அறத்தை நிலைநிறுத்த எழுதப்படுபவையே இலக்கியம்!

எழுத்தாளர் பாவண்ணன்

பாவண்ணன் சமகால நவீனத் தமிழ் இலக்கியச் சூழலில் முதன்மையான படைப்பாளிகளில் ஒருவர்.

சிறுகதை, நாவல், மொழிபெயர்ப்பு, கட்டுரைகள் என இடையறாது தமது பங்களிப்பை அளித்து வருகிறார்.

கன்னடத்திலிருந்து தலித் இலக்கியங்களை மொழியாக்கம் செய்து தமிழ் தலித் இலக்கிய அலை உருவாக அடிப்படைகளை அமைத்தவர்களில் ஒருவர்.

மொழிபெயர்ப்புக்காக இந்திய மத்திய அரசின் சாகித்திய அகாதமியின் விருது, தமிழ் இலக்கியத் தோட்டத்தின் (கனடா) வாழ்நாள் சாதனைக்கான இயல் விருது,

விளக்கு அமைப்பின் வாழ்நாள் சாதனைக்கான புதுமைப்பித்தன் விருது, புதுச்சேரி அரசின், இலக்கியச் சிந்தனையின் சிறந்த நாவல் விருது என இவரது பங்களிப்புக்கு தமிழ்ச் சூழலில் தகுந்த கவனம் கிடைத்துள்ளது.

 பாவண்ணன் ‘வல்லினம்’ இதழுக்கு அளித்த பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

‘நான் இலக்கியவாதிதான்‘ என நீங்கள் மெய்யான ஒரு பயணத்தை மேற்கொண்டது எந்த ஆண்டு? அப்போது உங்கள் வயது என்ன? தமிழ் இலக்கியத்தில் அச்சமயம் யாரெல்லாம் தீவிரமாக இயங்கிக் கொண்டிருந்தனர்?

பாவண்ணன்: என் முதல் சிறுகதையை எழுதி முடித்த கணத்திலேயே நான் என்னை ஓர் எழுத்தாளனாக உணர்ந்துவிட்டேன். அது 1982ஆம் ஆண்டு. என் பாதை எனக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது.

என் முதல் சிறுகதையைத் ‘தீபம்’ இதழுக்கு அனுப்பி வைத்தேன். ஒரு மாதம் காத்திருந்தேன். பிரசுரமாகவில்லை.

உடனே தீபத்துக்கு இன்னொரு புதிய சிறுகதையை அனுப்பி வைத்தேன். அது பிரசுரமானது. என் பயணம் தொடங்கிவிட்டது என்பதை நான் உணர்ந்தேன்.

அப்போது எனக்கு 24 வயது.

எழுபதுகளில் எழுதத் தொடங்கி தம்மை உறுதியாக நிறுவிக் கொண்ட முன்னணி எழுத்தாளர்கள் வண்ணதாசன், வண்ணநிலவன், பூமணி, பிரபஞ்சன், கந்தர்வன், நாஞ்சில்நாடன் போன்ற ஆளுமைகளும் என்னைவிட சற்றே வயதில் மூத்த கோணங்கி, சுப்ரபாரதி மணியன், சங்கரநாராயணன், இரா.முருகன் போன்றோரும் எழுதிக் கொண்டிருந்தனர்.

தமிழில் தலித் இலக்கியம் உருவாக கன்னட தலித் சிறுகதைகளை நீங்கள் மொழியாக்கம் செய்தது உங்களின் முதன்மையான பங்களிப்புகளில் ஒன்று. உங்களுக்கு அந்த எண்ணம் எப்படி உருவானது?

பாவண்ணன்: நான் கன்னட மொழியைக் கற்று, கன்னட இலக்கியப் படைப்புகளை நேரடியாகப் படிக்கத் தொடங்கிய காலத்திலேயே கர்நாடகத்தில் தலித் இயக்கம் உருவாகி நிலைபெற்றுவிட்டது.

அதற்குச் சில ஆண்டுகள் முன்பாக கர்நாடகத்தின் அண்டை மாநிலமான மகாராஷ்டிரத்திலும் அந்த இயக்கம் நிலைபெற்றிருந்தது.

பெல்காம் என்பது இரு மாநிலங்களுக்கும் இடையிலான பகுதி என்பதால் மராத்தி இலக்கியம் கன்னடத்திலும் கன்னட இலக்கியம் மராத்தியிலும் மொழியாக்கம் செய்யப்படுவது மிக இயல்பாக நடந்தேறிக் கொண்டிருந்தது.

அரசியல் களங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் விளைவாக உருவான தலித் எழுச்சியும் சுதந்திர இந்தியாவில் கல்வியால் தலைநிமிர்ந்த முதல் தலைமுறை தலித் இளைஞர்களின் வேட்கையும் இணைந்து ஒரு புதிய சிந்தனை போக்கு உருவாவதற்குத் தூண்டுகோலாக அமைந்தன.

கவிதை, சிறுகதை எனப் பல தளங்களில் தலித் படைப்பாளிகள் உருவானார்கள்.

தாம் எப்படி உலகத்தாரால் நடத்தப்படுகிறோம் அல்லது நசுக்கப்படுகிறோம் என்பதைப் படைப்புகளாக எழுதி வெளியுலகம் அறியும்படி செய்தார்கள்.

ஒரு சிறுகதையாகவோ அல்லது நாவலாகவோ முன்வைக்கும்போது, அது புனைவாக கருதப்பட்டுவிடும் என்னும் எச்சரிக்கை உணர்வால், தம் வாழ்க்கையைத் தன்வரலாற்று நூல்களாக அவர்கள் எழுதத் தொடங்கினர்.

உண்மைத் தன்மை உணரப்பட வேண்டும் என்னும் எச்சரிக்கை உணர்வு அவ்விதத்தில் செயல்படத் தூண்டியது.

ஏற்கனவே வெளிவந்திருந்த மராத்திய தலித் எழுத்தாளர்களின் தன்வரலாற்று நூல்கள் கன்னட தலித் எழுத்தாளர்களுக்கும் உத்வேகமூட்டி, அவர்களையும் எழுத வைத்தன.

அத்தகு படைப்புகள் எழுந்து வந்த காலத்தில் நான் அவற்றுக்கு வெகு அருகில் இருந்தேன். அதனால் ஏற்பட்ட மாற்றங்களை நேருக்கு நேர் பார்த்தேன்.

இப்படிப்பட்ட வீச்சுடன் தமிழுலகத்திலும் தன்வரலாற்று நூல்கள் எழுதப்பட வேண்டும் என நான் நினைத்தேன்.

யாராவது ஒருவர் தொடங்கி வைத்தால், பிறர் அதே வழியில் விருப்பத்தோடு எழுதக்கூடும் என நான் நம்பினேன்.

அதனால் உடனடி முன்மாதிரியாக விளங்கிய கன்னடச் சிறுகதைகளையும் தன்வரலாற்று நூல்களையும் அறிமுகம் செய்யும் விதமாக மொழிபெயர்த்து வெளியிட்டேன்.

தலித் இலக்கியம் என்பது தமிழ் இலக்கியச் சூழலில் சாதிய இலக்கியம் என இன்று பேசப்படுகிறது. உங்கள் வாசிப்பில் தலித் இலக்கியம் என்பதை எவ்வாறு வகைப்படுத்தலாம்?

பாவண்ணன்: ’இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்’ என மானுட குலத்தை அறத்தின் அடிப்படையில் இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து மதிப்பிட்ட இலக்கிய மரபில் வந்தவர்கள் நாம்.

எல்லா இலக்கியமும் அறம் என்னும் மாபெரும் மதிப்பீட்டை வலியுறுத்தவும் நிலைநிறுத்தவும் எழுதப்படுபவையே.

அழகிரிசாமி எழுதிய ஒரு கதை நினைவுக்கு வருகிறது. அந்தக் கதையின் தலைப்பு ‘சுயரூபம்’.

இவ்வாழ்வில் ஒருவனை இரு குணங்கள் விலங்காக மாற்றுவதற்குத் தயாராக இருக்கின்றன. ஒன்று பசி. இன்னொன்று சாதிப் பெருமிதம்.

ஒருவன் சாதிப் பெருமிதம் மேலோங்கியிருக்கும் தருணத்தில் சாப்பாட்டுக் கடையில் உட்கார்ந்து கொண்டு உணவைப் பற்றி பொருட்படுத்தாதவனைப் போல ஏளனமாகப் பேசிச் சிரிக்கிறான்.

அவனே பசி மேலோங்கிய தருணத்தில் இன்னொருவனை அடித்து வீழ்த்தி விலங்கைப் போல அடுத்தவனிடமிருக்கும் உணவைப் பறித்துக் கொள்ள முயற்சி செய்கிறான்.

இரு விலங்குகளையும் கட்டுப்படுத்தி ஆளத் தெரிந்தவர்களுக்குப் பிரச்சினை இல்லை. கட்டுப்பாடு அற்றவர்கள் ஏதோ ஒன்றுக்கு இரையாகி வீழ்ந்துவிடுகிறார்கள்.

சாதிய அடையாளம் வெளிப்படையாக முன்வைப்பதாலேயே இக்கதையைச் சாதியக் கதை என யாரும் வகுத்துவிட முடியாது.

சாதிப் பெருமையில் அடங்கியிருக்கும் வெறுமையையும் அறிவீனத்தையும் உணர்த்தும் கதை என்றுதானே சொல்ல முடியும்.

இன்னொரு சிறுகதையும் நினைவுக்கு வருகிறது. அது நாஞ்சில் நாடன் எழுதிய கதை.

அது ஒரு விற்பனை பிரதிநிதியின் கதை. தொழில் காரணமாக காலை முதல் அலைந்து கொண்டே இருந்ததில் அவனுக்குச் சாப்பிடக்கூட நேரமில்லை. ஒரு சாப்பாட்டுக் கடையில் நான்கு ரொட்டிகளைப் பொட்டலமாகக் கட்டி எடுத்துக் கொண்டு அவசரமாக ஓடி வந்து ரயிலைப் பிடிக்கிறான்.

ரயில் ஓடத் தொடங்கியதும் அந்தப் பொட்டலத்தைப் பிரித்து உண்ணத் தொடங்குகிறார்.

இன்னும் அரைத்துண்டு ரொட்டி மட்டுமே மிச்சமிருக்கும் நிலையில் அறிமுகமில்லாத இன்னொருவர் அவர் கையைப் பிடித்து நிறுத்தி ‘நாம் சாப்பிடலாம்’ என்று சொல்கிறார்.

அவர் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, அந்தப் பெரியவர் பொட்டலத்தைத் தன் பக்கம் இழுத்து சாப்பிடத் தொடங்குகிறார்.

சாதி, மொழி, இனம் என அனைத்தையும் கடந்து பசியின் விளைவாக ஒன்றிணையும் மானுட உணர்வை இக்கதையின் சித்தரிப்பு உணர்த்துவதை நம்மால் உணர முடிகிறது அல்லவா?

ஒரு கதையில் முன்வைக்கப்படும் ஒரு பாத்திரத்தை எந்த அடையாளமும் இல்லாமல் மொட்டையாக எப்படி ஒருவர் குறிப்பிட முடியும்? அவருடைய மொழி, இன, சாதி அடையாளம் இடம்பெறுவதை ஒரு படைப்பாளியால் தவிர்க்க முடியாது.

ஆனால், அவை அனைத்தும் சிறுகதை உணர்த்த முற்படும் சித்திரத்துக்கு துணை நிற்பவையாகவும் நம்பகத்தன்மையை உருவாக்குவதாகவும் மட்டுமே தொழிற்படுகின்றன. அதுவே அதன் எல்லை.

நல்ல சிறுகதைகள் அனைத்தும் அப்படித்தான் அமைந்துள்ளன. அக்கதைகளை ஒருவரும் சாதியக் கதைகள் என மதிப்பிடுவதுமில்ல, ஒதுக்குவதுமில்லை.

அப்படிப்பட்ட நிலையில் சாதிய அடையாளம் சுட்டிக்காட்டப்படுவதாலேயே தலித் எழுத்தாளர்களின் கதைகளை மட்டும் சாதியக் கதைகள் என எப்படி வகுக்க முடியும்?

யார் எழுதிய கதையாக இருந்தாலும் சரி, அது எந்தப் புள்ளியை நோக்கி பயணம் செய்கிறது, எத்தகு சித்திரத்தை அளிக்கிறது, எத்தகைய உண்மையை நமக்கு உணர்த்துகிறது என்பதுதான் முக்கியம். வேறு எந்த அம்சமும் முக்கியமில்லை.

தமிழைத் தவிர இந்தியாவின் பிற மொழிகளில் தலித் இலக்கியத்தின் போக்கு எவ்வாறு உள்ளது?

பாவண்ணன்: தமிழ், கன்னடம், ஆங்கிலம் தவிர பிற மொழிகளில் வெளிவரும் படைப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு இல்லாத சூழலில் இக்கேள்விக்கு என்னால் நேரடியான பதிலைச் சொல்வதில் தயக்கமிருக்கிறது.

ஆனால், இதையொட்டி எனக்குத் தெரிந்த ஒரு தகவலை மட்டும் இங்கு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

கடந்த ஆண்டு (2024), சாகித்திய அகாதெமி நிறுவனம் மொழிபெயர்ப்பாளருக்கான விருது விழாவைப் பெங்களூரில் நடத்தியது.

விருது பெறுவதற்காக எல்லா மாநிலங்களிலிருந்தும் வந்த மொழிபெயர்ப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விழா முடிந்து உணவு இடைவேளையின்போது அசாம், சிக்கிம், பீகார், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் போன்ற வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த மொழிபெயர்ப்பாளர்களிடம் சிறிது நேரம் உரையாடிக் கொண்டிருந்தேன்.

அம்மொழிகளில் தலித் எழுத்துகள் சார்ந்து உருவாகியிருக்கும் உத்வேகத்தைப் பற்றி அவர்கள் உற்சாகமாக எடுத்துரைத்தனர்.

சிறுகதைகளையும் நாவல்களையும் எழுதுவதைவிட ஒவ்வொருவரும் தன்வரலாறுகளை எழுதி வெளியிடுவதைப் பற்றி பலரும் சொன்னார்கள்.

கன்னடச் சூழலிலும் தன்வரலாறு நூல்களே பெரிதும் வருகின்றன என்று நான் அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதன் காரணத்தை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

தன்வரலாறுகள் என்பவை நமது சமகாலம் பற்றி நாம் எழுதி வைக்கும் ஆவணங்கள். அவை சார்ந்து எவ்விதமான விமர்சனங்களுக்கும் இடமில்லை.

ஒரு மனிதனாக இந்த மண்ணில் காலூன்றி நிற்பதற்குப் படும் பாடுகளையும் எதிர்கொள்ள வேண்டிய நெருக்கடிகளையும் அவை நேரடி அனுபவக் குறிப்புகளாக பதிவு செய்கின்றன.

ஒவ்வொரு மொழியிலும் குறைந்தபட்சம் ஒரு பத்து தலித் தன்வரலாறுகள் எழுதப்பட்டு நிலைத்துவிட்டன என்று நினைத்துக் கொள்ளுங்கள்.

எல்லா இந்திய மொழிகளிலும் இப்படிப் பத்து பத்து தன்வரலாறுகள் எழுதப்பட்டு நிலைத்துவிட்டன என்றும் நினைத்துக் கொள்ளுங்கள்.

அவை அனைத்தையும் ஒருங்கிணைத்து, அவற்றில் மிகச் சிறந்த ஐம்பது தன்வரலாறுகளைத் தேர்ந்தெடுத்துத் தொகுத்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவதாக வைத்துக் கொள்ளுங்கள்.

அப்படி ஒரு நிகழ்ச்சி நடைபெறும் என்றால், அவையே இந்திய தலித் வாழ்க்கை நிலையின் தோராயமான சித்திரத்தை உணர்த்தும் வரலாற்றுச் சாட்சியங்களாக திகழும் என்பது என் எண்ணம். சமூக ஆய்வாளர்கள் யாராவது இத்தகு நோக்கத்துடன் ஒரு முயற்சியை மேற்கொண்டு செயல்பட்டால் நல்லது.

இதன் அடிப்படையில் தலித் இலக்கியத்திற்கான வரையறை ஒன்றை உங்கள் வாசிப்பின் புரிதலின் வழி வழங்க இயலுமா?

பாவண்ணன்: எந்த வரையறையும் தோராயமான ஒன்றுதான். ஒருபோதும் தீர்மானமாக எதையும் வரையறுத்துவிட முடியாது. எப்போதும் மாற்றங்களுக்கான வழிகளையும் அது தன்னகத்தே கொண்டிருக்கிறது.

தலித் இலக்கியம் என்பது தனி வரையறைகளைக் கொண்ட உறுப்பல்ல. அது பேரிலக்கியம் என்னும் சட்டகத்தின் உறுப்பு.

எந்தத் தலித் படைப்பும் இலக்கியம் என்னும் மாபெரும் வடிவத்துக்கே உரிய அழகியலையும் ஆழத்தையும் கொண்டிருக்க வேண்டும்.

நேர்காணல்: ம.நவீன், அ. பாண்டியன்

நன்றி – வல்லினம், நவம்பர் – 2024 இதழ்

Comments (0)
Add Comment