இன்றைய ஞாயிறு (07.12.2025) இன்னொரு ஞாயிறாக இல்லை. விடுமுறை நாளை ஒரு விழா நாளாக, உற்சாகக் கொண்டாட்ட தினமாய் மாற்றிய நிகழ்வாக ‘இசை நாயகி’ நிகழ்ச்சி இருந்தது.
எந்த ஒரு கலை வடிவத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பு இசைக்கு உண்டு. இலக்கியத்தை நாம் வாசிக்க வேண்டும்.
சிற்பமும், ஓவியமும் நாம் கவனத்தைக் குவித்து உள்வாங்கும், வேறுவிதமானதொரு மன வாசிப்பைக் கோருகிறது. (நடனத்தை நாம் இசையிலிருந்து பிரிக்க முடியாது. நடனத்தின் ஆன்மா இசை)
இசை ஒன்றுதான் நாம் அமைதியாக இருந்தாலும்கூட நம்மை ஆக்கிரமித்து, ஆட்கொள்கிற ஒரு அற்புதம். நமக்குள் இறங்கி, நம்மை நிரப்புகிற பரவசம் அது.
நம் அனைத்து உணர்வுகளையும் மீட்டக்கூடிய ஒரே கலைவடிவம் இசை.
வாழ்வின், உயிர் வாழ்தலின் உறுதுணையாக இருப்பது இசைதான் என்று பலமுறை எனக்கு தோன்றி இருக்கிறது (அது எந்த வகை இசையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதில் எனக்கு பேதம் இல்லை).
பெண்கள் எண்மர் கூடி, இசையையும், இசையில் பங்களித்து, ஆனால், அறியப்படாத பெண் ஆளுமைகளையும் இணைத்து யோசித்து ‘இசை நாயகி’ எனும் நிகழ்ச்சியை கன்சீவ் செய்தது முதல் சிறப்பு.
சிறப்பான ஒரு விஷயத்தைத் தீர்மானித்தபின் அதனை வகை பிரித்து, ஒவ்வொரு வகைமையிலும் விற்பன்னர்களை இனம் கண்டு, தொடர்புகொண்டு, அவர்களை வரவழைத்து, சரியான தலைப்புகளில் அவர்களை பங்கு பெறச் செய்தது அடுத்த சிறப்பு.
நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சத்தையும் திட்டமிட்டு, வீணையின் சுதி ஏற்றப்பட்ட நரம்புக் கம்பியைப் போல தொய்வின்றி கச்சிதமாகக் கொண்டு சென்று, ஒரு உற்சாக வெள்ளமாக உச்சகட்டத்தில் நிறுத்தி வெற்றிகரமாக முடித்தது மூன்றாவது சிறப்பு.
இவை அனைத்தையும் செய்துமுடித்து, முகம் நிரம்பிய புன்னகையுடன் மேடையில் நின்ற எட்டு பெண்களையும் பார்க்கையில் சந்தோஷமாக இருந்தது. இதற்காக இவர்கள் உழைத்த உழைப்பை ஓரளவு அறிவேன்.
ஒவ்வொருவருக்கும் அவரவருக்கான வேலைகள், கடமைகள் உண்டு. அதன் நடுவேதான் இதற்கான நேரத்தைக் கண்டுபிடிக்கிறார்கள், இப்படி ஒன்றை செய்வதற்கான உற்சாகத்தையும், சக்தியையும் திரட்டிக்கொள்கிறார்கள்.
நேரில் சந்தித்தும், ஃபோனிலும் விவாதிக்கிறார்கள். நிகழ்ச்சியை மேலும் கூர்தீட்டுகிறார்கள்.
யார் உருப்படியாய் எது செய்தாலும் வரக்கூடிய இயல்பான பெப்டிக் அல்சர் விமர்சனங்களையும், புளிச்ச ஏப்ப அபிப்ராயங்களையும் இடதுகையால் தட்டிவிட்டு நினைத்த வேலையை செய்து முடிக்கிறார்கள்.
இதற்கெல்லாம் தேவைப்படும் ஒருங்கிணைப்பும், ஒத்திசைவும் சேர்ந்து வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்ட சிம்பொனி போல இன்றைய இந்த நிகழ்ச்சி இருந்தது. சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி குறித்து ஒரு பதிவு எழுதி இருந்தேன்.
அந்த கிரிக்கெட் அணி போலதான் இந்த நாயகி அணியும் இருக்கிறது. அதில் வரும் ஒவ்வொரு ப்ளேயர் பெயரையும் இந்த எட்டு பேரில் ஒவ்வொருவருக்கும் வைத்திருக்கிறேன். அது ஒரு ராஜ ரகசியமாதலால், அந்தப் பட்டியலை இப்போதைக்கு வெளியிடும் உத்தேசம் இல்லை.
அந்த அணி உலகக் கோப்பையை வென்ற போது ஏற்பட்ட நிறைவு இன்று இந்த நிகழ்ச்சி சிறப்பாக நிறைவடைகையில் இருந்தது. இந்த நிகழ்ச்சி FIRST OF ITS KIND. ஒரு பெஞ்ச் மார்க்.
நாயகி டீம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தாங்கள் முந்தையை நிகழ்ச்சியில் ஏற்படுத்திய பெஞ்ச் மார்க்கை, தாங்களே தாண்டுவதை இந்த மூன்று நிகழ்ச்சியிலும் செய்திருக்கிறார்கள். இது மிக முக்கியமானது.
நன்றி: பேஸ்புக் பதிவு