2025-ம் ஆண்டைப் பொறுத்தவரை விளையாட்டு உலகுக்கு வறட்சியான ஆண்டு.
ஒலிம்பிக் போட்டி, ஆசியப் போட்டி, காமன்வெல்த் போட்டி என பெரிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஏதும் நடக்காததால் கிரிக்கெட் விளையாட்டு மட்டுமே விளையாட்டு ரசிகர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது.
இந்தச் சூழலில் 2025-ல் இந்தியர்களின் மனம் கவர்ந்த சில விளையாட்டு வீரர்களைப் பார்ப்போம்.
பிரக்ஞானந்தா (செஸ்):
செஸ் விளையாட்டைப் பொறுத்தவரை கடந்த 2024-ம் ஆண்டு குகேஷுக்கு சொந்தமென்றால் இந்த 2025-ம் ஆண்டு பிரக்ஞானந்தாவுக்கு சொந்தம்.
விஜ்க் ஆன் ஸீ மாஸ்டர்ஸ் (Wijk aan Zee Masters), சூப்பர்பெட் செஸ் கிளாசிக் ருமேனியா, உஸ்-செஸ் கப் மாஸ்டர்ஸ், லண்டன் செஸ் கிளாசிக் ஓபன் என இந்த ஆண்டு நடந்த பல்வேறு செஸ் போட்டிகளில் வெற்றிக்கொடி நாட்டினார் பிரக்ஞானந்தா.
இந்த ஆண்டின் பெரும்பாலான காலம் நம்பர் 1 இடத்தில் இருந்த பிரக்ஞானந்தா, ஆண்டின் இறுதியில் 2-வது இடத்தில் இருக்கிறார்.
பிரக்ஞானந்தா இந்த ஆண்டில் படைத்த முக்கிய சாதனை, அடுத்த ஆண்டு நடக்கும் கேண்டிடேட் செஸ் போட்டிக்கு தகுதி பெற்றதுதான்.
2025-ம் ஆண்டுக்கான ‘பிடே’ செஸ் சர்க்யூட்டில் நடைபெற்ற போட்டிகளில் ஒவ்வொரு வீரரின் சிறந்த 7 போட்டிகளின் முடிவை கணக்கிட்டு அதன் அடிப்படையில் புள்ளிகள் வழங்கப்பட்டன.
இதில் 115.17 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்த பிரக்ஞானந்தா அதன் மூலம் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டிக்கான வாய்ப்பை தட்டிச் சென்றார்.
இந்த போட்டியில் வெல்லும் வீரர்தான் அடுத்த உலக செஸ் சாம்பியனை தீர்மானிக்கும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் தற்போதைய சாம்பியனான குகேஷை எதிர்த்து ஆடுவார்.
2026-ல் கேண்டிடேட் செஸ் போட்டியிலும் வென்று குகேஷை அவர் சந்திப்பார் என எதிர்பாப்போம்.
வைபவ் சூர்யவன்ஷி (கிரிக்கெட்):
இந்த ஆண்டில் இந்தியக் கிரிக்கெட்டின் சூப்பர் ஹீரோ பட்டத்துக்கு அபிஷேக் சர்மா, வருண் சக்ரவர்த்தி என்று பலத்த போட்டி இருந்தாலும், அவர்களையும் கடந்து அந்த இடத்தைப் பிடித்திருக்கிறார் வைபவ் சூர்யவன்ஷி.
இந்தியk கிரிக்கெட் உலகுக்கு இந்த ஆண்டில் கிடைத்த சூப்பர் பேபி வைபவ் சூர்யவன்ஷி.
நமக்குத்தான் இவர் பேபி. பந்துவீச்சாளர்களுக்கு இவர் சிக்சர்களைப் பறக்கவிடும் ஜுராசிக் பேபி.
சச்சினாவது 16 வயதில்தான் கிரிக்கெட்டை ஆளத் தொடங்கினார்.
ஆனால், வைபவ் சூர்யவன்ஷி, 14 வயதிலேயே களத்தில் இறங்கிவிட்டார்.
ஐபிஎல், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை, சையத் முஷ்டாக் அலி கோப்பை, விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டிகள் என்று எல்லா போட்டிகளிலும் பிய்த்து உதறுகிறார்.
சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைக்கான தோடரில் பிஹார் அணிக்காக 36 பந்துகளில் சதம் விளாசியது இந்த பேபியின் லேட்டஸ்ட் சாதனை.
இந்த போட்டியில் சூர்யவன்ஷி மொத்தம் 190 ரன்களைக் குவித்தார்.
கிரிக்கெட்டில் தொடர் சாதனைகளைச் செய்துவரும் வைபவ் சூர்யவன்ஷிக்கு மத்திய அரசின் உயர் விருதான ‘பிரதம மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார்’ விருது கடந்த வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக அதிரடி காட்டும் இவரை இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்காதது ஏன் என்ற கேள்வி பலருக்கும் வரலாம்.
சர்வதேச கிரிக்கெட் கமிட்டியின் விதிப்படி 15 வயதைக் கடந்த வீரர்கள்தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் ஆட முடியும்.
அதன்படி அவர் அடுத்த ஆண்டுதான் இந்தியாவுக்காக ஆட முடியும். அப்படி ஆடும்போது இன்னும் எத்தனை சாதனைகளை படைக்கப் போகிறாரோ தெரியவில்லை.
நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்):
எல்லா அண்டையும் போலவே 2025-ம் ஆண்டிலும் இந்தியாவின் சிறந்த விளையாட்டு வீர்ர்கள் பட்டியலில் இடம்பிடித்து விடுகிறார் நீரஜ் சோப்ரா.
இந்த ஆண்டில் அவர் செய்த சாதனை ஈட்டி எறிதலில் முதல் முறையாக 90 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி எறிந்தது.
டோஹா நகரில் நடந்த டைமண்ட் லீக் தடகள போட்டியில் இவர் வீசிய ஈட்டி 90 மீட்டர் தூரத்தை கடந்தது.
இதன்மூலம் ஈட்டி எறிதலில் 90 மீட்டருக்கு மேல் ஈட்டியை வீசிய முதல் இந்தியர் என்ற சாதனையைப் படைத்தார் நீரஜ் சோப்ரா.
இதன்மூலம் இந்தியாவை புதிய உச்சத்துக்கு அழைத்துச் சென்றார்.
லக்ஷயா சென் (பாட்மிண்டன்):
பாட்மிண்டன் விளையாட்டைப் பொறுத்தவரை இது இலையுதிர் காலம்.
சிந்து, சாய்னா போன்றவர்களின் ஆதிக்கம் ஓய்ந்த நிலையில் இளம் வீரர்கள் இப்போதுதான் துளிர்க்க தொடங்கியுள்ளனர்.
அந்த வகையில் இந்தியாவுக்கு நம்பிக்கை தந்த வீர்ர் லக்ஷயா சென்.
24 வயதான இந்த வீரர், கடந்த நவம்பர் மாதம் நடந்த ஆஸ்திரேலியன் ஓப்பன் பாட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றார்.
சர்வதேச பாட்மிண்டன் வீரர்கள் வரிசையில் இப்போது 13-வது இடத்தில் இருக்கிறார் லக்ஷயா சென்.
இப்பட்டியலில் முன்னிலையில் இருக்கும் இந்திய வீரர் இவர்தான்.
சிந்து, சாய்னாவின் பாதையில் இந்த ஆண்டில் வெற்றிப் பயணத்தைத் தொடங்கியுள்ளார் லக்ஷயா சென்.
சுனில் சேத்ரி (கால்பந்து):
இந்தியாவில் கிரிக்கெட் விளையாட்டில் சச்சின் எப்படியோ, அப்படித்தான் கால்பந்து விளையாட்டில் சுனில் சேத்ரி.
41 வயதான சுனில் சேத்ரி கால்பந்து ரசிகர்களின் வாயில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சரிக்கப்பட்ட பெயர்.
இந்தியாவுக்காக 95 கோல்களை அடித்துள்ள சேத்ரி, கடந்த மாதத்துடன் கால்பந்து விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்றார்.
இந்தியக் கால்பந்து உலகில் இது மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி உள்ளது.
உலகக் கோப்பைக் கால்பந்து தொடருக்கு ஒரு முறைகூட இந்திய அணியை கொண்டுசெல்ல முடியவில்லையே என்பதுதான் இவரது மிகப்பெரிய வருத்தம்.
– பி.எம். சுதிர்