எச்சரிக்கைகள் அதிகப்பட்டிருக்கிற காலம் இது. அதிலும் தற்போது, தொடர் மழைக்காலம் என்பதால், விவசாய வயல் பரப்பு எல்லாம் நீரில் நிரம்பி நாசமாகி விவசாயிகளை கலங்க வைத்திருக்கின்றன.
நெசவாளர்கள், மீனவ மக்கள் என தினமும் வேலைக்குச் செல்லும் பலரும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்திருக்கிறார்கள்.
சென்னை உட்பட பெருநகரங்களில் தொடர் மழையால் எங்கும் தேங்கும் மழைநீரின் அளவு அதிகரித்து போக்குவரத்தை ஸ்தம்பிக்க வைத்திருக்கிறது.
நிறைவேற்றப்பட்டதாகச் சொல்லப்பட்ட மழைநீர் வடிகால் பணித் திட்டங்களையெல்லாம் மீறி, சென்னை பெருநகரத்தையே பல பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் நுழைந்து பரவி இருக்கிறது.
தூய்மைப் பணியாளர்களும் தங்களால் இயன்ற அளவுக்கு மழைநீர் தேங்காத அளவுக்கு சாக்கடைகளைத் தூய்மைப்படுத்தினாலும், சாலைகளில் மழைநீரும் சாக்கடை நீரும் ஒன்றுகலந்திருப்பதைப் பார்க்க முடிகிறது.
தற்காலிக சமையல் கூடங்களில் உணவு தயாரிக்கப்பட்டு தற்காலிக முகாம்கள் வைக்கப்பட்டிருக்கிறவர்களுக்கு வழங்கப்படுகிறது. மழைக்கால உபயமாக மழைக்காலத்தில் மட்டும் வரும் விஷேசமான நோயும் இனி பரவ ஆரம்பிக்கலாம்.
பொதுவாக இம்மாதிரியான மழைக்காலத்தில், பள்ளிக்குப் போகும் குழந்தைகள் மழையினாலும் குளிரினாலும் பாதிக்கப்பட்டு வெவ்வேறு காய்ச்சல்கள் வந்து அவதிப்படுகிறார்கள்.
இம்மாதிரியான தொடர் மழை ஜனவரி இரண்டாவது வாரம் வரை நீடிக்க வாய்ப்பிருக்கிறது என்று, வெவ்வேறு தனியார் வானிலை அறிவிப்பாளர்கள் குடுகுடுப்பைக்காரர்கள் மாதிரியே பீதியான அறிக்கைகளை வாசிக்கிறார்கள்.
இந்த சமயத்தில் நாம் மறந்துபோவது, நமது பாரம்பரியமான மருத்துவப் பாதுகாப்பு முறையைத்தான்.
சட்டென்று சிறு காய்ச்சலுக்கும் இருமலுக்கும் ஆங்கில மருத்துவத்தை நோக்கி ஓடுகிறவர்கள் யாரும் நமது பாரம்பரியமான சித்த மருத்துவத்தில் இருக்கின்ற பாதுகாப்பான மருந்துகளைத் தேடிப்போவதில்லை.
இந்த சமயத்தில் கொரோனா காலத்து ஓர் அனுபவம்.
கொரோனா தீவிரப்பட்டிருந்த நேரம் அது. எங்களுடைய வீட்டில் என்னையும் சேர்த்து கொரோனாத் தொற்று பரவியிருந்தது.
மாநகராட்சி ஊழியர்கள் வந்து சோதித்துவிட்டு, தொற்றை உறுதி செய்து வீட்டிற்கு முன்னால், துணியினாலான எச்சரிக்கை போர்டையும் மாட்டியிருந்தார்கள்.
கூடவே, அருகில் இருக்கின்ற தனியார் மருத்துவமனைக்கு எங்களைப் போகச் சொல்லி கை காட்டினார்கள் மாநகராட்சி ஊழியர்கள்.
அவர்களே கைகாட்டியபிறகு நாம் தட்ட முடியுமா என்ன?
நாங்களும் அந்த தனியார் மருத்துவமனைக்குப் போனோம்.
எங்களை மாதிரியே பாதிக்கப்பட்ட பலருக்கு, இந்தக் குறிப்பிட்ட மருத்துவமனையே கைகாட்டி பலரும் அனுப்பி வைத்திருப்பது அங்கிருந்த கூட்டத்தில் தெரிந்தது.
முதலில், என்னை அழைத்து விசாரித்தார்கள். சோதித்தார்கள். என்னுடைய முகத்தில் பரவிய பீதியை விட, என்னை சோதித்தவர்கள் முகத்தில் காட்டிய பீதியைப் பார்க்க பயங்கரமாக இருந்தது.
“சார், உடனே உங்களுக்கு வென்டிலைசர் போட்டாக வேண்டும்.”
“எதற்கு நான் நன்றாகத் தானே இருக்கிறேன்” என்று பதில் சொல்வதற்குள், “இல்ல சார், நீங்கள் மூச்சுத் திணறும் நிலைக்கு வந்துள்ளீர்கள். உடனே பெட்-டில் சேர்ந்தாக வேண்டும். அதுவும் இப்போதே சேர்ந்துவிடுங்கள்” என்று சொன்னவர்கள் அடுத்துச் சொன்ன புள்ளிவிவரம் தான் எனக்கும் பீதியை வரவழைத்தது.
“ஒரு பெட்-டுக்கு ஒரு நாளைக்கு 70 ஆயிரம் ரூபாய். குறைந்தது பத்து நாட்களுக்கு இருந்தாக வேண்டும். இப்போதே பாதி தொகையைக் கட்டிவிட்டு நீங்களும் குடும்பத்தினரும் அட்மிட் ஆகி விடுங்கள்” என்று சொல்லி முடித்தபோது, எனது முகமெல்லாம் மழைச்சாரலில் நனைந்ததுபோல் ஆகிவிட்டது.
“இல்லைங்க. நாங்க வெளியில பார்த்துக்கிறோம்” என்று விடாப்பிடியான நிலையில், அந்த மருத்துவமனையைவிட்டு நகர்ந்து, கோயம்பேட்டிற்கு அருகிலுள்ள சித்த மருத்துவமனைக்கு போனோம்.
அங்கும் கூட்டம் இருந்தது. கபசுரக் குடிநீர் உள்ளிட்ட தமிழ் மண்ணின் பாரம்பரிய மருத்துவ சிகிச்சையை அளித்தார்கள்.
ஒரு வார சிகிச்சைதான்.
மீண்டும் உடலை சோதித்தபோது கொரோனா தொற்று அகன்றிருந்தது.
இந்த மருத்துவ முறைக்கான எங்கள் குடும்பத்தில் பாதிக்கப்பட்ட மூவருக்கும் சேர்த்து ஆன மொத்தச் செலவு 5 ஆயிரம் ரூபாய்.
– மணா