நாட்குறிப்பு மூலம் வரலாற்றைப் பதிவு செய்தவரும் பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியின் மொழிபெயர்ப்பாளருமான ஆனந்தரங்கம் பிள்ளை (Ananda Ranga Pillai) பன்மொழிப் புலமை படைத்தவர். இந்திய மன்னர்கள் பிரெஞ்சுக்காரர்கள் இடையே பாலமாக விளங்கினார்.
முசபர்சங் என்ற மன்னர் இவருக்கு 3 ஆயிரம் குதிரைகளை வழங்கி, மன்சுபேதார் பட்டத்தையும் வழங்கினார். செங்கல்பட்டு கோட்டைக்குத் தளபதியாக, ஜாகீர்தாராகவும் நியமிக்கப்பட்டார்.
ஏறக்குறைய 25 ஆண்டுகாலம் நாட்குறிப்பு எழுதியுள்ளார். 18-ம் நூற்றாண்டின் சமூக மாற்றங்கள், அரசியல் நிகழ்வுகள், பிரெஞ்சுப் படையின் வெற்றி, தோல்விகள், டெல்லி மீதான பாரசீகப் படையெடுப்பு,
குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட கடும் தண்டனைகள், கடல் வணிகம், இந்தியா வந்த வெளிநாட்டுப் பயணிகள் விவரம் உட்பட பல நிகழ்வுகளின் முக்கிய வரலாற்றுப் பதிவாக இவரது நாட்குறிப்பு திகழ்கிறது.
மன்னர்களின் குணங்கள், ஆங்கிலேயரின் போக்கு, மக்கள் பட்ட அவதி, வெளிநாட்டினர் அடித்த கொள்ளை, புதுச்சேரி, ஆற்காடு, வந்தவாசி, தஞ்சாவூர், திருச்சி, ஹைதராபாத், டெல்லியில் நடந்த சம்பவங்கள், போர்த் தந்திரங்கள், நீதியுரைகள், ஜோதிடக் குறிப்புகள்கூட நாட்குறிப்பில் இடம்பெற்றுள்ளன.
பாலமாய்த் திகழ்ந்தால் பல விதங்களில் பயன் உண்டு
இந்திய மன்னர்கள் மற்றும் பிரெஞ்சு மேலதிகாரிகள் ஆகியோருக்கிடையே தனது மொழிப் புலமையால் ஒரு பாலமாக விளங்கினார்.
இதன் காரணமாக செங்கல்பட்டுக் கோட்டைக்குத் தளபதியாக நியமிக்கப்பட்டார். முசாபர்சங் என்ற மன்னர் இவருக்கு ஆயிரக்கணக்கில் குதிரைகளை வழங்கினாராம்.
சிறப்பான குறிப்பேடுகள் வரலாறுப் பக்கங்களில் மதிப்பை கூட்டும்
தினசரி நாட்டு நடப்புகளை எழுதி வைக்கும் பழக்கம் கொண்டவர் ஆனந்தரங்கம் பிள்ளை. ஒன்றிரண்டல்ல, சுமார் 25 ஆண்டுகளுக்கு இப்படி எழுதி இருக்கிறார்.
இதன் காரணமாக அந்தக் காலகட்டத்தின் அரசியல் நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றங்களை தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
நூல்கள் எழுதுவதால் மட்டுமல்ல நாட்குறிப்புகள் எழுதுவதாலும் வரலாறு செழுமை அடையும் என்பதை நிரூபித்தவர் இவர்.
எளிமை பெருமை
அரசுப் பணியில் திவானாகப் பணி புரிந்தவர் இவரது தந்தை. சொந்தமாக ஒரு கப்பல் கூட வைத்திருந்தார் ஆனந்தரங்கம் பிள்ளை. இவரது வாழ்க்கைமுறையை எளிமையானது என்று கூறிவிட முடியாது.
ஆனால், இவரது எழுத்துக்கள் மிக எளிமையானவை. பொதுவாக பல மொழி அறிந்தவர்கள் தங்கள் மேதமையை காட்டும் விதத்தில் இலக்கிய பூர்வமாக கொஞ்சம் கரடுமுரடாக எழுதுவதுண்டு.
இதில் விதிவிலக்காக இருப்பதால் ஆனந்தரங்கப் பிள்ளையின் எழுத்துக்கள் மேலும் மதிக்கப்படுகின்றன.
பன்மொழி அறிவு பல விதங்களில் பலன் தரும்
பிரெஞ்சு ஆளுநரின் மொழிபெயர்ப்பாளராக இருந்த கனகராய முதலி என்பவர் இறந்தபோது அவரது இடத்தை நிரப்ப பன்மொழியறிவு கொண்ட ஒருவர் தேவைப்பட்டார். அந்தத் தகுதிகள் பெற்ற ஆனந்தரங்கம் 1747-ல் அப்பணியில் அமர்த்தப்பட்டார்.
பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனியின் உரைபெயர்ப்பாளராகவும் விளங்கியவர் ஆனந்தரங்கப் பிள்ளை. இதன் காரணமாக இவருக்கு அரசியல் செல்வாக்கு மிக அதிகமாக இருந்தது.
புதிய முயற்சிகள் இறவாப் புகழ் சேர்க்கும்
ஆனந்தரங்கம் பிள்ளை வாழ்ந்த காலத்தில் நாட்குறிப்புகளைக் கொண்டு வாழ்க்கை மற்றும் நாட்டு நிகழ்வுகளைச் சொல்லும் பழக்கம் இல்லை. அந்த விதத்தில் இவரது நாட்குறிப்பை ஒருவகை புதுவகை தமிழ் இலக்கியம் என்றே கூறலாம்.
எனவே வரலாறு மட்டுமின்றி தமிழ் இலக்கிய உலகின் கவனத்தையும் ஈர்த்தார். இவரது நாட்குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டுதான் பிரபஞ்சனின் பிரபல புதினமான ‘வானம் வசப்படும்’ எழுதப்பட்டது.
புதுச்சேரி வரலாற்றில் தவிர்க்க முடியாத இடம் பெறுபவர் ஆனந்தரங்கம் பிள்ளை. இவர் பிறந்த தினம் மார்ச் 30, 1709.
பல திறமைகள் பெற்ற இவர், தன் காலத்திய வரலாற்றைப் பதிவு செய்து வைத்துப் போனவர். அவரது வாழ்க்கையிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் நிறைய உண்டு.
- நன்றி: விகடன்