இந்தியத் திரை உலகம் இருக்கும் காலம் வரையிலும் ஒரு நடிகையின் பெயர் உரக்கக் கூறப்படும் என்றால் அது நிச்சயம் சாவித்திரியின் பெயராகத் தான் இருக்கும்.
தமிழ் சினிமா என்பதைத் தாண்டி இந்தியத் திரையுலகமே மிரண்டு பார்த்த ஒரு மெகா ஹிட் நடிகை தான் சாவித்திரி.
1934-ம் ஆண்டு பிறந்த இவர், தன்னுடைய 17வது வயதிலிருந்து நடிக்கத் தொடங்கினார்.
1951-ம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளியான ‘பாதாள பைரவி’ என்கின்ற திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரம் நடித்து, அதன்மூலம் தன்னுடைய கலை உலகப் பயணத்தைத் தொடங்கிய நடிகை தான் அவர்.
திரை உலகில் அறிமுகமான காலகட்டத்தில் பெரிய அளவில் தெலுங்கு சினிமாக்களில் மட்டுமே நடித்து வந்த சாவித்திரிக்கு, 1952 ஆம் ஆண்டு வெளியான ‘கல்யாணம் பண்ணிப்பார்’ என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தது.
தொடர்ச்சியாக அவர் பல தெலுங்கு திரைப்படங்களில் நடித்து வந்தாலும், தமிழ் மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்போடு களமிறங்கினார் அவர்.
அவருடைய திரை வாழ்க்கையில் 138 தெலுங்குத் திரைப்படங்கள், 100 தமிழ்த் திரைப்படங்கள், 6 கன்னட மொழி திரைப்படங்கள், 5 ஹிந்திப் படங்கள் மற்றும் மூன்று மலையாள மொழித் திரைப்படங்கள் என்று மொத்தம் 252 திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
மிகப்பெரிய நடிகையாக வலம்வந்த சாவித்திரி தன்னுடைய ஐம்பதாவது வயதைத் தொடுவதற்கு முன்பாகவே காலமானார் என்பது சோகம்.
தமிழ் சினிமாவில் ஹீரோக்களின் ஆதிக்கமே அதிகம் இருந்த காலகட்டத்தில் களமிறங்கி, “நடிகர் திலகம்” சிவாஜி கணேசனின் நடிப்புக்கு இணையாக, “நடிகையர் திலகம்” என்று அழைக்கப்பட்டவர் சாவித்திரி என்பது அனைவரும் அறிந்ததே.
மிகக் குறுகிய காலத்தில் மிகப்பெரிய நடிகையாக வளர்ந்தாலும் அவருடைய இறுதிக் காலங்கள் அந்த அளவிற்கு சிறப்பாக அமையவில்லை என்றே கூறலாம்.
சில திரைப்படங்களை அவர் தயாரித்ததே இதற்கு மிக முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.
அதுமட்டுமல்லாமல் 1968-ம் ஆண்டு தெலுங்கு மொழியில் வெளியான “சின்னாரி பப்பலு” என்கின்ற திரைப்படத்தை சாவித்திரி இயக்கி இருந்தார்.
சில காலங்கள் கிழித்து அதை தமிழ் மொழியிலும் இயக்கினார்.
சுமார் 30 ஆண்டுகள் திரையுலகில் பயணித்த சாவித்திரி, நடிகையர் திலகமாக இன்றும் போற்றப்படுகிறார்.
அன்சார். ஆர்.
நன்றி: ஏசியாநெட்