மிருகக் காட்சி சாலைகளை மூடுங்கள்!

கர்நாடகாவில் உள்ள கித்துார் ராணி சென்னம்மா மிருகக் காட்சி சாலை பிரபலமானது. இங்கு 38 மான்கள் இருந்தன. இவற்றில் 28 மான்கள் திடீரென மரணமடைந்தன.

உலகில் உள்ள மிருகக் காட்சி சாலைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்ற எண்ணத்தை இச்செய்தி இன்னும் வலுவாக்குகிறது.

விலங்குகளின் மரணம் மட்டுமல்ல… இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன.

வனத்தில் சுதந்திரமாகத் திரியும் விலங்குகளை, மிருகக்காட்சி சாலைக்குள் அடைத்து வைக்கும்போது அவை ‘ஜூகோசிஸ்’ எனப்படும் மனநிலை பாதிப்புகளுக்கு ஆளாகின்றன என்கின்றனர் விலங்குகள் ஆராய்ச்சியாளர்கள்.

பார்வையாளர்கள் வெறித்துப் பார்ப்பதும், அசாதாரண ஒலிகளை எழுப்புவதும்கூட, விலங்குகளின் மன அழுத்தத்தை அதிகரிக்கிறது.

இதனால்தான் மிருகக்காட்சி சாலையில் உள்ள விலங்குகள், திரும்பத் திரும்ப ஒரே செயலைச் செய்யும். அதாவது சுற்றிச் சுற்றி நடந்துகொண்டே இருக்கும்.

அதேபோல தலையை வேகமாக அசைக்கும். அது மட்டுமல்ல, சில விலங்குகள் தன்னைத் தானே காயப்படுத்திக் கொள்வதும் உண்டு.

தவிர, விலங்குகள் வாழும் இடத்திலிருந்து, கால நிலை ஒத்துவராத வேறு பகுதிகளுக்கு மாற்றி மிருகக்காட்சி சாலையில் அடைக்கும்போது உடல் நிலையும் பாதிக்கப்படுகிறது.

“அதீத வெப்பம்.. மிருகக்காட்சி சாலையில் விலங்குகளுக்கு மின் விசிறி வைக்கப்பட்டது… தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்பட்டது” என்றெல்லாம் படிக்கிறோமே.. இதிலிருந்தே அந்த மிருகங்களின் சோகத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

சில நாடுகளில், பொருளாதாரச் சூழல் சரியில்லாததால், மிருகக்காட்சி சாலையில் விலங்குகள் பட்டினிக் கிடக்கும் கொடுமையும் நடக்கிறது.

உதாரணம், இலங்கையில் பொருளாதார வீக்கம் உச்சத்தில் இருந்த காலத்தில் அங்கு இதுபோல நடந்தது.

இன்னொரு பக்கம், விலங்குகளைப் பார்வையாளர்கள் தொல்லை செய்வதும் நடக்கிறது.

இந்தோனேஷியாவில் பான்டுங் மிருகக் காட்சி சாலையில், பார்வையாளர் ஒருவர், தான் பிடித்துக்கொண்டு இருந்த சிகரெட்டை, கூண்டினுள் தூக்கி எறிந்தார்.

அங்கிருந்த உர்ராங்குட்டான் குரங்கு எடுத்து புகைத்தது. அதற்கு இருமல், புரையேறிவிட்டது.

இந்த செய்தி வைரலானது. இதே மிருகக் காட்சி சாலையில் கவனிப்பின்றி யானை ஒன்று இறந்ததும் நடந்தது.

இன்னொரு பக்கம், சர்க்கஸ் போல மிருகக்காட்சி சாலை விலங்குகளையும் தொல்லைப்படுத்துவதும் நடக்கிறது.

சீனாவின், ஹுனான் பகுதியில், மிருகக்காட்சி சாலையில் இப்போதும் இது நடக்கிறது. இங்கு பல விதமான புலிகள் பராமரிக்கப்படுகின்றன.

இந்தப் புலிகளுடன் கயிறு இழுக்கும் போட்டியை நடத்த, மிருகக்காட்சி சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. அதாவது, கூண்டுக்குள் அடைக்கப்பட்ட புலியுடன், சிறு துவாரத்தின் வழியாக கயிறு செலுத்தப்பட்டு இருக்கும்.

அந்தக் கயிற்றில், கோழிக் கறி சாக்கு பையில் கட்டப்பட்டிருக்கும். கூண்டுக்கு வெளியே, பார்வையாளர்கள், மறுமுனை கயிறைக் கொண்டு இழுத்து, புலியுடன் விளையாடலாம்.

இப்படி, பசி, பார்வையாளர்கள் தொல்லை ஆகியவற்றால் கூடுதல் துன்பத்தை அனுபவிக்கும் மிருகங்கள் ஆக்ரோசமாகின்றன. பார்வையாளர்களைத் தாக்குகின்றன.

மொராக்கோவில் உள்ள ரபாத் மிருகக் காட்சி சாலையில் யானையால் தாக்கப்பட்டு ஏழு வயது சிறுமி உயிரிழந்தார்.

கர்நாடகாவில் உள்ள பன்னர் கட்டா உயிரியல் பூங்காவில் 2017-ம் ஆண்டு நடந்தது இன்னும் கொடுமை. 35 வயது காவலாளி அஞ்சநேயா, இரண்டு வெள்ளைப் புலிகளால் தாக்கப்பட்டு உயிரிழந்தார்.

விலங்குகளின் மனநிலை அறியாது, தொல்லை கொடுத்து அவற்றால் தாக்கப்படுவது ஒரு பக்கம். இப்படி நிர்ப்பந்தத்தில் தாக்கும் விலங்குகளைக் கொல்வது மறுபுறம்.

ஆம்… அமெரிக்க மிருகக்காட்சி சாலையில், குரங்குகள் உள்ள பகுதியில் அத்துமீறி குழந்தையுடன் நுழைந்தார் ஒரு நபர். அவரை குரங்கு தாக்க முற்பட, குரங்கு சுட்டுக்கொல்லப்பட்டது.

இப்படி பல வகையிலும் மிருங்களுக்கே தீமை தருவதுதான் மிருகக்காட்சி சாலைகள். இவை ஒழிக்கப்பட வேண்டும்.

“பிறகு, விலங்குகளைப் பற்றி மக்கள் தெரிந்துகொள்வது எப்படி” என்ற கேள்வி எழும்.

அதற்கு எளிதான தீர்வு இருக்கிறது.

தற்போது நவீன அறிவியல் வளர்ந்துவிட்டது.

3-டி பாணியில் பெரிய திரை அமைத்து, வன விலங்குகள் குறித்த திரைப்படங்களைத் திரையிடலாம்.

சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கூட, 3D மற்றும் 7D திரையரங்கம் அமைக்கும் முயற்சி நடக்கிறது.

இப்படி ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு திரையரங்கை அமைக்கலாம்.

இதன்மூலம், மரங்கள், விலங்குகள் குறித்த இயற்கை மீதான அறிவைப் பெருக்கிக் கொள்ள முடியும். விலங்குகளும் நிம்மதியாக இருக்கும்!

– டி.வி.சோமு

Comments (0)
Add Comment