கவிமணி: காலத்தை வென்ற கவிஞர்!

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை – ஆசிய ஜோதி, நாஞ்சில் நாட்டு மருமக்கள் வழி மான்மியம், குழந்தைச் செல்வம், தேவியின் கீர்த்தனைகள் போன்ற நூல்களை எழுதிப் புகழ் பெற்றவர்.

1876-ம் ஆண்டு, ஜூலை மாதம் 28-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டம், தேரூர் கிராமத்தில் சிவதாணு – ஆதிலட்சுமி தம்பதிக்கு மகனாக பிறந்தார் கவிமணி.

நாஞ்சில் நாட்டு கவிஞரான இவர், அழகம்மை ஆசிரிய விருத்தம் என்ற நூலை இயற்றினார். 

எட்வின் அர்னால்டு என்பவர் எழுதிய லைட் ஆப் ஆசியா என்ற நூலை அழகிய தமிழில் ஆசிய ஜோதி என மொழிப்பெயர்த்துள்ளார். பாரசீக கவிஞர் உமர் கய்யாம் பாடல்களை தமிழில் ரூபாயத் என்ற தலைப்பில் மொழி பெயர்த்துள்ளார்.

இனிய தமிழில் எவரும் விளங்க பாடல் இயற்றும் திறன் மிக்கவர். அவரின் புகழ்பெற்ற கவிதைகளில்,

தோட்டத்தில் மேயுது வெள்ளைப் பசு
அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு….

– போன்ற பாடல்கள் என்றைக்கும் மக்கள் மனதில் நிலைத்திருக்கும்.

பணத்தின் மீது பற்றில்லாதவராகவே வாழ்ந்தார். பலருக்குப் பணத்தைக் கடனாகக் கொடுத்தாலும் திரும்ப வாங்க மறுத்துவிடுவார்.

தலையணையின் கீழ் எப்போதும் வெள்ளைத்தாளும் சீவிய பென்சிலும் இருக்கும். கவிதை மனதில் வந்தால் உடனே எழுதிக் கொள்வார்.

கவிமணியைச் சுற்றி எப்போதும் அறிஞர்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

ஒருநாள் திடிரென தியாகராஜ பாகவதர், கவிமணியைச் சந்திக்க அவரது வீட்டிற்கு வந்து விட்டார். இன்ப அதிர்ச்சியில் திளைத்த கவிமணி பாகவதரிடம் உரையாடி சில பாடல்களைப் பாடிக் காட்டும்படி சொல்லி, அவற்றைக் கேட்டு மகிழ்ந்தார்.

“நான் இறந்த பிறகு எனக்கு சமாதி அமைக்கக் கூடாது. சிலை வைக்கக் கூடாது” என்றவர், கடந்த 1954-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ந் தேதி தன் இன்னுயிர் நீத்தார்.

– மணி அமுதன்

Comments (0)
Add Comment