‘இலக்கணச் சிங்கம்’ ஆ.பூவராகம் பிள்ளை!

இலக்கணத் துறையில் ஈடும் எடுப்பும் அற்ற பேராசிரியராகத் திகழ்ந்தவர், ‘இலக்கணச் சிங்கம்’ எனப் போற்றப்படும் ஆ. பூவராகம்பிள்ளை.

சிதம்பரத்தில் உள்ள இராமசாமி செட்டியார் நகர உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகத் தன் பணியைத் தொடங்கிய இவர்,

அண்ணாமலை அரசரின் மீனாட்சி கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகவும், அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் பேராசிரியராகவும் பணியாற்றியவர்.

அண்ணாமலையில் பணியாற்றிய காலத்தில், அவருடன் சுவாமி விபுலானந்தர், நாவலர் சோமசுந்தர பாரதியார், கா.சு.பிள்ளை, அ.சிதம்பரநாதனார், தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், வெ.ப.கரு.இராமநாதன் செட்டியார் முதலிய பேரறிஞர்களும் உடன் பணியாற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலக்கணத்தில் ஆழ்ந்த புலமையும் விரிந்த சிந்தனையும் வாய்க்கபெற்ற இவர், தன் வாழ்நாளில் செயற்கரிய பணியாக ஒன்றை நிறைவு செய்தார்.

இலக்கண உலகில் கடினமான உரை எனச் சொல்லப்படுவது சேனாவரையர் எழுதிய சொல்லதிகார உரையாகும். இவர் பெயரிலேயே இந்நூல் ‘சேனாவரையம்’ என வழங்கப்படுகிறது.

இவ்வுரை அனைத்துப் பல்கலைக்கழக முதுகலை வகுப்புகளுக்கும் பாடமாக வைக்கப்பட்டிருந்த நிலையில், மாணவர்கள் அவ்வுரையைப் புரிந்துகொள்ள முடியாமல் தவித்தனர்.

வடமொழியிலும், தமிழ்மொழியிலும் ஆழ்ந்த புலமைபெற்ற அறிஞர்கள் மட்டுமே சேனாவரையரின் உரையைப் படித்துத் தெளிவுபெற முடியும்.

மிகக் கடினமான அவ்வுரை பூவராகம் பிள்ளைக்குக் கற்கண்டாக இனித்தது. அதன் விளைவாக எழுந்ததுதான் ‘சேனாவரையர் உரை விளக்கம்’ எனும் நூல்.

இந்நூலில் ஒவ்வொரு நூற்பாவின் பொருளைப் பற்றி விளக்கம் அளித்து, அதுபற்றிய உரையாசிரியர்கள் கூறும் மாறுபட்ட பொருளையும் விளக்கி, அவ்வுரையாசிரியர்களின் உரைகளில் காணப்படுகின்ற குற்றங் குறைகளை எடுத்துரைத்து, இறுதியாக தம் கருத்தை வலியுறுத்தி விளக்குகின்ற போக்கு எளிமையும் அழகும் வாய்ந்தது.

இத்தகைய அணுகுமுறையின் மூலமாக மாணவர்களுக்கு மிக எளிதாக இலக்கண நூற்பாக்களின் பொருளைத் தெளிவுபடுத்த முடிந்தது.

இவர் வைணவத்திலும் ஆழங்காற்பட்டவர். வைணவ இலக்கியத்தில் ஏற்பட்ட பெருவிருப்பத்தின் காரணமாக வைணவ மாநாடுகள் பலவற்றை நடத்தினார்.

தமிழகமெங்கும் சென்று வைணவ நெறியின் பெருமையைக் கூறி, நாலாயிர திவ்யப் பிரபந்தச் சொற்பொழிவாற்றினார்.

இவர் படைத்த “திருவாய்மொழி விளக்கம்’, “திருமங்கையாழ்வார் பெரிய திருமொழி’ என்னும் நூல்கள் வைணவர்களால் போற்றப்படும் பெருமைக்குரியது. இவை மட்டுமன்றி, “புலவர் பெருமை’ எனும் நூலையும் இயற்றியுள்ளார்.

பேரா.தனிநாயகம் அடிகளார், பூவராகம் பிள்ளையின் இலக்கணப் புலமையைக் கேள்வியுற்று, இவரைத் தூத்துக்குடிக்கு வரவழைத்து, வீரமாமுனிவர் இயற்றிய ‘தொன்னூல் விளக்கம்’ எனும் இலக்கண நூலைப் பாடம் கேட்டதாகக் கூறுவர். இச்சிறப்பு வேறு எவருக்கும் வாய்க்காத பெரும்பேறு!

16.8.1930-ஆம் ஆண்டு காசிமடம் இவருடைய இலக்கணப் புலமையைப் பாராட்டி ஆயிரம் (அந்தக் காலத்தில்) ரூபாய் பரிசளித்துச் சிறப்பித்துள்ளது.

எண்ணற்ற ஒழுக்க சீலர்களையும், தலைசிறந்த மாணவர்களையும் உருவாக்கிய, ‘இலக்கணச் சிங்கம்’ பேரா.ஆ. பூவராகம் பிள்ளையை நினைவுகூர்வது தமிழர்தம் தலையாய கடமையாகும்.

– முனைவர் க.முருகேசன்

Comments (0)
Add Comment