தந்தை பெரியார் படுசிக்கனம் என்றும் யாருக்கும் பண உதவி செய்ய மாட்டார் என்றும் தான் எல்லோருமே சொல்லி வருகிறார்கள். பலர் சொல்வதைக் கேட்டு, “அப்படியும் இருக்குமோ?” என்று நான் கூட நினைத்ததுண்டு.
பாகவதரும் கலைவாணரும் சிறை சென்றிருந்த சூழ்நிலையில், பெரியார் அந்த வழக்கு நடத்த பண உதவி செய்திருக்கிறார்.
அதுவும் ஒரு சினிமா நடிகருக்கு? கலைவாணர் என்ற கலைஞர் மட்டும்தான் இப்படி நியாயமான அந்த உதவியைப் பெற்றவர் என்று எனது தலைவர் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொண்டதுண்டு.
இதை இப்போது எழுதக் காரணம் என் இதய தெய்வத்தின் நாட்குறிப்பு ஒன்றிலிருந்து சில தகவல்களை அண்மையில் படித்தேன். அந்தப் பொன் வரிகளை அப்படியே தருகிறேன்.
1947 ஏப்ரல் 25 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை கலைவாணர் வழக்கு தீர்ப்பு சொல்கிற நாள். கலைவாணரும், பாகவதரும் விடுதலை செய்யப்பட்டார்கள்.
தேச விடுதலைக்காகப் போராடி சிறை சென்று மீண்டு வருபவருக்கு எத்தகைய வரவேற்பு இருக்குமோ அது போன்ற வரவேற்பு சிறைச்சாலை வாசலில் அவருக்குக் காத்திருந்தது.
கலைவாணர் மீது மக்கள் அத்தனை நம்பிக்கை வைத்திருந்தார்கள். கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு, குற்றம் நிரூபிக்கப்படாமல் விடுதலை செய்யப்பட்டார்கள்.
அத்தகைய நிலையில் மக்கள் வரவேற்றார்கள் நம்பிக்கை கொண்ட தங்கள் கலைவாணரை.
கலைவாணர் விடுதலை பெற்ற இரண்டாம் நாள் அந்த ஞாயிற்றுக் கிழமை கிரீன் பிக்சர்சில் கலைவாணருக்கு ஒரு பாராட்டு விழா.
அந்நிகழ்ச்சிக்குத் தலைமை இயக்குநர் மேதை கே.சுப்பிரமணியம் அவர்கள். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களும் கலந்து கொண்டார்கள்.
கலைவாணர் இந்நிகழ்ச்சியில் பேசியதை நினைத்து நினைத்துப் பார்த்துச் சிரிக்க கூடியவை என்று எழுதி இருக்கிறார்கள்.
கலைவாணர் அவர்கள் மீதும் மதுரம் அம்மையார் அவர்கள் மீதும் என் இதய தெய்வம் அளவிட முடியாத அன்பு கொண்டவர்கள்.
மதுரம் அம்மையார் தனது கணவர் சிறையில் இருந்த காலத்தில் பட்ட துன்பங்கள் ஏராளம். அதைக் கதைக் கதையாக எனது நாயகன் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
சாவித்திரி தனது கணவன் உயிரை மீட்க எமனிடம் கைநீட்டி மடிப் பிச்சை கேட்ட கதைபோல, திருமதி மதுரம் அவர்களிடம் வழக்குரைஞர்களிடம் “என் கணவரை மீட்டுத் தாருங்கள்” என்று மடிப்பிச்சை கேட்டார்களாம்.
தனக்குத் தெரிந்த பெரியோர்களிடம் எல்லாம் “என் கணவரை விடுதலை செய்ய ஆதரவு தாருங்கள்” என்று கை கூப்புவாராம்.
கலைவாணர்களின் நண்பர்களில் வசதி படைத்தவர்கள் இடமெல்லாம் கைநீட்டி ஆதரவு கேட்கிறார் மதுரம் அம்மையார்.
வழக்குரைஞரிலிருந்து வழக்கு நடத்த பொருளாதார நிலை வரை மதுரம் அம்மையார் துணிவோடும், நம்பிக்கையோடும் தனித்துப் பாராட்டிப் பெற்றவர் என்று அவரை என் அன்புக் கணவர் வியந்து வியந்து பிற்காலங்களில் பல சூழ்நிலைகளில் பாராட்டுவதை நான் கேட்டிருக்கிறேன்.
அந்தச் சமயத்தில்தான் கலைவாணர் மீது பக்தி கொண்டு வாழ்ந்த மதுரம் அம்மையாரிடம் எனக்கு எல்லை இல்லாத மரியாதை ஏற்படத் தொடங்கியது.
பல்வேறு வலிகளைத் தாங்கிக் கொண்டு மறைந்த எஸ்.வி.சகஸ்ரநாமம் அவர்கள் கலைவாணர் குடும்பத்திற்கு பெரிதும் இந்தச் சூழ்நிலையில் உதவினார் என்று கூடத் தலைவர் சொல்லியது உண்டு.
சிறைக்குப் போகும் போது வீடு இல்லாமல் சென்ற கலைவாணருக்கு, சொந்த வீட்டுக்குள் உரிமையோடு நுழைய வழிவகை செய்தவர் எஸ்.வி.எஸ். என்று இந்தத் தோட்டத்துத் தூயவர் சொல்வார்.
– திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் ‘தாய்’ இதழில் ( 12.06.1988) எழுதிய, ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்.’ தொடரிலிருந்து ஒரு பகுதி.