ஜடேஜாவுக்கு பதில் சாம்சன்: என்ன நடக்கிறது சிஎஸ்கேவில்?

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் மனதில் தல தோனி, சுரேஷ் ரெய்னா ஆகியோருக்கு அடுத்து 3-வதாக இடம் பிடித்திருப்பவர் ரவீந்திர ஜடேஜா.

2012-ம் ஆண்டில் இருந்து மஞ்சள் படையின் ஒரு அங்கமாக இருந்த இவருக்கு குட்பை சொல்ல சிஎஸ்கே நிர்வாகம் தயாராகிவிட்டதாக ஒரு செய்தி கிரிக்கெட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

ரவீந்திர ஜடேஜாவை ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கொடுத்து, அவருக்கு பதிலான சஞ்சு சாம்சனை வாங்குகிறது சிஎஸ்கே.

ஏன் இந்த மாற்றம்?

பொதுவாகவே மாற்றங்களை விரும்பாத அணி என்று சிஎஸ்கேவைப் பற்றி ஒரு பேச்சு இருக்கிறது. எப்போதுமே தங்கள் அணியில் உள்ள எந்த ஒரு வீரரையும் சிஎஸ்கே நிர்வாகம் விட்டுக்கொடுத்ததில்லை.

அப்படி இருக்கும்போது 2 ஆண்டுகளுக்கு முன் நடந்த ஐபிஎல் தொடரில் கடைசி பந்தில் பவுண்டரியை விளாசி அணிக்குக் கோப்பையைப் பெற்றுக்கொடுத்த ஜடேஜாவை விட்டுக் கொடுப்பது ஏன் என்ற கேள்வி பெரிய அளவில் ரசிகர்களுக்கு வரலாம். அதற்கான ஒரே பதில் மகேந்திர சிங் தோனி.

சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை அதன் மிகப்பெரிய பலம் மகேந்திர சிங் தோனி.

விக்கெட் கீப்பிங், பேட்டிங், கேப்டன்ஷிப் ஆகிய 3 பொறுப்புகளையும் ஒரே நேரத்தில் சுமந்து, கடந்த 18 ஆண்டுகள் சென்னையை வழிநடத்தியவர் தோனி. ஆனால் இப்போது அவருக்கு வயதாகிவிட்டது.

அவருக்கு மாற்றாக இந்த 3 துறைகளிலும் கெட்டிக்காரரான ஒருவரை வாங்க கடந்த ஆண்டிலிருந்தே சிஎஸ்கே முடிந்தவரை போராடிப் பார்த்துள்ளது. 

கடந்த ஆண்டு நடந்த ஏலத்தில் ரிஷப் பந்த், கே.எல்.ராகுல் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட, சிஎஸ்கே அணியால் அவர்களை கைப்பற்ற முடியவில்லை.

இந்த சூழலில்தான் ராஜஸ்தான் அணி நிர்வாகத்திடம் கருத்து வேற்றுமையில் உள்ள சஞ்சு சாம்சனை தட்டித் தூக்க திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டில் சென்னை அணி கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டதற்கு சரியான, அதிரடியான தொடக்க ஆட்டக்காரர் அமையாததும் ஒரு காரணம்.

பினிஷிங்கில் அதிரடி காட்ட பல வீரர்கள் இருந்தும், முதல் 10 ஓவர்களில் அதிரடியான தொடக்கம் தர சென்னை அணியில் யாரும் இல்லாமல் போனார்கள்.

இப்போது சஞ்சு சாம்சன் வருவதால் அந்த குறை சரியாக வாய்ப்பு உள்ளது.

ஐபிஎல் தொடரில் இதுவரை 4,700 ரன்களி குவித்துள்ள சஞ்சு சாம்சனின் ஸ்டிரைக் ரேட் 140 என்பதும், அவரை ராஜஸ்தான் அணியில் இருந்து வாங்க சிஎஸ்கே முயற்சி எடுப்பதர்கு ஒரு காரணமாக உள்ளது.

சஞ்சுவுக்கு பதில் ஏன் 2 வீரர்கள்?

சஞ்சு சாம்சன் என்ற ஒரு வீரரை கொடுப்பதற்கு பதிலாக ரவீந்திர ஜடேஜாவுடன், பிரவிஸ், பத்திரணா, துபே ஆகியோரில் யாரையாவது ஒருவரைக் கொடுக்கவேண்டும் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் கோரியதாக கூறப்படுகிறது. சஞ்சு சாம்சனுக்கு வயது 30.

ஆனால், ஜடேஜாவுக்கு வயது 36. சாம்சனை இன்னும் குறைந்தபட்சம் 6 ஆண்டுகளாவது அணியில் தக்கவைத்து ஆட முடியும் என்பதாலேயே அவருக்கு பதிலாக 2 வீரர்களைத் தர நிர்பந்திக்கிறது ராஜஸ்தான்.

அதோடு, ரவீந்திர ஜடேஜாவுடன் சாம் கரணை வழங்க சிஎஸ்கே நிர்வாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

ஜடேஜாவை கொடுக்க காரணம் என்ன?

ஜடேஜா அணியின் சிறந்த பினிஷர் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அவருக்கு இணையாக பிரவிஸ், துபே போன்ற பினிஷர்கள் அணிக்கு கிடைத்துள்ளதால் சாம்சனுக்காக ஜடேஜாவை கொடுக்க சிஎஸ்கே தயாராகி உள்ளது.

அணியின் முக்கிய சுழற்பந்து வீச்சாளர் என்ற இடத்தில் இருந்து ஜடேஜாவை நூர் அகமது பின்னுக்குத் தள்ளியதும் இதற்கு மற்றொரு காரணம்.

ஜடேஜாவின் நிலை என்ன?

ஐபிஎல் தொடரைப் பொருத்தவரை ராஜஸ்தான் அணியில் இருந்துதான் 2009-ம் ஆண்டில் ரவீந்திர ஜடேஜா ஐபிஎல் தொடரில் ஆட வந்தார்.

அதே அணியில் இருந்துகொண்டு ஐபிஎல் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற ஜடேஜாவும் விரும்புகிறார் என்று சொல்லப்படுகிறது.

ஜடேஜாவுடன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளம்மிங் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பிறகே இந்த முடிவை சிஎஸ்கே நிர்வாகம் எடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

தோனியின் நிலை என்ன?

இதுதான் உங்கள் கடைசி ஐபிஎல் தொடரா? என்று 2020-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு, ‘டெபனட்லி நாட்’ என்று பதில் அளித்திருந்தார் தல தோனி.

இப்போது அதே பதிலைச் சொல்லும் நிலையில் அவரது உடல் ஃபிட்டாக இல்லை என்பதை சஞ்சு சாம்சனை கொண்டுவர சிஎஸ்கே காட்டும் ஆர்வத்தை பார்க்கும்போது அனுமானிக்க முடிகிறது.

இந்தத் தொடரில் சஞ்சு சாம்சன் ஆடும் விதத்தை பொருத்து, இத்தொடரின் பாதியிலேயே தோனி ஓய்வை அறிவிப்பார் என்றும் சிஎஸ்கே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக, ரவீந்திர ஜடேஜாவுக்கு மட்டுமல்ல… தல தோனிக்கும் இந்த ஆண்டு சிஎஸ்கே குட்பை சொல்ல நேரிடலாம். அந்த செய்திக்காக கனத்த இதயத்துடன் காத்திருப்போம்.

– பி.எம். சுதிர்

Comments (0)
Add Comment