்: பங்கஜ் சேக்சாரியா 
தமிழில்: பேராசிரியர் த. முருகவேள் 
உயிர் பதிப்பகம்
முதல் பதிப்பு: 2026 
பக்கங்கள்: 212 
விலை: ரூ. 240/-

 
Comments (0)
Add Comment