ஐபிஎல் 2026: சிஎஸ்கே குறிவைக்கும் வீரர்கள்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான ஏலம் அடுத்த மாதம் நடக்கவுள்ள நிலையில், அணிக்கு புதிதாக யாரையெல்லாம் வாங்கலாம் என்ற ஆலோசனையில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

ஜடேஜா, பதிரணா, சாம் கரண் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் அவர்களுக்கு ஈடாக யாரையெல்லாம் வாங்கலாம் என்ற விவாதங்கள் அணியின் மூத்த நிர்வாகிகள் இடையே நடந்து வருகின்றன.

ஐபிஎல் ஏலத்தைப் பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் இப்போது 43.40 கோடி ரூபாய் இருக்கிறது.

இந்த ஏலத்தைப் பொருத்தவரை கொல்கத்தா நைட் ரைடஸ் அணிக்கு (64.30 கோடி ரூபாய்) அடுத்ததாக அதிக அளவில் பணம் வைத்துள்ள அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் உள்ளது.

இந்த பணத்தை வைத்து சிறப்பான வீர்ர்களை ஏலத்தில் எடுப்பதில் சிஎஸ்கே நிர்வாகம் தீவிரமாக இருக்கிறது.

தேவை ஒரு அதிரடி ஆல்ரவுண்டர்:

ஜடேஜா, சாம் கரண் ஆகியோர் அணியில் இல்லாத நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஒரு அதிரடியான ஆல்ரவுண்டர் தேவைப்படுகிறார்.

இந்தத் தேவையை நிறைவேற்ற கேமரூன் கிரீன், லியம் லிவிங்ஸ்டன் ஆகியோரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குறிவைப்பதாகக் கூறப்படுகிறது.

கேமரூன் கிரீனைப் பொறுத்தவரை ஐபிஎல் தொடரில் இதுவரை 707 ரன்களை விளாசியுள்ளார். அவரது ஸ்டிரைக் ரேட் 153 ரன்களாக உள்ளது.

இதுதான் அவர் பக்கம் எல்லா அணிகளும் திரும்ப காரணமாக இருக்கிறது. அதிரடியாக ரன்களைக் குவிப்பதுடன் பந்துவீச்சிலும் கெட்டிக்காரராக இருக்கிறார் கிரீன்.

டி20 போட்டிகளில் 3-வது பேட்ஸ்மேனாகவோ, 5-வது பேட்ஸ்மேனாகவோ இவரைப் பயன்படுத்தலாம் என்பதால் இவரை வாங்க கடும் போட்டி இருக்கும் குறிப்பாக கொல்கத்தா அணியும் கிரீனைக் குறிவைக்கும் என்பதால் அவரை வாங்க போட்டி கடுமையாக இருக்கும்.

ஒருவேளை கிரீன் கையை விட்டுப் போனால், அடுத்ததாக லியம் லிவிங்ஸ்டனுக்கு சிஎஸ்கே வலைவீச வாய்ப்பு உண்டு. 48 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள லிவிவிங்ஸ்டன் 1,026 ரன்களைக் குவித்ததுடன் 33 விக்கெட்டுகளையும் குவித்துள்ளார்.

இந்த 2 வீரர்களும் கைவிட்டுப் போனால் கடைசியாக வெங்கடேஷ் ஐயரையாவது வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் முயற்சிக்கலாம் என்று சிஎஸ்கே வட்டாரத்தில் கூறப்படுகிறது.

சுழற்பந்தில் சிக்கல் தீருமா?:

ஜடேஜாவைக் கொடுத்து சஞ்சு சாம்சனை வாங்கியதால், தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் யார் என்ற கேள்விக்கான விடையை சிஎஸ்கே கண்டுபிடித்துவிட்டது. ஆனால், அதே நேரத்தில் சுழற்பந்துவீச்சாளர்கள் விஷயத்தில் ஓட்டை விழுந்திருக்கிறது.

அதுவும் சென்னை ஆடுகளத்தில் ஜெயிக்க வேண்டுமானால் கண்டிப்பாக ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் தேவை.

இதை சரிசெய்ய ரவி பிஷ்னாய்க்கு குறிவைத்திருக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். உள்ளூர் சுழற்பந்து வீச்சாளர் என்பதால் இங்குள்ள பிட்ச்கள் பிஷ்னாய்க்கு அத்துப்படி.

இதுவரை 77 ஐபிஎல் போட்டிகளில் ஆடியிருக்கும் அவர் 72 விக்கெட்களை எடுத்துள்ளார். பிஷ்னாய்க்காக 10 கோடி ரூபாய் வரை செல்ல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிஷ்னாயை ஏலத்தில் வாங்க முடியாத பட்சத்தில் இலங்கையின் சுழற்பந்து வீச்சாளரான ஹசரங்காவுக்கு சென்னை அணி குறிவைக்கலாம். அவர் பேட்டிங்கிலும் ஓரளவு கைகொடுப்பார் என்பதால் ஏலத்தொகை சற்று ஏறலாம்.

இவர்கள் இருவரும் கிடைக்காவிட்டல் சன்ரைசர்ஸ் அணியில் இருந்து கழற்றிவிடப்பட்ட ராகுல் சாஹருக்கு மஞ்சள் படையில் சேரும் வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மீண்டும் பதிரணா:

13 கோடி ரூபாயைக் கொடுத்து தக்கவைக்கும் அளவுக்கு பதிரணா பெரிய வீரர் இல்லை என்பதாலும், கடந்த ஐபிஎல்லில் கொஞ்சம் சொதப்பியதாலும் பதிரணா சிஎஸ்கே அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

ஆனால், ஏலத்தில் சுளுவான விலைக்கு கிடைத்தால், அவரை மீண்டும் சிஎஸ்கே அணி வாங்கினாலும் ஆச்சரியம் இல்லை என்றும் அணியின் வட்டாரத்தில் சொல்லப்படுகிறது.

ஐபிஎல் போட்டிகளில் 47 விக்கெட்களை வீழ்த்தியுள்ள பதிரணா, 2023-ம் ஆண்டு சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வென்றதில் முக்கிய பங்கு வகித்தார் என்பதால், அவரை தோனி அவ்வளவு சீக்கிரம் ஒதுக்கித் தள்ளமாட்டார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த ஐபிஎல்லில் விலைபோகாமல் இருந்து, இப்போது ரஞ்சிக் கோப்பை மற்றும் சையத் முஷ்டாக் அலி கோப்பையில் சிறப்பாக ஆடிவரும் பிருத்வி ஷா மீதும் சென்னைக்கு ஒரு கண் இருப்பதாக சொல்லப்படுகிறது

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment