விவசாயிகள் தொழிலாளர்கள் முன்னேற்றச் சங்கம் (VTMS) தமிழ்நாடு மீனவர்கள் சங்கம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம், பழங்குடிகள் பாதுகாப்பு சங்கம்,
டேன்டீ மக்கள் வாழ்வாதார முன்னனி, தமிழ்நாடு மேய்ச்சல் சமூகக் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து வாழ்வாதார பாதுகாப்பு ஆய்வரங்கத்தை சென்னையில் 2025, டிசம்பர் 7-ம் தேதி சென்னை எக்மோர் ”இக்சா” மையத்தில் நடத்தினர்.
இதற்கு VTMS-ன் மாநில ஒருங்கிணைப்பாளர் M.S.செல்வராஜ் தலைமை வகிக்க, தமிழ்நாடு மீனவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் திரு. துறைமகேந்திரன் முன்னிலை வகித்தார். விவசாய சங்கத் தலைவர் திரு. அரங்க பார்த்தசாரதி அனைவரையும் வரவேற்றார்.
கேரள மாநில விவசாய சங்கத் தலைவர் திரு. PT. ஜோன், பழங்குடிகள் மக்கள் சங்கம் தலைவர்கள் தேனி மகாராஜன், பாண்டியன், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு. கணேசன், மீனவர்கள் சங்க தலைவர் கன்னியாகுமரி திரு. ஜெயசுந்தரம்,
மேய்ச்சல் சமூக கூட்டமைப்புதலைவர் திரு.ராஜீவ் காந்தி திருமதி. சுகனியா, VTMS வாழவயல் திரு. முத்துகுமார், டேன்டீ மக்கள் வாழ்வாதார முன்னனி தலைவர் திரு. பாண்டியன், திரு.காளிதாஸ்,
காட்டுநாயக்கர் முன்னேற்றச் சங்கம் தலைவர் திரு.காலன் மற்றும் பலர் கலந்துக்கொண்டு கருத்துறை வழங்கினர்.
இவர்கள் பேசும்போது,
* 200 ஆண்டுகளுக்கு மேல் வரலாற்று அநீதியை மலையகத் தமிழர்கள் அனுபவித்து வருகின்றனர்.
இவர்களின் மறுவாழ்வுக்காக ஏற்படுத்தப்பட்ட டேன்டீயை காடாக மாற்ற உண்மைக்கு புரம்பாக அரசாணை 173 மூலம் காடாக மாற்றி வெளியேற்ற பார்ப்பது பெரும் கொடுமையாகும்.
அரசாணை 173 ரத்து செய்யப்படுவதோடு தமிழக முதல்வர் அறிவித்தது போல், இவர்கள் வாழும் டேன்டீ நிலத்தில் 14 லட்சத்துக்கு வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.
டேன்டீ நிலத்தை தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக்கொடுத்து 200 வருட அடிமை முறை தீர்க்கப்படவேண்டும்.
* பழங்குடிகள் தங்களது காடுகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்து வருவதை தடுத்து, வன உரிமைச் சட்டப்படி பழங்குடிகளின் அதிகாரத்தின் கீழ் காடுகள் கொண்டுவர வேண்டும்.
* மீனவர்களின் கடல்கரையும் ,தீவுகளும் காப்புக்காடாக மாற்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதனை தடுத்து வன உரிமைச் சட்டம்படி மீட்டெடுக்கப்படவேண்டும். பெரும் கம்பெனிகள் மீன் பிடிப்பது தடுக்கப்பட வேண்டும்.
மீனவர்களை பழங்குடிகள் பட்டியலில் சேர்க்கப்பட வேண்டும்.
* மரபணு மாற்றப்பட்ட நெல் ரகத்தால் அனைவருக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இதனை ஒன்றிய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்.
*சட்ட விரோதமாக வனத்துறையினர் மேய்ச்சலுக்கு தடைவிதிப்பது தடுக்கப்படுவதோடு இதுபோல் ஈடுப்படும் வனத்துறை அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
* எல்லோரையும் அச்சுருத்தும் பருவநிலை மாற்றத்தால் இயற்கை சீற்றத்தை அனுபவித்து பேரழிவுகளை சந்தித்து வருகிறோம்.
இதைத் தடுக்க இளைஞர்கள் ஆக்கப்பூர்வமான செயலில் ஈடுப்படுவது அவசியம் போன்ற கருத்துக்களை எல்லோரும் வலியுறுத்தினர்.
தீர்மானங்கள் அனைத்தும் உயர்மட்ட அதிகாரிகள் தமிழக முதல்வர் மற்றும் அனைத்து அரசியல் கட்சியின் முக்கிய தலைவர்களுக்கு கொடுக்கப்படும்.
இந்த ஆய்வரங்கில் தமிழகம் முழுவதும் இருந்து சிறுவிவசாயிகள், மீனவர்கள், டேன்டீ தொழிலாளர்கள், மேய்ச்சல் சமூகம், பழங்குடிகள் மற்றும் இளைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள் கலந்துக் கொண்டனர்.
இறுதியாக அனைவருக்கும் டேன்டீ மக்கள் வாழ்வாதார முன்னனி தலைவர் திரு. சந்திரமோகன் நன்றி தெரிவித்தார்.
தீர்மானங்கள்:
1) தமிழ் நாட்டில் 13 மாவட்டங்களில் சுமார் 11 லட்சம் மீனவர்களின் வாழ்வாதாரமாக கடல்கரையும், கடலும் உள்ளது.
இவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தும் கடல்கரை, தீவுகள், காப்புகாடாக மாற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்களின் உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
காப்புகாடாக மாற்றிய கடல்கரையையும், தீவுகளையும் காப்புக் காடாக மாற்றுவது ரத்து செய்யப்படவேண்டும்.
வனஉரிமை சட்டப்படி உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டு மீனவ கிராமங்களின் அதிகாரத்தின் கீழ் கொண்டுவரப்பட வேண்டும்.
கடலில் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீன்பிடிப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கடலோர ஒழுங்கு முறை ஆணைய அறிவிக்கை முழுமையாக அமல்படத்தப்படவேண்டும். மீனவர்களை பழங்குடிகள் பட்டியலில் உடனடியாக சேர்க்கவேண்டும்.
2) அரசு தேயிலைத்தோட்ட கழகம் (டேன்டீ) மலையகத் தமிழர்களின் மறுவாழ்வுக்காக தொடங்கப்பட்டது. இம்மக்கள் உதிரத்தையும் வேர்வையையும் சிந்தி உழைத்து பல கோடிகளை அரசுக்கு ஈட்டிக் கொடுத்துள்ளனர்.
லாபகரமாக இயங்கிய டேன்டீ, நிர்வாக சீர்கேட்டால் நலிவடைந்து உள்ளது. பல ஆண்டுகளாக வேலை செய்த தற்காலிக தொழிலாளர்களை வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். இவர்களை மீண்டும் வேலைக்கு எடுக்க வேண்டும்.
உண்மைக்கும், அறிவியலுக்கும் புறம்பாக போடப்பட்டு காடாக மாற்றும் அரசாணை-173 ரத்து செய்ய வேண்டும்.
தமிழக முதல்வர் அறிவித்த 14 லட்சத்தில் டேன்டீ உள்ளேயே பாதுகாப்பான இடத்தில் சொந்த வீடு கட்டிக் கொடுக்க வேண்டும்.
நிரந்தரத் தீர்வாக டேன்டீ நிலத்தை டேன்டீ மக்களுக்கு தலா மூன்று ஏக்கர் வீதம் பிரித்துக் கொடுத்து 200 ஆண்டுகள் அடிமைமுறை ஒழிக்கப்பட்டு சுயமரியாதையுடன் சமூகநீதி பெற்றுவாழ மத்திய மாநில அரசுக்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
3) நீலகிரி மாவட்டம் கூடலூர் தொகுதி சிறுவிவசாயிகளின் கைவச விவசாய நிலம் பிரிவு 17, 53, 16A , TNPPF, நிலங்களுக்கு உடனடியாக பட்டா கொடுக்க வேண்டும்.
78 ஆண்டுகளாக இருட்டில் வாழும் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்க வேண்டும். மேலும் அடிப்படை வசதிகளை வனத்துறை தடுப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
4) உலகம் முழுவதும் பருகும் தேயிலைக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
பசுமைத் தேயிலை கிலோ ஒன்றிற்கு 50 ரூபாய் கொடுக்க வேண்டும், நலிவுற்று வரும் கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளை சிறப்பாக நடத்த முயற்சி எடுக்க வேண்டும்.
5) இந்தியாவில் ஆயிரக்கணக்கான பாரம்பரிய வீரிய நெல் ரகங்கள் இருக்கும்போது கார்ப்பரேட் கம்பெனிகளில் லாபத்துக்காக ஒன்றிய அரசு புதிய மரபணு மாற்றப்பட்ட நெல் வகைகளை அறிமுகப்படுத்தி இருப்பது பெரும் ஆபத்தாகும்.
ஆகவே மரபணு மாற்றப்பட்ட நெல் ரகங்களை உடனடியாக ரத்து செய்வதோடு இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
6) முதுமலை புலிகள் காப்பகம் மற்றும் இதர சரணாலயங்கள் முழுவதும் தேக்குமரம், உண்ணிச் செடிகள், பார்த்தீனியம், யூகலிப்டஸ் போன்ற அந்நிய தாவரங்கள் முழுமையாக அகற்றப்பட்டு யானைகள் மற்றும் கானுயிர்களுக்கு தேவையான பழ மரங்கள் மற்றும் இயற்கையான சோலை மரங்கள் வளர்க்கப்பட வேண்டும்.
இதன் மூலம் மக்கள் வாழும் கிராமங்களுக்கு வன விலங்குகள் புகுந்து உயிர் உடமைகளை சேதப்படுத்துவது தடுக்கப்படும்.
வனவிலங்கு தாக்குதலுக்கு உள்ளாகி பலியாகும் குடும்பத்திற்கு ஒரு கோடி நிவாரண நிதி கொடுப்பதோடு குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும், விவசாய நிலம் மூன்று ஏக்கர் வழங்க வேண்டும்.
வனவிலங்குகளை கட்டுப்படுத்த 22.7.2025 அன்று 19 மாநிலங்கள் ஒருங்கிணைந்து டெல்லி மாநாட்டின் பிரகடனம்படி நிவாரணம் பெற புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும்
7) தமிழ்நாடு முழுவதும் 37 பழங்குடி சமூகங்கள் காடுகளில் பாரம்பரியமாக வாழ்ந்து வரகின்றனர்.
புலிகள் காப்பகம், சரணாலயம் என்ற பெயரில் இவர்களின் காடும், நிலமும் பறிக்கப்பட்டுள்ளது.
இவற்றைத் திருப்பிக் கொடுப்பதோடு தரமான சொந்தவீடு கட்டிக்கொடுக்கப்பட வேண்டும்.
மேலும் வன உரிமைச் சட்டம் 2006 படி காடுகளை கிராமசபை (ஊர்சபை) அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து பேணிபாதுகாத்து பயன்படுத்த வேண்டும்.
– எம்.எஸ்.செல்வராஜ்