நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுமா?

இயற்கை விவசாயி நம்மாழ்வாருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு முன்னால், கோவையில் நடந்த விவசாயிகள் தொடர்பான மாநாட்டில் கோரிக்கை முன்வைக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வைப் பரவலாக விதைத்த முன்னோடி என்கிற வகையில் நம்மாழ்வாரின் பங்களிப்பு மகத்தானது.

அவரைப் பற்றிய சில நினைவுத் துளிகள்:

  • இயற்கை விவசாயத்தின் அடையாளச் சின்னம் போலவே மாறிவிட்ட நம்மாழ்வாரை, ஏறத்தாழ 40 ஆண்டுகளுக்கு முன்பு  பார்த்தவர்களுக்கு தெரியும் அவரின் தற்போதைய தோற்றத்தில் அப்போது இல்லை.எப்பொழுதும் தளர்ந்த சட்டையும், தொள தொள பேண்ட்டும் அணிந்த வடிவத்தில் தான் அப்போது இருந்தார். 
  • புதுக்கோட்டையில் இயங்கிய ’குடும்பம்’ என்கின்ற சமூக சேவை அமைப்புடன் தொடர்பில் இருந்தார். பல சமூக சேவை இயக்கங்கள் நடத்தக் கூடிய கூட்டங்களில் பங்கேற்று ஆவேசமாக பேசுபவராக அவர் அப்போது இருந்தார்.அப்போதே அவரது இலக்கு இயற்கை விவசாயம் பற்றியும், பசுமை என்பதை பற்றியுமாகத்தான் இருந்தது.

     

  • அப்போதைய காலகட்டத்தில் அவரைச் சந்தித்தபோது பலவற்றையும் படு உற்சாகமாக பேசக் கூடியவராக அவர் இருந்தார்.எந்த விஷயம் பற்றியும் அவரிடம் கலந்து உரையாடலாம் என்கிற அளவுக்கு இணக்கமான பண்பு கொண்டவராகத் தான் இருந்தார். அப்போது அவர் ஊடகங்களில் அறிமுகமாகி இருக்கவில்லை. 
  • பின் நாட்களில் சென்னையில் குமுதம் அலுவலகத்தில் நான் பணியாற்றிக் கொண்டிருந்தபோது, அப்போது குமுதம் அலுவலகத்திற்கு நடந்த ஒரு விவாதத்திற்காக அங்கு வழக்கமாக அவர் அணியும் பேண்ட், சர்ட் உடன் வந்திருந்தார்.அந்த விவாத நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்டவர், அதை எடுத்து குமுதம் வார இதழில் விவசாயம் சம்பந்தமான ஒரு தொடரை ஆரம்பித்தார்.அந்த தொடருக்கு அப்போது அவர் வைத்த தலைப்பு “தாய் மண்ணே வணக்கம்“.

     

  • தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் நம்மாழ்வாரை சந்தித்தாலும் கூட இறுதியாக நண்பர் பால் பாஸ்கர் குறித்த ஆவணப்படத்திற்காக நம்மாழ்வாரை பேட்டி காண புதுக்கோட்டை அருகில் உள்ள ‘வானகம்’ என்ற அவரது தோட்டத்திற்குப் போயிருந்தேன்.சுற்றிலும் எங்கு பார்த்தாலும் சாணத்தின் மணம் பரவியிருந்தது. அதற்கிடையில், ஒரு சாணக் குவியலுக்கு அருகில் உட்கார்ந்தபடி, அவர் பல நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 
  • இயற்கை விவசாயம் பற்றிய தன்னுடைய கருத்தாக்கங்களையும் விரிவாக ஒரு மணி நேர அளவுக்கு பதிவு செய்தார். அதை முடித்த பிறகு அங்கேயே இயற்கை உணவை, அவருடன் சாப்பிடும் அனுபவம் கிடைத்தது. மிக இனிமையான தித்திப்பான உணவு என்றுதான் சொல்ல வேண்டும்.அதை ஒரு கூட்டமாக அவருடன் அமர்ந்து சாப்பிட்டதெல்லாம் ஒரு இனிய நினைவாக இருக்கிறது.

     

  • எப்போதும் விவசாயம் பற்றியே பேசுகிறவராகவே இருந்தார். உலகின் பல நாடுகளில் இயற்கை விவசாயம் பற்றின முயற்சிகள் எந்த அளவுக்கு நடந்திருக்கின்றன, ரசாயன உரங்கள் எப்படிப்பட்ட நிலங்களை எல்லாம் உலக அளவில் அழித்திருக்கின்றன என்பதையெல்லாம் பட்டியலிட்டபடி சொல்வது அவரது வழக்கம்.நடுத்தர விவசாயிகளின் குரலாக அல்லாமல், கீழ்த்தட்டு விவசாயின் குரலாகவும் அவர் இருந்தது தான் அவருடைய பிளஸ் பாயிண்ட். 
  • ஒருமுறை அவரிடம் ஏன் இப்படி சட்டை கூட அணியாமல் வெறும் வேட்டியுடன் உங்களைக் காட்சிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்றபோது, சிரித்துக் கொண்டே இயல்பாக அவர் சொன்ன பதில்,“விவசாயிகளிடம் நான் நெருங்கி போக வேண்டும் என்றால், நம் தோற்றத்திலும் நம்முடைய பழகுமுறையிலும் அவர்களுக்கு இணக்கமான முறையில் இருக்க வேண்டும்.நம் தோற்றம் அவர்கள் பழகுவதற்கு அந்நியமாக அமைந்துவிடக் கூடாது. நாம் பேசுகிற மொழி கூட அவர்களுக்கு சட்டென்று புரிகிற எளிமையான மொழியாக இருக்க வேண்டும்.

    அப்படித்தான் நான் என்ன படித்தாலும், உலக அளவிலான பசுமை இலக்கியம், இயற்கை விவசாயம் பற்றி பேசினாலும் கூட,

    இங்கு என்னுடன் சாதாரணமாக அமர்ந்து பேசுகிற ஒரு எளிய விவசாயிக்கு என்னுடைய மொழி புரிய வேண்டும். நான் பேசுகின்ற பொருள் விளங்க வேண்டும்.

    இதற்கு என்னுடைய தோற்றம் தடையாக இருந்து விடக்கூடாது. அதற்காகத்தான் என்னை எளிமைப்படுத்தி, என்னுடைய பேசு பொருளையும் எளிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

     

  • இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில், இயற்கை விவசாயம் எந்த அளவிற்கு வருங்காலத்தில் கவனம் பெறக்கூடியதாக இருக்கும் என்று அவரிடம் கேட்டபோது, அவர் எளிமையாக சொன்ன பதில்,“இன்றைக்கு இயற்கை விவசாயம் பற்றி பேசுகிறவர்கள் குறைந்திருக்கலாம். ஆனால், நாளை படிப்படியாக இயற்கை விவசாயம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும்.வருங்காலத்தில் கண்டிப்பாக இதை நடைமுறைப்படுத்துபவர்கள் அதிகரிப்பார்கள். இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு, மக்களிடமும் அதிகரிக்கும்.

    இது நடைமுறைப்படுத்துவது கொஞ்சம் காலதாமதம் ஆகலாம். ஆனால், கண்டிப்பாக இந்தியாவிலும் தமிழகத்திலும் நடைமுறைப்படுத்தப்படும் என்று நிச்சயமாக நம்புகிறேன். அது நிச்சயமாக நடக்கும்” என்றார்.

எளிய விவசாய மக்களின் குரலாக எதிரொலித்த நம்மாழ்வாரின் குரல், இப்போதும் பலருடைய காதுகளுக்கு சென்றடைந்து கொண்டிருக்கிறது, பிரதமர் உட்பட.

– மணா

 
 
 
Comments (0)
Add Comment