பாபநாசம் சிவனும் ஆயிரக்கணக்கான பாடல்களும்!

இசைநயம் மிக்கப் பாடல்களை தமிழில் இயற்றி சிறந்த தொண்டாற்றியவர் பாபநாசம் சிவன்.
 
பாபநாசம் சிவன் 1890-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26-ம் நாளில் தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ள போலகம் என்னும் சிறிய கிராமத்தில் இராமாமிர்த அய்யருக்கும், யோகாம்பாளுக்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார்.
 
பாபநாசம் சிவனின் இயற்பெயர் “இராமைய்யா”. இவர் தந்தையாருடன் நாள்தோறும் கோவிலுக்குப் போகும்போது இறைவனது நாமாவளிகளைப் பாடிக்கொண்டே செல்வார்.
 
பிற்காலத்தில் கீர்த்தனைகள் இயற்ற முன்னோடியாக இவ் அனுபவம் திகழ்ந்தது.
 
சிவனின் ஏழாவது வயதில் தந்தை காலமான பிறகு, தாயாருடன் திருவனந்தபுரம் சென்றார். அங்கு திருவனந்தபுரம் மன்னர் சமஸ்கிருத கலாசாலையில் படித்து “உபாத்யாய” “வையாகரணி” என்ற இருபட்டங்களையும் பெற்றார்.
 
சிறந்த சங்கீத வித்வான்களிடம் இசை பயிற்சியும் பெற்றார். பாபநாசத்தில் தங்கிய பொழுது, கணபதி அக்ரஹாரத்தை சேர்ந்த சாம்பசிவ ஐயர் இவரைப் ‘பாபநாசம் சிவன்’ என்று அழைக்க, அன்று முதல் பாபநாசம் சிவன் என்ற பெயர் இசையுலகில் வழங்கப்படலாயிற்று.
 
பாபநாசம் சிவன் 1911 ஆம் ஆண்டு படைத்த “உன்னைத் துதிக்க அருள் தா” என்ற குந்தலவராளி இராகப் பாடல் இவரின் முதல்பாடலாகும். பாபநாசம் சிவன் இயலையும், இசையையும் நன்கு அறிந்தவராக விளங்கினார்.
 
இவர், ஜெயதேவரின் அஷ்டபதியைத் தமிழில் மொழிபெயர்த்தார். அவற்றிற்கு விரிவுரையும் வழங்கியுள்ளார்.
 
“வடமொழிச் சொற்கடல்” என்ற வடமொழி – தமிழ் அகராதியைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். தமிழ், சமஸ்கிருத மொழிகளில் வல்லவராக வாழ்ந்துள்ளார்.
 
சென்னையிலுள்ள கலாசேத்ரா நிறுவனத்தின் இசைப்பிரிவின் தலைவராகப் பணியாற்றினார்.
 
பாபநாசம் சிவன் நாடகத்துறை வல்லவராகவும் திகழ்ந்துள்ளார். பதினான்கிற்கும் மேற்பட்ட நாடகங்களுக்கு இசை அமைத்துள்ளார். நாடகங்களுக்குரிய பாக்களையும் புனைந்துள்ளார். சில நாடகங்களில் தானே நடித்தும் உள்ளார்.
 
கலைத்துறையில் ஒன்றான திரைத்துறையில் சிவன் அவர்கள் சிறப்பான தடம் பதித்துள்ளார். ஏராளமான திரைப்படபாடல்களுக்கு இசையமைத்துக் கொடுத்துள்ளார்.
 
1933 முதல் 1960-ம் ஆண்டுக்குள் சுமார் 120 படங்களுக்கு 1000-க்கும் மேற்பட்ட பாடல்கள் எழுதியுள்ளார். இப்பாடல்களுக்கு தாமே இசையமைத்துள்ளார்.
 
இவர் தனிப்பாடல்களையும், திரைப்படப் பாடல்களையும் ஏராளமாக இயற்றியுள்ளார். இவரின் பாடல்கள் எளிமையாகவும், இனிமையாகவும், எளிய தமிழ் மொழியில் அமைந்திருப்பதால் மக்கள் அனைவரும் விரும்பிப் பாடும் பாடல்களாக அமைந்துள்ளன.
 
இறைப்பணியில் மட்டுமல்லாமல், தேச விடுதலைக்கும் தொண்டாற்றியுள்ளார். இவர் நாட்டுப்பற்று மிகுந்த பாடல்களையும் புனைந்துள்ளார்.
 
தேசத் தந்தை மகாத்மா காந்தியடிகள் மீதும் பாரதியார் மீதும் பாடல்கள் பலவற்றை இயற்றியுள்ளார்.
 
இறைப்பற்றும் தேசப்பற்றும் மிக்க பாபநாசம் சிவன் அவர்கள் தமது 83-வது அகவையில் 1.10.1973-ம் ஆண்டு இறைவனடி சேர்ந்தார். இவருடைய பாடல்கள் புகழடைந்த அளவு வேறு எவருடைய பாடல்களும் அவரவர் வாழ்நாட்களில் புகழடையவில்லை.
 
சிறந்த கவிவாணராகவும், இசைவாணராகவும், கலைவாணராகவும் தொண்டாற்றிய பாபநாசன் சிவனுக்கு கலையுலகமும் தமிழிசை உலகமும் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.
 
*
 
நன்றி: ஓல்டு இஸ் கோல்டு இணைய தளம்
Comments (0)
Add Comment