கண்ணகி நகர் கார்த்திகா: தமிழ்நாட்டின் தங்கம்!

எதேச்சையாக யூ டியூப்பில் டெல்லி சிஐஎஸ்எப் அணிக்கும் கண்ணகி நகர் அணிக்கும் நடந்த கபடிப் போட்டியைப் பார்த்தேன். சிலிர்ப்பான ஆட்டம்.

அதிகமான ரைடுகள் சென்று பாயிண்ட் எடுத்தவர் கார்த்திகா. 9 ஆம் நம்பர் ஜெர்கின் போட்ட இன்னொரு பெண்ணும் கலக்குகிறார்.

டெல்லி அணியினர் கட்டுமஸ்தாக இருக்கிறார்கள். இவர்கள் அவர்களைவிட சிறியவர்கள். ஆனால் ஆட்டத்தில் ஜொலிக்கிறார்கள்.

டெக்னிக்கலாக ஆடினார்கள். எதிர் அணியை ஆட விட்டுப் பிடித்தார்கள். ரைடு செல்வதில் கண்ணகி நகர் நம்பர் ஒன்.

கார்த்திகாவின் ரைடு ஸ்மார்ட்டாக இருக்கிறது. ஒருமுறை மட்டுமே அவுட் ஆனார். அவர் ஆடும்போது அரங்கமே கைதட்டி ஆர்ப்பரிக்கிறது.

அணி துவளும்போதெல்லாம் அவர்தான் ரைடு சென்று பாயிண்ட்டுகளை அள்ளிவருகிறார். பாயிண்ட் எடுக்காமல் திரும்புவதில்லை.

மீண்டும் கபடி நினைவுகள் வந்துவிட்டன. பள்ளியில் படிக்கும்போது ஜூனியர் அணியில் ஆடியிருக்கிறேன். எங்கள் ஊரில் தக்களூர் பெரியார் சுடர் அணி மாவட்டத்தில் பிரபலமாக இருந்தது.

போட்டிகளில் வெல்லும் அணி. அதில் ஆடியவர்கள் லோகநாதன். சிவதாஸ், குமார், ரமணி, வணங்காமுடி, குணாளன் எனச் சொல்லிக்கொண்டே போகலாம். 35 ஆண்டுகளுக்கு முன்னால்.

வடபாதிமங்கலம் யங் லைன்ஸ், கீச்சாங்குப்பம் போன்ற அணிகள் ஊர்ப்பக்கம் பிரபலமாக இருந்தன.

அவர்கள் ஆடும் ஆட்டத்திற்கு ரசிகர்கள் அதிகம். இன்னும் பல அணிகள் இருந்தன. அவர்களின் பெயர்கள் மறந்துவிட்டன.

கண்ணகி நகர் கார்த்திகாவைப் பற்றிப் பேசும்போது மீண்டும் கபடி உயிர்ப்பெற்று இருப்பதைப்போல தோன்றுகிறது. தமிழ்நாட்டுத் தங்கமகளை வாழ்த்துகிறேன்.

Comments (0)
Add Comment