எங்கப்பா வீரமணி, கம்யூனிஸ்ட் சித்தாந்தத்தை சாகும் வரை விட்டுகொடுக்காமலே வாழ்ந்து மறைந்தவர். அதனாலேயே நான் உட்பட என் அண்ணன்கள் அஜாய் கோஷ், ஜீவானந்தம் யாருக்குமே குலசாமி கோயிலுக்குப் போயி மொட்டை போட்டுக் காது குத்தல!
அப்பல்லாம் எங்க ஊருல இது சாமி குத்தம்! சொந்த பந்தம் எவ்வளவோ சொல்லியும் கடைசிவரை காது கொடுத்துக் கேட்கவில்லை தோழர் வீரமணி.
ஆனாலும், அவருக்கு தெரியாமலே வீரபாண்டி கோயிலுக்கு கூட்டிப்பொகும்… அத்தையோ, சின்னம்மாவோ! அவ்வளவு சின்ன வயசு எனக்கு.
தேனி மாவட்டம், கூடலூரில் இருந்து ஒரு நாப்பத்தஞ்சு கிலோ மீட்டர் தூரம் இருக்கும் வீரபாண்டி கோயில். பெரும்பாலும் மாலை கிளம்பிப் போனால், விடிஞ்ச பிறகு வீடு திரும்புவதுதான் வழக்கம்.
சுத்துப்பட்டு அத்தனை கிராமத்து சனங்களுக்கும், அந்த ஒரு வாரம்… கொண்டாட்டத்தின் உச்சம்!
ஜெயன்ட் வீல் ராட்டினம், மணர கிணறு, சர்க்கஸ் என்று அட்ராக்சன்ஸ் வரிசைகட்டி நிக்கும்.
முதல் திருவிழாவில் என்னை மிகவும் ஈர்த்தது ‘பீம புஷ்டி’ அல்வாக்கடை!
காரணம், ஒரு அம்பது அறுபது கிலோ எடை கொண்ட அல்வா ஒரே பீஸாக இருக்கும். ஒரு பெரிய பட்டாக் கத்தியை வைத்து திருப்பி வைத்து அடிக்கும் சவுண்டுக்குதான் முதலில் நான் அடிமையானேன்.
அத்தையோ, சின்னம்மாவோ விலை விசாரித்து… சரி, கொடு என்பார்கள். கத்தியின் நீள அகலம் ஒரு போர் வாளுக்கு சற்றும் குறைந்ததில்லை என்பதைப் போல் பிரம்மாண்டமாக இருக்கும்.
தேர்ந்த போர் வீரன், எதிராளியின் தலையை சீவுவது போல்; அவர் வீசுகிற போக்கைப் பார்க்கும் போது… அம்பதில் பாதி நமக்குதான் போல என்று ஆசையாக காத்திருப்பேன்… அண்ணனுக்கு ஒரு உத்தாப்பம் என்பதாக முடியும் எல்லா திருவிழாவிலும்!
இப்போதுவரை அப்படித்தான் என்று அடுத்த தலைமுறையும், அனுபவித்த என் சோட்டு நண்பர்களும் கமெண்ட்டுவதை… கமெண்ட் பாக்ஸில் பார்த்துக்கங்க.
இப்போ, வருசம் தவறாமல் குல சாமி கோயிலுக்குப் போவதை, வழக்கமா வைத்திருக்கிறேன் என்பது காலம் கற்றுக்கொடுத்த பாடம்.
#பின் குறிப்பு:
இது, வீரபாண்டி திருவிழா குறித்த ஞாபக அடுக்கின் ஒரு பகுதி… ஆக்சுவலா நான் சொல்ல வந்த விசயம் இதுதான்.
சென்னையில் நான் குடியிருக்கும் சாலிகிராமம் பகுதியில் ஹோட்டல்களுக்கு பஞ்சமே இல்லை. எப்போதும் நிறைந்திருக்கும் என் சபையில் நான் மட்டுமே தனித்து விடப்பட்டிருந்தேன்.
இரவு உணவுக்காக ரோட்டில் இறங்கினால்… மழை ஆடை நனைக்கும் அளவு மிதமாக இருந்தது!
பைக் எடுத்தால் பத்தாயிரம் ஃபைன் கட்டணுமே என்று காலாற நடந்து வந்து ஒரு ஹோட்டலில், சாப்பிட என்ன இருக்கு என்று கேட்டேன்… தோசை இருக்கு, அதுக்கு வடகறி குருமா மட்டும்தான் கிடைக்கும் என்று சொன்னார் எதிர்ப்பட்ட நபர்.
ஒரு தோசை பார்சல் என்றேன்… அப்போதுதான் சாப்பிட்டு முடித்து கை கழுவிய தம்பி ஒருத்தர், ஆர்டர் கொடுக்காதீங்க என்று குறுக்கே படித்துத் தடுத்தார்.
தாடியோடு அவர் இருந்த தோற்றம்… அவரும் சினிமா ஆள் தான் என்பது அட்சர சுத்தமாக தெரிந்தது.
என்னைக் கடந்து போகும் போது அவர் சொன்னது… ஒரு தோசை அறுபத்தி அஞ்சு ரூபா, நாலு தோசை சாப்பிட்டாலும் பத்தாது!
ஆனாலும் கிச்சனை கிராஸ் பண்ணிப் பார்த்தேன்.
தோசை மாவு போடுகிற சைசும், சுருள்கிற சைசும் பார்த்து வாங்கிட்டு வீட்டுக்கு வந்து பிரித்துப் பார்த்தேன்… வீரபாண்டி திருவிழாவில் பார்த்த பீம புஷ்டி அல்வா ஞாபகம் வந்தது?!
நல்லா இரும்மா.