மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2-0 என்ற அளவில் கைப்பற்றி இருக்கிறார் கேப்டன் சுப்மன் கில்.
டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு அவர் வெற்றி பெற்ற முதல் தொடர் இது.
சுப்மன் கில்லுக்கு மட்டுமல்ல, இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீருக்கும் சற்று ஆறுதல் தந்த வெற்றி இது.
அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, நியூஸிலாந்து அணியிடம் சொந்த மண்ணிலேயே இந்தியா தோற்றது. அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் மண்ணைக் கவ்வியது.
அதன் பிறகு இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் பொறுப்பேற்ற பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை சமன் செய்தது.
இப்படி பல மாதங்களாக தடுமாறி வந்த இந்திய அணி, இப்போதுதான் ஒரு தொடரை முழுமையாக வென்றுள்ளது.
இந்த தொடரை வென்ற பிறகு, சுப்மன் கில் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தொடரில் அணியை அவர் வழிநடத்திய விதத்தையும், பேட்டிங் செய்த விதத்தையும் எல்லோரும் பாராட்டிக்கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால், அவருக்கு இப்போதுதான் சவால்கள் ஆரம்பிக்கிறது. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியாவை ஒருநாள் போட்டிகளில் எதிர்கொள்ள இருக்கிறது. அது அவரது திறமைக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும் என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுநர்கள்.
இந்த தொடரில் கில் 4 முக்கிய சவால்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.
ரோஹித்தின் இடத்தை நிரப்ப முடியுமா?
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளைப் பொறுத்தவரை ஒரு மிகச்சிறந்த கேப்டனாக ரோஹித் சர்மா இருந்துள்ளார். அவரது தலைமையில் 56 போட்டிகளை சந்தித்த இந்திய அணி, அதில் 42-ல் வெற்றி பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 75 சதவீத போட்டிகளை வென்றுள்ளது.
2023 உலகக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டியைத் தவிர மற்ற அனைத்துப் போட்டிகளிலும் இந்தியா வெற்றியை ருசித்துள்ளது.
அடுத்துவந்த சாம்பியன் கோப்பைத் தொடரில் ஒரு போட்டியில்கூட தோற்காமல் தொடரை கைப்பற்றியது.
இந்த வெற்றிகளால் ஒருநாள் போட்டிக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியா இப்போது முதல் இடத்தில் இருக்கிறது.
இந்தச் சூழலில்தான் கேப்டன் பதவியை ரோஹித்திடம் இருந்து பறித்து சுப்மன் கில்லுக்கு கொடுத்திருக்கிறார்கள்.
ரோஹித் சர்மா பெற்றதைவிட பெரிய அளவிலான வெற்றிகளைப் பெறவேண்டிய கட்டாயத்தில் சுப்மன் கில் இருக்கிறார்.
இந்திய அணியைத் தொடர்ந்து நம்பர் 1 இடத்தில் தக்கவைக்கும் சவாலான பணியும் அவரது தலையில் சுமத்தப்பட்டுள்ளது. அதை அவர் எப்படி சமாளிப்பார் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சீனியர்களை வழிநடத்தும் முறை:
ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோரின் பேட்டிங்கை பார்த்து வளர்ந்தவர் சுப்மன் கில். இப்போது அவர்கள் இருவருக்கும் தலைவனாக, கேப்டனாக செயல்பட வேண்டிய நிலையில் கில் இருக்கிறார்.
ஒரு பக்கம் பயிற்சியாளர் கம்பீருக்கும், மூத்த வீரர்களான கோலி, ரோஹித் ஆகியோருக்கும் இடையே கருத்து மோதல்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது.
கேப்டன் என்ற முறையில் கில் அதையும் சமாளிக்க வேண்டும். 26 வயதேயான கில்லுக்கு இது சவாலாக விஷயமாக இருக்கும்.
அணியை கட்டமைக்க முடியுமா?
தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து பல கோப்பைகளை வென்றதற்கு காரணம் தங்களுக்கான அணியை அவர் கட்டமைத்துக் கொண்டதுதான்.
அதேபோல் 2027-ம் ஆண்டு உலகக் கோப்பையில் வெற்றி பெற வேண்டுமானால் அதற்கான அணியை அவர் இப்போதில் இருந்தே கட்டமைக்க வேண்டும். அதற்காக புதிய வீரர்களை, தனக்கு நம்பிக்கையான வட்டத்தை உருவாக்க வேண்டும்.
கவுதம் கம்பீரை சமாளிப்பாரா?
எல்லாவற்றையும்விட சுப்மன் கில்லுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால், அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீரை சமாளிப்பதுதான்.
தோனி, ரோஹித் சர்மா ஆகியோர் அடுத்தடுத்து கோப்பைகளை வெல்ல முக்கிய காரணம், அவர்களுக்கு கிடைத்த பயிற்சியாளர்கள். தோனிக்கு கேரி கிர்ஸ்டனும், ரோஹித்துக்கு ராகுல் திராவிட்டும் முழு சுதந்திரம் கொடுத்தார்கள்.
ஆனால், கில்லுக்கு கிடைத்துள்ள பயிற்சியாளரான கம்பீர், எல்லா விஷயங்களிலும் தானே முடிவெடுக்க விரும்புகிறார்.
கேப்டன் அவருக்கு பொம்மையாக இருக்கவேண்டும் என்று நினைக்கிறார். அவரையும் கில் சமாளித்தாக வேண்டும்
இத்தனை சவால்களையும் சமாளித்து ரோஹித் சர்மாவின் இடத்தை கில் நிரப்புவாரா என்று பார்ப்போம்.
– பி.எம். சுதிர்