கவிஞர் கருணானந்தம் படைப்புகளைக் கொண்டாடுவோம்!

நூல் அறிமுகம்:

* கவிஞர் கருணானந்தம் 40 ஆண்டுகளுக்கு மேலாக பகுத்தறிவுப் பாதையில் பயணித்து திராவிட இயக்கத்தின் நாயகர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோரோடு நெருங்கிப் பழகி அவர்களுடைய கொள்கைகளை மக்களிடம் சேர்ப்பதில் பங்காற்றியவர்.

* கவிஞர் தஞ்சை சுங்கந் தவிர்த்த சோழன் திடல் எனும் இடத்தில் 15.10.1925 அன்று பிறந்தார். தஞ்சையில் பள்ளி படிப்பு. குடந்தையில் கல்லூரி படிப்பு. 1946ம் ஆண்டு மத்திய அரசின் தபால் தந்தி துறையில் அஞ்சல் பிரிப்பாளர் பணியில் சேர்ந்தார்.

23 ஆண்டுகள் பணியாற்றிய பின்பு தானாக பதவி விலகல். 1969ல் மாநில அரசில் செய்தி மக்கள் தொடர்பு துறையில் பிரச்சார அலுவலராக நியமனம். 1976ல் நெருக்கடி காலத்தில் கட்டாய ஓய்வு.

இறுதி வரை பகுத்தறிவுவாதியாக வாழ்ந்து 27.09.1989 அன்று இயற்கை எய்தினார்!

* அவரது சுருக்கமான வாழ்க்கை வரலாற்றைப் படித்தீர்கள். அவரது மறுபக்க வாழ்க்கையில் திராவிட இயக்கங்களும் அண்ணாவும் பெரியாரும், கவிதைகளும் கழகப் பணிகளும் அஞ்சலக தொழிற்சங்க பணிகளும் எல்லாம் ஒன்றாகக் கலந்து,

அவரை ஒரு பன்முக வித்தகராக, பகுத்தறிவாளராக, வெளிச்சத்திற்கு வர விரும்பாத கொள்கையாளராக இறுதிவரை வாழ்ந்ததை இந்த நூல் மூலம் அறிந்துகொள்ள முடிகின்றது!

* கவிஞர் கருணானந்தம் அவர்களின் நூற்றாண்டு 15.10.2025 அன்று நிறைவு பெற்றது. அதையொட்டி நடைபெற்ற விழாவில் வெளியான நூல்களில் இதுவும் ஒன்று.

இந்த தொகுப்பு நூலில் – பூக்காடு (1966), கனியமுது (1970), சுமைதாங்கி (1978), அண்ணா காவியம் (1974) ஆகிய நான்கு கவிதைத் தொகுப்பு நூல்களும் அண்ணா சில நினைவுகள் (1986) என்ற உரைநடை நூலும் ஒரே தொகுப்பாக, சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது!

* இந்தத் தொகுப்பில் வந்துள்ள பூக்காடு கவிதை தொகுப்பும் அண்ணா காவியம் கவிதை தொகுப்பும் அண்ணா சில நினைவுகள் உரைநடை நூலும் திராவிட இயக்கத்தினரிடையே மிகவும் பிரசித்தி பெற்ற படைப்புகள் ஆகும் !

* அண்ணா காவியம் நூலுக்கு தந்தை பெரியார் எழுதிய பாராட்டுரை நம்மை திகைக்க வைக்கிறது! அரிதிலும் அரிதாகத்தான் பெரியார் யாரையும் பாராட்டுவார்.

அதுவும் தனது பிரியமான தொண்டரை நண்பர் என குறிப்பிடும் அந்த பெருந்தன்மைக்கு சான்று :

“நண்பர் ஆனந்தம் கவிதை இயற்றுவதில் வல்லவர். அக் கவிதை புனைப்பில் மிக்க சுவையும் அருங்கருத்துகளும் மலிந்திருப்பது மிகுதியும் பாராட்டிற்குரியதாகும்.

இவையாவும் அரிய கருத்துக்களுடன் சுவையாக அழகுபடத் தொகுத்திருப்பதுடன் மிக்க எளிய நடையில் வசனம் போல் படித்து உணரும் தன்மையில் தொகுத்திருப்பது மிகுதியும் பாராட்டத்தக்கதாகும்!” (15.12.1972)

* பூக்காடு கவிதைத் தொகுப்பு முழுவதுமே கதைப் பாடல்கள். அதற்கு அண்ணா எழுதித் தந்த அடுக்கு மொழி அணிந்துரை ஒரு அழகு தமிழ்ச் சித்திரம் :

“அவர் (கருணானந்தம்) அலுவலகத்தில் அஞ்சல் அனுப்பும் பணியாளர். ஆமாம், அம்மா சௌக்கியமா? அத்தானுக்கு இருமல்! அறுபது அனுப்பி வை! எனும் அஞ்சல் தானே என்பீர்! ஆமாம்… ஆனால் அதுமட்டுமா ஆனந்தம் அனுப்பும் அஞ்சல்?

பெருமூச்சும் புன்னகையும், பேய்ச்சிரிப்பும், கனலும் கண்ணீரும் காண்கின்றார்! அவை கூறும் செய்திகளையும் தருகின்றார் அருங் கவிதை வடிவாக்கி அஃதே இந்நூல்!”

* கலைஞர் கருணாநிதி தான் கருணானந்தத்தின் முதல் கவிதை தொகுப்புக்கு ‘பூக்காடு’ என்று பெயர் சூட்டியவர். அந்த கலைஞரின் கவித்துவமான அணிந்துரை:

“பூக்காடு – புகழ் மணக்கும் தமிழ்க் காடு! புலவர் போற்றும் அறிவுக் காடு! நாடு போற்றும் கவிதைக் காடு! உண்மைகளை உலகுக்கு அறிவிக்கும் ஒளிக்காடு!” 

* அண்ணாவின் மறைவுக்குப் பின் வெளியான ‘அண்ணா காவியம்’ இதற்கு முன்னர் வெளிவந்த புலவர் குழந்தையின் ‘இராவண காவியம்’ அடைந்த புகழையும்‌ வெற்றியையும் போல இன்றும்‌ பேசப்படுகின்ற கவிதைப் படைப்பு!

அந்நூலுக்கு அன்று தளபதி வீரமணி என அறியப்பட்ட ஆசிரியர் வீரமணி அய்யா எழுதிய அணிந்துரை :

“இது அண்ணா அவர்களின் காவியம் மாத்திரம் அல்ல… இது தமிழகத்தின் காவியம் !

அண்ணா அவர்கள் அய்யாவின் ஒலிபெருக்கி !

அண்ணாவின் எழுத்திலே – தமிழ் உணர்வு இருக்கும்; இன உணர்வு இருக்கும்; பகுத்தறிவு உணர்வு இருக்கும்.

இந்த மூன்று அடிப்படை உணர்வுகளும் சேர்ந்தது தான் – முத்தமிழ் போல இணைந்தது தான் – அண்ணாவின் எழுத்து என்பதை மிக ஆழமாக இந்த நூலிலே சொல்லியிருக்கின்றார் கவிஞர் அவர்கள் !”

* சுமைதாங்கி கவிதைத் தொகுப்பு நூலில், கவிஞர் கருணானந்தம் எழுதியுள்ள முன்னுரை அவருடைய தன்னிலை விளக்கமாக – அவரது கவிதைகள் பற்றி அவரே எழுதியது:

“கதை, கட்டுரைகள் எழுதித் தமிழில் பணியாற்றிட எண்ணித் துவங்கினேன். எனினும் கருத்துக்களைச் சுருக்கமாகவும் தெளிவாகவும் விளக்கிடக் கவிதையே நல்ல கருவி எனக் கருதி பின்னர், செய்யுள் யாத்தலையே விழைந்து, தொடர்ந்து எழுதி வரலானேன்.

என் கவிதைகளில் அங்கதச் சுவையும் நகைச்சுவையும் மிகுந்து காணப்படுவதாக திறனாய்வாளர்கள் கருதுகின்றனர்.

கதைபொதி கவிதைகளே எனக்கு மெத்த விருப்பமானவை!
எவையாயினும் யாப்புக்குட்பட்ட மரபு வழிக்கவிதைகளே நான் எழுதுவன‌!” 

* இனி – நூலுக்கு மகுடம் வைத்தாற் போல் அமைந்துள்ள தொகுப்பு அண்ணா சில நினைவுகள் பற்றிய என்னுரை:

அண்ணாவோடு நெருங்கிப் பழகிய இராம. அரங்கண்ணல் தனது அனுபவங்களை ‘நினைவுகள்’ என்ற நூலில் பதிவிட்டுள்ளார்.

அவரைப் போன்றே அண்ணாவின் நிழல்களில் ஒருவரான கவிஞர் கருணானந்தம் ‘அண்ணா சில நினைவுகள்’ நூலில்,

அண்ணா பற்றியும், பெரியார் பற்றியும், கலைஞர் பற்றியும், ஈ.வி.கே சம்பத் பற்றியும், திராவிட திரைப்பட நடிகர்கள் பற்றியும், திமுக மாநாடுகள் பற்றியும், திமுக தொண்டர்கள் பற்றியும் சுவையான தகவல்களை மலை போல எழுதிக் குவித்துள்ளார்!

* அண்ணாவுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்று நூலில் தேடித் தேடிப் பட்டியலிட்டேன்.

அண்ணாவுக்கு நெத்திலிமீன் கருவாடு பிடிக்கும்; இறால் மீன் குழம்பு பிடிக்கும்; தூள் பக்கோடா பிடிக்கும்; முட்டை தோசை மிகவும் பிடிக்கும்; மணக்கும் மட்டன் பிரியாணி பிடிக்கும்;

சீட்டு விளையாடப் பிடிக்கும்; இரவெல்லாம் விழித்து எழுதுவது பிடிக்கும்; நீண்ட நேரம் தூங்கப் பிடிக்கும்; தாமதமாக தயாராகப் பிடிக்கும்; நாயன இசைப் பிடிக்கும்;

தந்தை பெரியார் பிடிக்கும்; பெரியாரின் தலைமை என்றும் பிடிக்கும்; வள்ளுவரின் குறள் பிடிக்கும்; மேடையிலே மணிக்கணக்கில் பேசப் பிடிக்கும்; மாணவர்களோடு உரையாடப் பிடிக்கும்;

மாநாடுகள் நடத்தப் பிடிக்கும்; திமுக தொண்டர் வீட்டில் சாப்பிடப் பிடிக்கும்; இரவெல்லாம் கண் விழித்து கார் பயணம் செய்யப் பிடிக்கும்; கழக உறவுகளின் அன்பு பிடிக்கும் ;

பனியன் இல்லாமல் வெறும் உடம்பில் படுத்துத் தூங்கப் பிடிக்கும்; தொண்டனுக்கு கொடுத்த வாக்குப்படி சந்திக்கப் பிடிக்கும்; தமிழ் பிடிக்கும்; தனது எண்ணத்தை எழுத்தால் வடிக்கப் பிடிக்கும்; பெரியாரின் கொள்கைகளைச் செயலாற்றப் பிடிக்கும்; ஆம் ! இன்னபிற எத்தனையோ பிடிக்கும்!

ஆனால், தமிழர்களுக்கோ அந்த அண்ணாவை மிகவும் பிடிக்கும்!

* அண்ணாவின் இறுதி நாட்கள் பற்றிய கவிஞரின் நினைவுக் கட்டுரை நம் கண்களில் நீரை வரவழைக்கின்றன.

அண்ணா – பெரியாரின் உறவு, தந்தை தனயனின் உறவைப் போல… அதற்கும் மேலாக இருந்ததை காண முடிகின்றது.

இதோ :

* ‌ அண்ணா புற்று நோயால் பாதிக்கப்பட்டு உடல் குன்றிய சேதியறிந்து அடுத்த நாளே திருச்சியிலிருந்து தனயனைப் பார்க்க விரைந்து வந்தார் தந்தை பெரியார்!

அண்ணாவைக் கண்காணிக்கும் மருத்துவர்களிடம், “அய்யா! தமிழ் நாட்டின் நிதி போன்றவற்றை உங்களை எல்லாம் நம்பி ஒப்படைக்கிறேன்!” என்று பெரியார் கண்கலங்கச் சொன்னாராம்!

* சில நாட்களில் அண்ணா அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு செல்ல முடிவாகிறது. செய்தியறிந்த பெரியார் அப்போது அரசு மருத்துவமனை வரை தனது வீல் சேரிலேயே சென்று பார்த்தார்.

அவர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டு அண்ணாவின் காதருகே குனிந்து, தம் வாயைக் காதில் வைத்து ஏதோ சொன்னார்! பிறகு தனது மடியை அவிழ்த்து எதையோ எடுக்க முனைந்தாராம்!

* அண்ணா, கையைக் கலைஞர் இருந்த திசையில் காட்டி முகத்தில் புன்சிரிப்பை தவழவிட்டு, “கருணாநிதி கிட்ட சொல்லுங்க அய்யா!” என்றாராம்.

மெல்லிய குரலில் மறுபுறம் நாற்காலியைத் திருப்பி, அய்யா கலைஞரின் கழுத்தில் தன் கையை வைத்து, அவர் தலையை வளைத்து, அருகே இழுத்து,

“இதிலே இருபத்தைந்தாயிரம் (ரூ.25,000) பணம் இருக்குது. அண்ணாவுக்கு வைத்திய செலவுக்கு வச்சுக்குங்க!” என்றாராம்.

“இப்ப பணம் இருக்குங்க அய்யா! அப்புறம் பாத்துக்கலாம்!” எனக் கூறினாராம் கலைஞர்.

* இந்த நினைவுகளைப் பதிவு செய்த கவிஞர் அதை இவ்வாறு தொடர்கிறார் – “சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஈயாதவர், கொடாதவர், கஞ்சத்தனம் உள்ளவர், கருமி, மக்களால் உலோபி என்றெல்லாம்,

மக்களால் விவரமறியாமல் எண்ணப்பட்ட பெரியார் – தேவைப்பட்ட நேரத்தில் கருணை உள்ளவராகவும் திகழ்வார் என்பதற்கும், அண்ணாவின் உயிரைக் காப்பாற்ற அவர் எதற்கும் தயார் என்பதை மெய்யாகவும் இந்நிகழ்ச்சிக்கு இணையாக எதையேனும் எடுத்துரைக்க இயலுமா? 

* அந்த காலத்தில் அண்ணாவுக்காக மொத்தச் மருத்துவச் செலவு ரூ.90,000/. அதில் பெரியார் தர முன் வந்த தொகை ரூ.25,000/ என்பது மிகப் பெரிய பங்கல்லவா?”  என்று வியப்போடு குறிப்பிட்டுள்ளார் கவிஞர்!

* கவிஞர் கருணானந்தத்தின் நூற்றாண்டு நிறைவில் அவருக்கு மிகச் சிறந்த அஞ்சலியாக‌; அண்ணாவுக்கு நினைவஞ்சலியாக; பெரியாருக்கு நினைவு காணிக்கையாக இந்த படைப்புகள் அமைந்து விட்டதில் மகிழ்ச்சி!

* இந்தத் தொகுப்பை சிறப்பாக உருவாக்கிய தொகுப்பாசிரியரையும் வெளியிட்ட நல்லோர்களையும் திராவிட இயக்கச் சிந்தனையாளர்கள் ஒவ்வொருவரும் வாழ்த்தவும் பாராட்டவும் கடமைப்பட்டுள்ளார்கள் !

****
நூல்: கவிஞர் கருணானந்தம் படைப்புகள்
தொகுப்பாசிரியர்: பேராசிரியர் இளங்கோ நல்லரசு 
இராணி பதிப்பகம்
பக்கங்கள்: 692
விலை: ரூ. 750/-

– பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர்.

Comments (0)
Add Comment