’ஆத்தா ஆடு வளர்த்துச்சு, கோழி வளர்த்துச்சு, நாய் வளர்க்கலை. இந்த சப்பாணியைத்தானே வளர்த்துச்சு’ என்றொரு வசனம் ‘16 வயதினிலே’ படத்தில் இடம் பெற்றது. மிகவும் பிரபலமான வசனம் இது.
‘ஆடு நனையுதேன்னு ஓநாய் அழுதுச்சாம்’ என்பன முதலான ‘ஆடு’ குறித்தான எத்தனையோ பழமொழிகளும் உள்ளன.
‘தோள்ல ஆட்டை வைச்சிக்கிட்டே அதைத் தேடுன கதையாப் போச்சு’ என்றும் சொல்லுவார்கள்.
‘ஆடு… கதை…’ என்பதை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு, அந்த ‘ரூட்’டில் ஒரு கதையை அமைத்தால், அந்த ஆடு கதைக்கும் கதையின் குழப்பங்களுக்கும் தீர்வு சொல்லும் விதமாக, தீயாய் வேலை செய்கிறது என்று அமைத்தால் எப்படியிருக்கும்?
இப்படியெல்லாம் சாண்டோ சின்னப்பா தேவரைத் தவிர வேறு யார் நினைக்க முடியும்? செயல்படுத்த முடியும்?
இந்தக் கட்டுரை ‘ஆட்டுக்கார அலமேலு’ படம் பற்றித்தான் என்பதைச் சொல்லவே தேவையில்லை.
ஸ்ரீப்ரியா படம் முழுவதும் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். சொல்லப்போனால், அலமேலுவுக்கும் ஆட்டுக்கும்தான் முக்கியமான ரோல். படம் மிகப்பெரிய அளவுக்கு சுவாரசியம் கொடுத்தது. காரணம்… ஆடு.
ஆடு பாட்டு கேட்கும். டேப் ரிக்கார்டரை எடுத்துக்கொண்டு வரும். நாயுடன் பயங்கரமாக சண்டை போடும். கடிதத்தை பத்திரமாகக் கவ்விக்கொண்டு, சேர்க்க வேண்டிய இடத்தில் குறித்த நேரத்துக்குள் கொண்டுபோய்ச் சேர்க்கும்.
இரண்டரை மணி நேரப் படத்தில், ஆட்டுக்காகவே இருபது முப்பது இடங்களில் கைத்தட்டினார்கள் ரசிகர்கள். அதைப் பார்த்த ஆட்டுக்காரர் ரொம்பவே சந்தோஷப்பட்டிருப்பார்.
அலமேலு சொன்னதையெல்லாம் கேட்கும் கிளிப்பிள்ளை போல் ராமு எனும் ஆடு படு சுட்டியாகவும் கெட்டியாகவும் அலமேலு கூடவே வந்துகொண்டிருக்கும்.
குடும்பத்துடன் வந்து படத்தைப் பார்த்தார்கள். குழந்தைகள் குதூகலமாகி படம் பார்த்து கரவொலி எழுப்பினர்.
பள்ளிக்குச் சென்று, ஆடு செய்த சாகசங்களையெல்லாம் நண்பர்களிடம் சொல்லிச் சொல்லி வியந்தார்கள்.
தேவரின் தண்டாயுதபாணி பிலிம்ஸ் தயாரித்த படம். ஆர்.தியாகராஜன் இயக்கினார். சங்கர் கணேஷ் இசையமைத்தார்கள். கண்ணதாசன் பாடல்களை எழுதினார்.
இந்தப் படத்துக்கு என்ன தலைப்பு வைப்பது என்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தார் தேவர். உதவியாளர்கள் ஒவ்வொரு தலைப்பைச் சொல்ல எதுவுமே திருப்தி தரவில்லை அவருக்கு.
அப்போதெல்லாம், அதாவது அந்தக் காலத்திலெல்லாம் பழைய படங்கள், தியேட்டரில் ஒருவாரம், பத்துநாள் என்றெல்லாம் ஓடும். 90-கள் வரை இவையெல்லாம் நிகழ்ந்தன. பழைய படங்கள், அறுபதுகளின் படங்கள், எழுபதுகளில் வந்த படங்கள் என்றெல்லாம் தியேட்டருக்கு வரும்.
தேவர், காரில் வேடிக்கை பார்த்தபடியே போய்க்கொண்டிருந்தபோது, ஒரு போஸ்டரைப் பார்த்தார். சட்டென்று அவருக்குள் ‘ஆட்டுக்கார அலமேலு’ எனும் டைட்டில் வந்தது. அப்படி அவர் பார்த்த சினிமா போஸ்டர் ‘மாட்டுக்கார வேலன்’.
எம்ஜிஆர் நடித்த ‘மாட்டுக்கார வேலன்’ ஈர்க்கவே, ‘ஆட்டுக்கார அலமேலு’ எனும் டைட்டில் உருவானது.
‘இந்தப் படத்தில் ஸ்ரீப்ரியாவுக்கு பதிலாக வேறு யாரையாவது போடலாம்’ என்று உதவி இயக்குநர்கள் சொல்ல, கோபமாகி மறுத்துவிட்டாராம் தேவர். ‘அந்தப் பொண்ணுதான் நடிக்கணும். நல்லாத்தானே நடிக்குது, அப்புறமென்ன…’ என்றார் தேவர்.
ஸ்ரீப்ரியா அப்போதுதான் வளர்ந்துகொண்டிருந்த தருணம். படத்தையும் கதையையும் சொன்னார்கள். கேட்டுக்கொண்டார் ஸ்ரீப்ரியா.
படத்தின் தலைப்பு ‘ஆட்டுக்கார அலமேலு’ என்று சொல்ல குஷியாகி சம்மதம் தெரிவித்தார். அதற்குக் காரணம்… ஸ்ரீப்ரியாவின் நிஜப்பெயர் அலமேலு.
அப்போதெல்லாம் சிவகுமார் படிப்படியாக வளர்ந்துகொண்டிருந்த காலம். அப்போது புதிதாகப் படம் கிடைத்ததும், உடனே நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பார்த்து ஆசி பெறுவது சிவகுமாரின் வழக்கம்.
’தேவர் பிலிம்ஸ்’ படத்தில் நடிக்கும் விவரத்தைச் சொல்லி, ’ஆட்டுக்கார அலமேலு’ படத்தில் நடிப்பதைச் சிவகுமார் சொல்லி முடிப்பதற்குள், சிவாஜி கேட்டாராம்… ‘நீ ஆடா நடிக்கிறியா? ஹீரோவா நடிக்கிறியா?’ என்று!
இப்படியான குசும்பும் குறும்பும் நிறைந்த பேச்சுகள் சிவாஜியிடம் இருந்து சர்வசாதாரணமாக வரும் என்பதையும் சிவகுமார் மேடையில் பலமுறை சொல்லியிருக்கிறார்.
1977 நவம்பர் 10-ம் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டது ‘ஆட்டுக்கார அலமேலு’. திருச்சியில் முதல் குளிர்சாதன திரையரங்கம் எனும் பெருமை பெற்ற ‘கலையரங்கம்’ தியேட்டரில் படம் பார்த்தபோது எனக்கு வயது ஒன்பது.
படம் வெளியாகி, பல தியேட்டர்களில் நூறு நாள், 150 நாள், 200 நாள் என்றெல்லாம் ஓடி வசூல் குவித்தது.
வசூல் மழையில் நனைந்தது ஆடு. எழுபதாவது நாளின்போது, ஒரு பிரத்யேக கார் ஒன்றைத் தயார் செய்தார் தேவர். காரின் ‘டாப்’ எடுக்கப்பட்டு, திறந்தபடியே இருந்தது. ஆடு நிற்பதற்கும் அமருவதற்கும் வசதியாக இடம் வைக்கப்பட்டது. அதேசமயம், மக்கள் பார்க்கும் வகையில் ஆடு நிறுத்தப்பட்டது.
சென்னையில் தொடங்கி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ‘ஆட்டுக்கார அலமேலு’ ஓடுகிற தியேட்டர்களில் இந்த ஆடு வந்து நின்றது. ரசிகர்கள் சுற்றிச்சுற்றி வந்து ‘ராமு’ ஆட்டினை ரசித்தார்கள்.
ஊருக்குள் ஊர்வலமாக வந்ததால் கிடைத்த ‘ஆடு தரிசனம்’… படம் பார்க்க இன்னொரு முறை இன்னொரு முறை என்று எல்லோரையும் ஈர்த்தது. பார்க்காதவர்களையும் பார்க்கவைத்தது.
முதல்நாள் கூட்டம் போல, எண்பதாவது, 90-வது, 100-வது நாட்களைக் கடந்தும் கூட்டம் அள்ளியது.
’ஆட்டுக்கார அலமேலு’ படத்தின் வெற்றியால் தெலுங்கு, இந்தி என்றும் ‘ராமு’ ஆடு ரீமேக் செய்யப்பட்டு, இந்தி, தெலுங்கெல்லாம் பேசாமலேயே அங்கேயும் வெற்றி வாகை சூடியது.
ஒவ்வொரு தியேட்டருக்கும் ‘ஆடு’ வந்ததும் மக்கள் வெள்ளத்தில் ஆடு இருந்ததும் நாளேடுகளில் பரபரப்புச் செய்திகளாகின.
இதையெல்லாம் பார்த்துவிட்டு கவிஞர் இன்குலாப் கவிதை ஒன்று எழுதினார்.
அந்தக் கவிதை இதுதான்..!
‘ஆடு கம்பீரமாக நின்றது.
மக்கள்தான்
மந்தையாகிப் போனார்கள்!’
– நன்றி: காமதேனு