பெண்ணியச் சிந்தனைகள் செயல்படுவதற்கான விதை!

பெரியார் கூறிய பெண்ணியம் குறித்த விமர்சனங்கள் பொது வெளியில்  குறிப்பாக மகளிரிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது என்பது குறித்த வரலாற்றுக் குறிப்புகள் ஏராளம் உண்டு.

பெண்ணியம் பற்றிக் கூறிய சில கருத்துக்களை முரண்படுபவர்கள், அவர் கூறிய காலத்தையும் அப்போது பெண்களில் இருந்த சூழலையும் நினைவில் கொண்டு, அவரது கருத்துக்களைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக பெண்களுக்கு பிள்ளை பைத்தியம் இருக்கக் கூடாது என்று அவர் கூறியதின் காரணத்தை உற்றுநோக்க வேண்டும்.

அந்தக் காலச் சூழலில் ஒவ்வொரு பெண்ணும் குறைந்தது ஒரு டஜன்  குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் எந்திரமாகத்தான் சமூகத்தில வைக்கப்பட்டிருந்தனர்.

பிரசவத்தில் மனைவி இறந்து விட்டால் இன்னொரு பெண்ணை திருமணம் செய்து, அதற்கு ஒரு டஜன் குழந்தைகளை அள்ளிக் கொடுப்பது ஆணாதிக்க சமூகத்தின் அகங்கார மனநிலை என்பதைப் புரிந்து கொண்டபடியால் பெரியாரின் கூற்று அவ்வாறு அமைந்திருந்தது.

ஒரு பெண்ணிற்கு குழந்தை பிறக்காவிட்டால் அந்தப் பெண்ணை வசைப்பாடி அவருக்கு மலடி என்று பட்டம் சூட்டி, அந்தப் பெண்ணின் தங்கையையோ அல்லது வேறு உறவுக்கார பெண்ணையோ மணம் செய்து வைத்து,

அவரை  வெறும் பிள்ளை பெறும் மற்றொரு எந்திரமாக இந்த சமூகத்தின் ஆணாதிக்க மனநிலை உருவாக்கியிருந்தது.

இதைப் பெரும்பாலான முதிர்ந்த பெண்களும் ஏற்றுக் கொண்டிருந்தது சமூகத்தின் அவலம்.

படிக்காத பெண்களை மடைமாற்றம் செய்வதற்கு உளவியல் ரீதியாக “புல்லானாலும் புருஷன்” என்று முட்டாள்தனமாக அவர்களை நம்ப வைத்து, அதற்காக சத்தியவான் சாவித்திரி, போன்ற பல்வேறு கதைகளைக் கூறி, பெண்களைச் சுரண்டியே வாழ்ந்த ஆணாதிக்க சமூகத்தில்,

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் பெண் விடுதலைக்காகப் போராடிய பெரும் தலைவர் தந்தை பெரியார் என்பது பெண்கள் ஓரளவு புரிந்து கொண்டிருக்கிறார்கள். 

குறிப்பாக வைதீக மரபுகளை மூலக்கூறாகக் கொண்ட சனாதனக் கருத்தியல், ‘பெண்கள் படிக்க கூடாது  அவர்கள் சமையல் வேலை செய்யவும், இல்லத்தைப் பராமரிக்கும் பணிகளைச் செய்வதற்கும்,

பிள்ளை பெற்றுத்  தருவதற்கான சாதனமாக இருக்க வேண்டும் என்பது இயற்கை நியதி’ என்று கடவுளின் பெயராலும் சாஸ்திரத்தின் பெயராலும் சமூகம் ஏற்றுக்கொள்ளும் கட்டமைப்பை மதம் என்ற நிறுவனத்தின் மூலம் ஆழமாக நிறுவியிருந்தார்கள்.

அதனடிப்படையில் அரசர்கள் காலத்திலும், அதற்குப் பின்பும் உடன்கட்டை ஏறும் வழக்கம் சமூகத்தில் இயல்பாக இருந்தது.

ஆங்கிலேயரின் ஆட்சிக் காலத்தில் சமூக சீர்திருத்தவாதிகளின் தொடர் அழுத்தம் காரணமாக அவை சமூகத்தில் இருந்து முற்றிலும் நீக்கப்பட்டது.

எனினும் அதன் மிச்ச சொச்சங்கள் ஆங்காங்கே பல வட மாநிலங்களில் இருந்து வந்தது.

தற்போது அது ஒழிக்கப்பட்டு விட்டது.

பெண்களாகப் பிறந்தது தங்களது கர்மவினை என்று முட்டாள்தனமாக அவர்களை நம்ப வைத்து, கணவனே கண்கண்ட தெய்வம் என்ற மாயையில் பெண்களின்  பெரும்பாலோர் வாழ்ந்து மடிந்துள்ளார்கள்.

அறிவியலின் உயிரியல் கோட்பாட்டில் பெண்களால் தான் கருத்தரிக்க முடியும் என்பதை பெரியார் அறிந்திருந்தாலும் கூட, அவர்கள் வெறும் பிள்ளை பெறுகின்ற கருவியாக மாற்றிவிடக்கூடாது என்பதால் பெண்களின் உரிமைக்கான  போராட்டம் அவசியம் என்ற கருத்தியலை நிறுவியது மாபெரும் புரட்சிகர சிந்தனை. 

எவ்வளவோ தேசியவாதிகளும் புரட்சிக்காரர்களும் வாழ்ந்ததாக கூறப்படும் இந்திய சமூக நிலப்பரப்பில் விடுதலைக்கு முன்பு சமூக விடுதலைக்காக குறிப்பாக, பெண் விடுதலைக்காகப் போராடிய தலைவரின் பண்பினைப் போற்றிப் பெண்களால் அவருக்கு பெரியார் என்ற பட்டம் அளிக்கப்பட்டது என்பதை வரலாற்றில் என்றும் அழியாத நினைவுத்தடங்கள். 

பெண்களுக்கு எதிராக இன்றுவரை பெருகிவரும் பாலியல் குற்றங்கள் பெண் விடுதலை என்பது முழுமையாக நிகழ்ந்துவிடவில்லை என்பதற்கான எடுத்துக்காட்டு. 

கடவுளின் பெயரால் பெண்களை ‘தேவி’, ‘அம்மன்’, ‘காளி’  என்று  வழிபடும் அதே சமூகம், ஆணாதிக்க மனப்பான்மையில்,

இன்று வரை பெண்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதின் ஆழத்தில் புதைத்துக் கொண்டு வலம் வரும் ஆண்கள் அதிகமாக உள்ள முரண்பட்ட சமூக அமைப்பு இது என்றால் மிகையாகது.

இவற்றில் சில விதிவிலக்குகள் இருக்கலாம். பெண்களின் சிலர் குரூர மனம் படைத்தவர்களாக இருக்கலாம். 

பொதுச் சமூகத்திற்கான மாதிரி என்பது அவர்கள் அல்ல. பெரும்பான்மையாக சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளில் பெண்களின் நிலை இவ்வளவு முன்னேற்றத்திற்கு பிறகும் ஆண்களுக்கு இணையாக இல்லை என்பது தான் சமூக எதார்த்தம்.

33 சதவீதம் ஜனநாயகத்தில் பெண்களுக்கான அதிகாரப் பங்கீடு என்பதை இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடைமுறையில் நிறைவேற்றவில்லை.

இன்னும் அதன் கொள்கை அளவிலேயே இருந்து வருகிறது.

இன்றைய சூழலில் பெண் விடுதலை குறித்து பெண்களை விடவும் முற்போக்கு எண்ணம் உள்ள ஆண்களும் இளைஞர்களும் இதற்கான களத்தில் போராட வேண்டும். 

குறிப்பாக ஜனநாயத்தில் பெண்களின் பங்கு இன்னும் அதிகமாக இருக்க வேண்டும். 

பெண்களுக்கு சம உரிமை கொடுத்தது போல தேர்தலில் ஆண்களுக்கு இணையாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளித்ததாக வெற்றிபெற வாய்ப்பு இல்லாத சில கட்சிகள் விளம்பரம் தேடிக் கொள்கிறது.

திராவிடக் கருத்தியலை அடிப்படையாகக் கொண்டுள்ள திராவிட முன்னேற்றக் கழகம் பெண்களுக்கான உரிமை மற்றும் அவர்களுக்கான ஜனநாயக பங்களிப்பில் கணிசமான பங்களித்திருக்கிறது என்றாலும் அது முழுமையானது அல்ல.

குறிப்பாக பெண்களுக்கான உரிமைத் தொகை, பெண் கல்விக்கான உதவி, பெண்களுக்கான சுய உதவி குழுக்கள், மகளிர் மேம்பாட்டு மய்யம்,

உள்ளாட்சிகளில் உள்ள பதவிகளில்  மகளிர்க்கான இட ஒதுக்கீடு போன்ற பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்கள் என்பது வரவேற்கத்தக்கது.

பெரியாரின் கனவான பெண் விடுதலை  என்ற உறுதியான கருத்தியல் வலியுறுத்துவதில் முதன்மையாக அரசியல் மற்றும் அதிகாரத்தில் எல்லா மட்டங்களிலும் பெண்களுக்கு சமமான உரிமை வேண்டும் என்பது நிறைவேற வேண்டும் என்பதே ஆகும்.

பல நாடுகளில் சட்டரீதியான பாதுகாப்பு, சம உரிமை போன்றவற்றில் ஏற்றத் தாழ்வுகள் நிறைந்துள்ளது என்பதைத் தொடர் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ள ஐ.நா.விற்கான பெண்கள் அமைப்பு,

உரிமை, நீதி, செயல்பாடு என்பது அனைத்துத் தரப்பு பெண்களுக்காக எல்லா நாடுகளிலும் அதற்கான சட்டத்திற்கான வடிவம்,

அவற்றை அமல்படுத்துவதற்கான நடைமுறைகளும் உருவானால் மட்டுமே பெண்களுக்கான பாதுகாப்பும் சம நீதியும் நிலைபெறும் என்பதை முன்னெடுப்பதற்கு பல்வேறு திட்டங்களை முன் வைத்திருக்கிறார்கள்.

இந்த ஆண்டு மகளிர் தினத்தில் அவற்றை முன் நிறுத்தி பல்வேறு நிகழ்வுகளை உலகம் முழுவதும் நிகழ்த்த உள்ளார்கள்.

அதற்கான குறிப்புகள் ஐ.நா.வின் பெண்கள் அமைப்பிற்கான வலைத்தளத்தில் இடம்பெற்றுள்ளது.

இன்றைய தலைமுறை மகளிர்கள்  பெரியாரின் பெண்ணிய சிந்தனைகளைத் தொடர் வாசிப்பு மூலம் புரிந்துகொள்ள வேண்டும். 

அதுவே பெரியாரின் பெண்ணிய சிந்தனைகள் முழுமையாக செயல்படு வதற்கான விதையாகும்.

– தமிழ் பாலன்

மகளி தினம் பெரியார் பெண் பெண்ணியம்
Comments (0)
Add Comment