பெண்களுக்கான உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா.
இந்த வெற்றிக்காக மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியிருக்கிறார்கள் நம் வீராங்கனைகள். அணியில் உள்ள அனைவருக்கும் இந்த வெற்றியில் ஏதாவது ஒரு பங்கு இருக்கிறது.
இதில் குறிப்பிட்ட சில சாதனைகளை செய்து இந்தியாவின் தலையில் வெற்றி மகுடத்தை சூட்டிய சில வீராங்கனைகளைப் பற்றி தெரிந்துகொள்வோம்…
ஹர்மன்பிரீத் கவுர்:
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மோகா கிராமத்தைச் சேர்ந்த ஹர்மன்பிரீத் கவுர், சிக்சர்களை பறக்கவிடுவதில் கெட்டிக்காரர். இந்தியப் பெண்கள் அணியின் ஷேவாக் என்று ஹர்ன்மன்பிரீத் கவுரைச் சொல்லலாம்.
அவரைப் போலவே பேட்டிங்கில் அதிரடி காட்டும் ஹர்மன்பிரீத் கவுர், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக வலிமைமிக்க ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக ஒரு ஆட்டத்தில் 171 ரன்களைக் குவித்துள்ளார்.
இதன்மூலம் பலரது கவனத்தையும் திருப்பிய கவுர், மிதாலி ராஜிடம் இருந்து கேப்டன் பொறுப்பை கைமாற்றிக் கொண்டார்.
இந்திய அணிக்கு உலகக் கோப்பைத் தொடரில் அவர் தலைமை தாங்குவது இதுதான் முதல் முறை.
இந்த தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் 70 ரன்களைக் குவித்த ஹர்மன்பிரீத் கவுர்,
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்திலும், 88 பந்துகளில் 89 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.
இந்த உலகக் கோப்பை தொடரில் அவர் எடுத்த மொத்த ரன்கள் 280.
தீப்தி சர்மா:
இந்த உலகக் கோப்பைத் தொடரின் யுவன் ஆஃப் தி சீரிஸ், அதாவது தொடர் நாயகி இவர்தான்.
2011-ம் ஆண்டில் தோனி கோப்பையை தூக்க யுவராஜ் சிங் எப்படி காரணமாக இருந்தாரோ, அதுபோல் இம்முறை இந்திய பென்கள் அணி கோப்பையை தட்டித் தூக்க இவரும் ஒரு முக்கிய காரணம்.
பந்துவீச்சை பொருத்தவரை இந்திய அணியின் முக்கிய ஆயுதமாக இருந்தவர் தீப்தி சர்மா.
ஆக்ராவைச் சேர்ந்த இவர் இந்த உலகக் கோப்பையில் வீழ்த்திய மொத்த விக்கெட்கள் 22.
வெறும் பந்துவீச்சோடு நிற்காமல் பேட்டிங்கில் 3 அரை சதங்களையும் விளாசி இந்திய பெண்கள் அணியின் நம்பர் 1 ஆல்ரவுண்டராக திகழ்கிறார் தீப்தி சர்மா.
இத்தொடரில் அவர் அடித்த மொத்த ரன்கள் 215. நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி வலுவான ஸ்கோரை எட்ட தீப்தி எடுத்த அரை சதமும் ஒரு காரணம்.
பொட்டு வைத்துக்கொள்வதை இந்திய பெண்களின் அடையாளமாக கருதும் தீப்தியை,
மைதானத்தில் முகத்தில் பொட்டு இல்லாமல் பார்ப்பது அரிதான விஷயம் என்பது இவரைப் பற்றிய கூடுதல் தகவல்.
ஸ்மிருதி மந்தனா:
இந்திய பெண்கள் அணியின் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி எல்லாமே இப்போதைக்கு ஸ்மிருதி மந்தனாதான்.
ஆரம்பத்தில் பெரிய அளவில் கவனிக்கப்படாத வீராங்கனையாக இருந்த ஸ்மிருதி மந்தனா, கடந்த 2 ஆண்டுகளாக உலகின் முன்னணி பேட்டிங் வீராங்கனையாக உருவெடுத்துள்ளார்.
இத்தொடரின் முதல் சில போட்டிகளில் கொஞ்சம் சொதப்பிய மந்தனா, அதன் பிறகு வேகமெடுக்க தொடங்கினார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இருந்து அடுத்தடுத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்திய மந்தனா இறுதி ஆட்டம் வரை, 88, 109, 34, 24 மற்றும் 45 ரன்களைக் குவித்தார்.
இந்த தொடரில் இந்தியாவுக்காக மிக அதிக ரன்களை குவித்த ஸ்மிருதி மந்தனா எடுத்த மொத்த ரன்கள் 434.
பிரதிகா ராவல்:
இந்த உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஒரு நிலையான தூணாக இருந்துள்ளார் பிரதிகா ராவல்.
தனது முதல் உலகக் கோப்பைப் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராகச் சதம் அடித்து முத்திரை பதித்த அவர்,
இந்தத் தொடரில் மொத்தம் 308 ரன்களைக் குவித்து இந்தியா அரையிறுதிச் சுற்றுக்கு செல்ல காரணமாக இருந்தார்.
ஆனால் துரதிருஷ்டவசமாக காயம் காரணத்தால் அவர் அரையிறுதி மற்றும் இறுதி ஆட்டத்தில் ஆடவில்லை.
ஜெமீமா ரோட்ரிகஸ்:
அரையிறுதிப் போட்டியில் சதம் விளாசி இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றவர் ஜெமீமா ரோட்ரிகஸ்.
கொல்கத்தாவைச் சேர்ந்த இவருக்கு 2011 உலகக் கோப்பையில் சச்சின் கோப்பையைத் தூக்கியதுபோல் இந்தியாவுக்காக ஒரு கோப்பையையாவது தூக்க வேண்டும் என்பதுதான் ஒரே ஆசை.
அதிரடி வீராங்கனையாக இருந்தாலும், அடிக்கடி தப்பான ஷாட்களை அடித்து அவுட் ஆவதால் அணியில் இருந்து அடிக்கடி வெளியில் இருக்க வைக்கப்படும் வீராங்கனையான இவர்,
இந்த உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய பெண்கள் அணியில் முக்கிய வீராங்கனையாக கருதப்படுவார் என்பதில் சந்தேகமில்லை.
ஷபாலி வர்மா:
இந்தியாவின் கிரிக்கெட் சைல்ட் புராடஜியான ஷபாலி வர்மா, இறுதிப் போட்டியில் 87 ரன்களை விளாசி நேற்று இந்தியா கவுரவமான ஸ்கோரை எட்ட உதவினார்.
இவருக்கு 13 வயதாக இருக்கும்போது சச்சின் டெண்டுல்கர் ஆடிய கடைசி ரஞ்சிக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியைப் பார்க்க அழைத்துச் சென்றுள்ளார் அவரது அப்பா.
அவரைப் போல் கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் வெறியில் 15 வயதில் இந்திய அணிக்குள் நுழைந்தார்.
ஆனால், இந்த உலகக் கோப்பைத் தொடருக்கான அணியில் தொடக்கத்தில் ஷபாலி இல்லை.
பின்னர் பிரதிகா காயமடைந்ததைத் தொடர்ந்து மீண்டும் தொடக்க ஆட்டக்காரர் ஆகும் வாய்ப்பு கிடைக்க, இறுதிப் போட்டியில் துள்ளி விளையாடி இருக்கிறார்.
சிங்கப் பெண்களுக்கு வாழ்த்துகள்!
– பி.எம். சுதிர்