வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கணும்!

எழுத்தாளர் கோவை ஞானி

மதுரையில் நண்பர் திரு மு.ராமசாமியின் வீட்டில் தான் முதன்முதலாக திரு.கோவை ஞானியைச் சந்தித்தேன்.

வெள்ளை வேட்டியும், வெள்ளைச் சட்டையும், நரைத்த தலையுமாய் இருந்தபோதும் முகமெல்லாம் அடிக்கடி சிரிப்பு வந்து நகரும் முகத்தோடு தான் இருந்தார். 

மு.ராமசாமி வீட்டிலிருந்து மதுரை டவுன் ஹால் ரோட்டிற்கு அருகிலுள்ள பிரபலமான ஒரு அசைவ ஓட்டலின் பெயரை ராமசாமி சொன்னதும், சிரிப்புப் பொங்க, “உடனே போகலாமே” என்றவர் போகிற வழி வரைக்கும் உற்சாகத்துடன் பேசிக் கொண்டே வந்தார்.

குறிப்பிட்ட அந்த ஓட்டலுக்குள் நுழைந்ததும் கமழ்ந்த வாசனையை நுகர்ந்தவர், “பாருங்க.. இந்த வாசனையே சாப்பிடறத எப்படியெல்லாம் தூண்டி விடுது பாருங்க.” என்றார்.

சாப்பாட்டு மேஜைக்கு முன் அனைவரும் உட்கார்ந்தோம். அந்த ஓட்டலுக்கே உரித்தான சிறப்பு அசைவ உணவு வகைகளை ஆர்டர் செய்தார் ராமசாமி.

அவற்றில் ருசியுடன் பல அசைவ உணவுகள். குறிப்பாக அயிரை மீன் குழம்பு, நன்கு வறுத்த மட்டன் சுக்கா வாசனையும் தூக்கி அடித்தன.

அவற்றை ஆற அமர ருசித்து சாப்பிட்டபோதுதான், “வாழ்வின் ஒவ்வொரு துளியையும் ரசிக்கணும்” என்றார்.

அப்போதெல்லாம் நல்ல பார்வைத் தெளிவுடன்தான் இருந்தார். அதன்பிறகு பல ஆண்டுகள் கழித்து கோவையிலுள்ள ஞானி அவர்களின் வீட்டிற்குப் போயிருந்தேன்.

‘தீராநதி’ இதழுக்கான விரிவான நேர்காணலுக்காக வருவதாகச் சொன்னபோது, இரண்டு அமர்வுகளாக அவருடன் பல மணி நேரங்கள் கழிந்தன.

அவருக்குப் பக்கத்தில், வாசிப்புத் துவங்கி எழுத்திற்கும் உதவியாளர்கள் இருந்தார்கள்.

பல மணி நேரம் நெருங்குகிற அளவுக்கு நேர்காணல் நீண்டுகொண்டே போனாலும் எந்த விதத்திலும் அவருடைய பேச்சில் சலிப்பின் சாயல் துளியும் இல்லை.

பார்வையே முழுக்க இழந்திருந்தாலும், செவிப்புலன் கூர்மையடைந்திருந்தது.

வாசனை நுகரும் தன்மையும் தீவிரப்பட்டிருந்தது. தொடு உணர்வும் துல்லியப்பட்டிருந்தது.

வெளிச்சமற்ற ஓர் உலகிற்குள் அவர் வாழ நேரிட்டாலும், அது குறித்து அவரிடம் கேட்டபோது, மென்மையாக இப்படிச் சொன்னார், 

“சர்க்கரை வியாதி இருக்க இருக்க முற்றிக் கொண்டே வந்தது. பார்வையும் குறைந்து கொண்டே வந்தது. என்னைச் சுற்றியிருந்த உலகம் மங்கலாகிக் கொண்டே வந்தது. வாசிக்கும் திறன் குறைந்தபோது, அதை இயல்பாக என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. 

இனி என்னைச் சுற்றி வெளிச்சமற்ற ஒரு சூழல்தான் என்று நிச்சயமானபோது, மனதளவில், அதை எதிர்கொள்வதற்கு முதலில் சிரமப்பட்டேன். 

ஆனால், முழுக்க இருள் மயமான உலகிற்குள் தான் இனி வாழ்ந்தாக வேண்டும் என்கிறபோது, அந்த இருளும் சுற்றியிருந்த சூழலும் முதலில் அந்நியமாய் தோன்றியது.

அதற்கு பிறகு படிப்படியாக, ‘இருள் சூழ்ந்தாலும் இனி இந்த உலகிற்குள் தான் நாம் வாழ்ந்தாக வேண்டும்’ என்று மனதிற்குள் திடமான நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டேன்.

சுற்றியுள்ள வீட்டில்கூட எந்தப் பொருளும் எந்த அறையும் அவற்றின் தூரமும் கூட எனக்கு மனப்பாடமாகி இருந்தன. சில நாட்களுக்குள் வீட்டில் எந்தப் பொருள் எங்கிருக்கும் என்பதை என்னால் உணர முடிந்தது.

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மூலம் வாசிக்க முடிந்தது. அவர்களை வைத்து எழுத முடிந்தது. சிரமங்கள் இருந்தாலும்கூட மேடையில் பேச முடிந்தது. 

ஆனால், இந்த நிலை வருவதற்கே பல மாதங்கள் பிடித்தன. அதன்பிறகே எந்தச் சூழலிலும் நாம் வாழ்ந்தே ஆக வேண்டும்.

சில பிரச்சனைகள் குறுக்கே வந்தாலும், சூழலே இருட்டாக மாறினாலும் கூட நாம் எந்த விதத்தில், சலிப்படையக் கூடாது.

வாழ்வின் மீதும் சுற்றியுள்ள மனிதர்கள் மீதும் நம்பிக்கை இழந்துவிடக் கூடாது என்பது என் மனதிற்குள் திடமான வைராக்கியமாக மாறிப் போனது.

நினைவின் அடுக்குகள் சற்றே குழைந்து உருமாறிப் போனாலும், மிகவும் தீவிர மறதிக்கு ஆட்படவில்லை. 

அதுவரை பழகியவர்களின் குரல் மூலமே அவர்களை அடையாளம் காண முடிந்தது.

காலை முதல் இரவு வரை என்னை சிறிதும் தடங்கல் இல்லாமல் வழிநடத்த உறவுகளும் நண்பர்களும் இருந்தார்கள்.

வாசிப்பு என்பது பார்வை என்பதற்கு அப்பாற்பட்டு செவிப்புலன் வழியே கிரகித்துக்கொள்ள முடிந்தது.

இப்போது இதை உங்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது கூட மதுரையில் உங்களைப் பார்த்த முகம்தான் என் நினைவில் வந்து போகிறது. 

வாழ்வில் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்ன நெருக்கடிகளை நாம் எதிர்கொள்ள நேரிட்டாலும், அவற்றையெல்லாம் பதற்றமின்றி கடந்து இந்த வாழ்க்கையை நாம் வாழ்ந்துதான் ஆக வேண்டும்.

நம்மைச் சுற்றியுள்ள எந்த உறவுகளையும் நாம் அந்நியமாக நினைக்க வேண்டியதில்லை. எங்கும், எப்போதும் நமக்கான மனிதர்கள் இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்.

இப்போது பார்வையற்ற நிலை தொடர்ந்து இருந்தபோதும் கூட, என் மனதின் சமச்சீர் நிலை குழையவில்லை. என்னுடைய அரசியல், சமூகச் செயல்பாட்டுக்கான பார்வை மாறிவிடவில்லை. 

காலம் எனும் பெருவெளிக்கு முன்னே, நாம் இயல்பாக இருக்கிற வரை என்ன செய்துவிட்டுப் போகிறோம் என்பதுதானே முக்கியம்” என்று சொல்லிக் கொண்டுபோன ஞானி கிளம்பும்போதும் என்னுடைய உடல்நிலை பற்றிப் பரிவுடன் விசாரித்தார்.

“சர்க்கரை நோய் ஆரம்பிச்சிருந்தா, உடம்ப சரியா பேண ஆரம்பிச்சிருங்க. நம்மைத் தூக்கி அலையுற உடம்பு மேல நமக்கே அக்கறை வரணும் இல்லையா?”

– என்று மென்மையும் பரிவுமான குரலில் சொன்னபடியே வாசலின் விளிம்பு வரை வந்து வழியனுப்பி வைத்த கோவை ஞானி என்கின்ற மகத்தான மனிதரின் குரல் மட்டும் நினைவு வெளியில் சிறு பறவையைப் போல அலைந்து கொண்டிருக்கிறது.

– மணா

Comments (0)
Add Comment