ஆண்களுக்கு நிகராகப் பெண்களும் இந்த ஆண்டில் பல்வேறு விளையாட்டுகளில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளனர். அவர்களில் குறிப்பிடத்தக்க சில வீராங்கனைகள்…
தீப்தி சர்மா (கிரிக்கெட்)
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, நீண்ட நாள் காத்திருப்புக்கு பின்னர் இந்த ஆண்டில்தான் பெண்களுக்கான உலகக் கோப்பையைக் கைப்பாற்றியது.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணம் தீப்தி சர்மா.
2011-ம் ஆண்டில் இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல ஆல்ரவுண்டரான யுவராஜ் சிங் எப்படி முக்கிய பங்களிப்பு செய்தாரோ, அதேபோல் மகளிர் அணி உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்தார் தீப்தி சர்மா.
இந்த உலகக் கோப்பைத் தொடரில் மொத்தம் 215 ரன்களை அடித்ததுடன், 22 விக்கெட்களையும் அவர் கைப்பற்றினார்.
இறுதி ஆட்டத்தில் 5 விக்கெட்களை கைப்பற்றிய தீப்தி சர்மா, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அந்த சாதனையை செய்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையையும் படைத்தார்.
வைஷாலி (செஸ்):
செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை ஒரு பக்கம் பிரக்ஞானந்தா அடித்துத் தூள் கிளப்பினார் என்றால், மறுபக்கம் அவருக்கு சற்றும் சளைக்காமல் செஸ் விளையாட்டில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் பிரக்ஞானந்தாவின் சகோதரி வைஷாலி.
உஸ்பெகிஸ்தானில் இந்த ஆண்டு நடைபெற்ற சர்வதேச அளவிலான ‘கிராண்ட் சுவிஸ்’ செஸ் தொடரில் வைஷாலி உள்பட 56 பேர் பங்கேற்றனர்.
11 சுற்றுகளில் 8 புள்ளிகளைப் பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.
இதன்மூலம் இத்தொடரில் தொடர்ந்து இருமுறை சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீராங்கனை என சாதனையுயும் படைத்தார்.
செஸ் உலகில் இந்த ஆண்டு பெற்ற தொடர் வெற்றிகளால் உலக சாம்பியன்ஷிப் தகுதி போட்டியான, ‘கேண்டிடேட்ஸ்’ தொடரில் பங்கேற்க தகுதி பெற்றார்.
அந்த வகையில் இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழகத்துக்கும் பெருமை தேடித் தந்துள்ளார் வைஷாலி.
ஜோதி யர்ராஜி (தடகளம்):
தடகளத்தில் இந்த ஆண்டு இந்தியாவின் சூப்பர் வுமன் ஜோதி யர்ராஜிதான்.
ஓட்டத்தில் இந்தியாவின் அதிவேக பெண்ணான ஜோதி யர்ராஜி ஆசிய தடகளப் போட்டியில் 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் ஏற்கெனவே ஒருமுறை தங்கம் வென்றவர்.
இந்த ஆண்டு குமி நகரில் நடந்த ஆசிய தடகளப் போட்டியில் மீண்டும் ஒருமுறை வென்று இந்தியாவில் மட்டுமல்ல ஆசியாவிலேயே வேகமாக ஓடும் வீராங்கனை தான்தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
இந்த ஆண்டில் அவர் 12.96 வினாடிகளில் பந்தய தூரத்தைக் கடந்தார்.
ஜோதியின் அப்பா ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்ப்பவர். அவரது அம்மா வீட்டு வேலை செய்பவர்.
இந்த ஏழ்மை நிலையிலும், தன் கனவைத் துரத்தி விளையாட்டில் இந்தியாவை தலைநிமிர வைத்துள்ளார் ஜோதி யர்ராஜி.
அன்னு ராணி (ஈட்டி எறிதல்)
ஈட்டி அறிதலில் நீரஜ் சோப்ராவை பின்பற்றி பெண்கள் பிரிவில் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார் அன்னு ராணி.
போலந்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த சர்வதேச போட்டி ஒன்றில் 62.59 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்துள்ளார் அன்னு ராணி.
இந்தியன் ஓபன் உலக தடகளப் போட்டியிலும் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
இம்முறை அவர் 62.01 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்தார்.
இதன்மூலம் இந்த ஆண்டில் மட்டும் 2 முறை 60 மீட்டருக்கு மேல் ஈட்டி எறிந்துள்ளார்.
பெண்கள் பிரிவில் இத்தனை தூரம் ஈட்டி எறிவது பெரிய விஷயம்.
நிகத் சரீன் (குத்துச்சண்டை)
கடந்த ஓராண்டாக காயத்தால் ஓய்வெடுத்து வந்த நிகச் சரீன், இந்த ஆண்டில் குத்துச்சண்டை போட்டிகளில் கம்பேக் கொடுத்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த உலக குத்துச்சண்டைப் போட்டியில் 51 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கத்தைத் தட்டி தூக்கியிருக்கிறார்.
தற்போது மிகத் தீவிரமாக ஆசிய மற்றும் காமன்வெல்த் போட்டிக்கான பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார் இந்தியாவின் இந்த பெண் சிங்கம்.
– பி.எம். சுதிர்