“அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள்” என்பார் இந்த இராமவரம் தோட்டத்து நாயகர்.
இந்த நாட்டுக்கே அறிவையும் இந்த மக்களுக்கெல்லாம் அன்பையும் ஊட்டுகிற பேரறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் தவறில்லை என்று கூட அவா் சொன்னது உண்டு.
அறிஞர் அண்ணாவோடு நமது இதய தெய்வத்துக்கு ஏற்பட்ட தொடர்பு என்பது மறக்க முடியாத ஒன்று.
1946-ம் ஆண்டு ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ என்ற நாடகத்தில் நடித்தபோதுதான் அன்பு அண்ணன் டி.வி.நாராயணசாமி அவர்கள் மூலமாக அண்ணாவைச் சந்தித்தார் நம் தலைவர்.
இந்த ‘சிவாஜி கண்ட இந்து சாம்ராஜ்யம்’ நாடகம் அறிஞர் அண்ணா அவர்களால் எழுதப்பட்டது.
என் அன்பிற்குரிய இதய தெய்வம் அவர்கள் அடிக்கடி சொல்லுகிற ஒன்றை இங்கு அப்படியே தருவது சரியாக இருக்கும் என்று கருதுகிறேன்.
“நான் காங்கிரஸில் இருந்து விலகி ஒதுங்கி இருந்த காலம். நெற்றி நிறைய விபூதி இருக்கும். கதர் ஆடைதான் கட்டி இருப்பேன். அப்படிப்பட்ட தோற்றத்தில்தான் அறிஞர் அண்ணாவைக் கண்டேன்.
அப்போது எவ்வளவு அன்போடு இருந்தாரோ மாறாத அந்த அன்பை நான் கடைசிவரை அவரிடம் கண்டேன்.
யார் வந்தார், எதற்காக வந்தார் எந்தக் கட்சிக்காரர் வந்தார் என்பதைப் பாராமல், ‘மனிதன் வருகிறான்’ என்று அன்போடு என்னை வரவேற்றவர் அவர்.
இந்த அறிமுகத்துக்கெல்லாம் பிறகு ஏழெட்டு ஆண்டுகள் கழித்து அவரது கொள்கைகளை நன்கு புரிந்து கொண்ட பின்னரே கழகத்தில் சேர்ந்தேன்” என்பார் என் தலைவர்.
ஒருமுறை நன்னிலம் பகுதியில் அறிஞர் அண்ணா அவர்கள் பேசும்போது, “மரத்தில் பூவரசு காயாக இருந்தது. இப்போது கனியாக இருக்கிறது” என்றார்.
இது யாரைக் குறித்துச் சொன்ன வார்த்தை என்று நினைக்கிறீர்கள்? என் வீட்டு இதயக்கனியைப் பற்றித்தான்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த கொஞ்ச காலம் வரை யாராவது அண்ணா என்று அழைக்கும்போது, “பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதான் எனக்கு வருகிறது” என்பார் என் தலைவர்.
அத்தனை அன்பு இந்த மூன்றெழுத்துக்காரருக்கு அந்த மூன்றெழுத்துக்காரர் மீது உண்டு.
இவர் அண்ணாவோடு ஐக்கியமானது ரொம்ப ஆழமானது. “காங்கிரஸில் இருந்தபோது நான் மிகவும் தீவிரவாதியாக இருந்தேன். அப்படிப்பட்ட நான் தி.மு.க. உறுப்பினரான பிறகும்கூட கதர் கட்டுவேன்.
அறிஞர் அண்ணா அப்போதும் என்னைத் தவறாகப் பார்த்ததில்லை. கதர் ஆடை அணிந்தும், பகவத்கீதை படித்தும், இராட்டையில் நூல் நூற்றும் பழகிய அந்தக் காலக் காங்கிரஸ்காரன் தான் நான்” என்று பலமுறை மனம்விட்டு சிரிப்பார் என் தலைவர்.
காங்கிரசை விட்டு விலகிய மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் பேரறிஞர் அண்ணா எழுதிய ‘பணத்தோட்டம்’ படித்த பிறகுதான் தி.மு.க.வில் சேர்ந்தார் என்பது அநேகம் பேருக்குத் தெரிய வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன்.
ஒரு புத்தகம் அவரை அறிஞர் அண்ணாவிடம் ஆழமாகப் கிடைத்திருக்கிறது என்று முதலில் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.
ஆனால் உண்மையில் பேரறிஞர் அண்ணாவிடம் இதற்கும் மேலாக ஏதோ ஒன்றை ஆழமாகப் படித்தவர் என் நாயகர்.
இங்கு இன்னொரு விஷயத்தைச் சொல்லியே ஆக வேண்டும். புத்தகம் படிப்பது என்பது அவருக்கும் பொழுதுபோக்கு இல்லை. அதை ஒரு வேள்வி மாதிரி அவர் செய்வார் என்பதுதான் உண்மை.
படிப்பதும், படித்த புத்தகங்களைப் பாதுகாப்பதும் அவருக்கே உரிய அரிய கலை. அதுபோலவே டி.வி, வானொலி நிகழ்ச்சிகளை நேரம் கிடைக்கிற போதெல்லாம் பார்ப்பதும், கேட்பதும் அவரது வழக்கம்.
அப்படிப் பார்க்கிறபோதும், கேட்கிறபோதும் பாராட்ட வேண்டியதைப் பாராட்டுவதிலும் முரண்பட்ட இடத்தைச் சுட்டி காட்டுவதிலும் எப்போதும் தயக்கம் காட்டியதே இல்லை.
– திருமதி ஜானகி எம்.ஜி.ஆர் ‘தாய்’ இதழில் எழுதிய, ‘எனக்கு மட்டுமே தெரிந்த எம்.ஜி.ஆர்.’ தொடரிலிருந்து ஒரு பகுதி.