என்னது தெரியலையா.. கூகுள் பண்ணிப் பார்ப்போமா..?!

ஒருகாலத்தில் பல விஷயங்கள் அறிந்தவரைப் பார்த்து, ‘அவரே ஒரு லைப்ரரி தான்’ என்று சொல்லும் வழக்கம் இருந்தது. இன்றோ, ‘அவரே ஒரு கூகுள் தான்’ என்கிறோம். இந்த வேறுபாடே ‘கூகுளுக்கு சமகாலத்தில் கிடைத்துள்ள இடம் எத்தகையது’ என்பதைச் சொல்லிவிடும்.

கூகுள் என்பது ஒரு கணினி நிறுவனம். இன்று, அதன் கரங்கள் கணிப்பொறி உலகின் பல தளங்களில் நிறைந்து நிற்கிறது. ஆனால், அதன் தொடக்கம் எல்லாவற்றையும் போலச் சாதாரணமானதாகவே இருந்தது.

’தேடு பொறி’ எனப்படும் ‘சர்ச் என்ஜின்’னுக்கான தேவை கணினி பயன்பாடு அதிகமாகும்போது உருவாகும் என்பதைக் கணித்து, அதற்கான பணியில் இறங்கியவர்கள் கணிசம்.

தொண்ணூறுகளின் தொடக்கத்தில் அதற்கான காலம் கனிந்தது எனலாம். அப்படிக் களமிறங்கிய இருவரால் ஆரம்பத்தைக் கண்டது ‘கூகுள்’.

கூகுள் பின்னணி..!

அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் பிரிவில் சந்தித்துக்கொண்ட இரண்டு ஆய்வு மாணவர்களான செர்கே பிரின் மற்றும் லேரி பேஜ் ஆகியோரால் அதற்கான விதை இடப்பட்டது.

இணைய உலகின் வீச்சு இப்படித்தான் இருக்கும் என்று மனதளவில் கற்பனை கண்ட அவர்கள் இருவரும், நல்லதொரு ‘சர்ச் என்ஜின்’னை உருவாக்க விரும்பினார்கள். அதற்காகச் சில ஆண்டுகளை, பல மாதங்களைச் செலவழித்தார்கள்.

1998-ம் ஆண்டு செப்டம்பர் 7-ம் தேதியன்று ‘கூகுள்’ என்பது அதிகாரப்பூர்வமாக உருவானாலும், செப்டம்பர் 27-ம் தேதியன்று கூகுளுக்கான முதல் அலுவலகம் ஒரு கேரேஜில் தொடங்கப்பட்டது. அதுவே ‘கூகுளின் பிறந்தநாள்’ ஆகச் சமீபமாகக் கொண்டாடப்படுகிறது.

அதேநேரத்தில், கூகுளின் தொடக்கம் சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல நிகழ்வுகளை உள்ளடக்கியது என்று சொல்வோரும் உண்டு.

மேற்சொன்ன செர்கே பிரின், லேரி பேஜ் இருவரும் 1995-ல் சந்தித்தபோது இதற்கான ‘ஐடியா’ இருவரிடையே உருவானதாகவும், 1996-ம் ஆண்டில் இருவரும் ‘தேடு பொறி’க்கான வேலைகளைத் தொடங்கியதாகவும், 1997-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதற்கான ‘வெப் டொமைன்’ அமைக்கப்பட்டதாகவும், 1998-ம் ஆண்டு செப்டம்பர் 4-ம் தேதியன்று அது அதிகாரப்பூர்வமாக உருவானதாகவும் சொல்லப்படுகிறது. செப்டம்பர் 7-ம் தேதியன்று அது உருவானதாகவும் சிலர் சொல்கின்றனர்.

முதல் சில ஆண்டுகள் செப்டம்பர் 4, 7, 8, 26 எனப் பல தேதிகளில் கூகுள் பிறந்ததினம் கொண்டாடப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 2006-ம் ஆண்டு முதலே அந்த தேதி ‘செப்டம்பர் 27’ ஆக மாறியதாகவும் கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.

முதன்முதலில் இதற்கு ‘backrub’ என்றே பெயர் வைக்க செர்கே பிரின், லேரி பேஜ் இருவரும் முடிவு செய்திருக்கின்றனர்.

பிறகு, தங்களது தேடு பொறி எத்தனையோ கோடி தகவல்கள் கிடைக்கும் வகையில் இருக்க வேண்டுமென்று விரும்பியிருக்கின்றனர். ஆங்கிலத்தில் 1-க்கு பின்னால் நூறு பூஜ்யங்கள் இருப்பதனை ‘கூகோல்’ (googol) என்று சொல்கின்றனர்.

அந்த வார்த்தையைத் தங்களது தேடுபொறிக்காப் பதிவு செய்யும்போது எழுத்துகளைத் தவறாக இட, இறுதியில் நமக்கான ‘கூகுள்’ (google) கிடைத்திருக்கிறது.

தேடுபொறிக்கான தேவை..!

குறிப்பிட்ட தகவலை எழுத்தாகப் பதிவிட்டு, அது தொடர்பான தகவல்களைப் பெறவே பெரும்பாலோனோர் ‘கூகுள்’ பயன்படுத்துகின்றனர். இது போக படம், காணொலி, செய்தி, தயாரிப்புகள் விற்பனை, கல்வி சார்ந்து தேடுபொறி பயன்படுத்தும் வழக்கம் உள்ளது.

ஒருகாலத்தில் அல்டாவிஸ்டா, யாஹூ, எம்எஸ்என் எனச் சில ‘சர்ச் என்ஜின்கள்’ இருபதாண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்டன. இப்போதும் பிங், பைது, டக்டக்கோ, யாண்டெக்ஸ், ஏக்யூஎல் சர்ச், ஆஸ்க்.காம் உள்ளிட்டவை முன்னணியில் இருந்து வருகின்றன. குறிப்பிட்ட நாடுகளில் சிலவற்றின் பயன்பாடு அதிகமாக இருந்து வருகிறது.

தகவல்களை உடனடியாகப் பெறுவது, சரியான தகவலைத் தரும் இணையத்தை அறிவது, வர்த்தகத்திற்கு உதவுவது, கற்றலை ஊக்குவிப்பது, தயாரிப்புத்திறனை விரிவுபடுத்துவது, தனிப்பட்ட தேடலுக்கு உதவுவது என்று தேடுபொறியின் தேவை மற்றும் அவசியம் ஒவ்வொரு நாளும் பலப்பலவாகக் கிளை விரித்து விரிகின்றன.

இன்று ஏதேனும் ஒரு விஷயம் குறித்து தேடினால், அவை குறித்து தகவல்கள் மலையெனக் குவிகின்றன. அவற்றில் இருந்து தேவையானதை, முக்கியமானதை, மிகச்சரியானதை அறிந்து தருவதில் ‘தேடுபொறி’ முக்கியப் பங்காற்ற வேண்டுமென்ற எதிர்பார்ப்பு அதிகமாகியிருக்கிறது.

அதனை நிறைவேற்றுகிற காரணத்தால், ‘கூகுள்’ பலரால் விரும்பப்படுகிறது.

’துப்பாக்கி’ படத்தில் ‘கூகுள் கூகுள் பண்ணிப் பார்த்தேன் உலகத்துல’ பாடல் வரும்போது, அதனை வெறும் ‘தேடுபொறி’யாக மட்டுமே பெரும்பாலான மக்கள் நோக்கினார்கள். இன்று அதன் தயாரிப்புகள் மற்றும் சேவை மிகப்பெரிய ‘சாம்ராஜ்யமாக’ உருவெடுத்திருக்கிறது

தகவல் தேடலைப் பொறுத்தவரை கூகுள் சர்ச், மேம்ப்ஸ், நியூஸ், ஷாப்பிங், இமேஜஸ், ட்ரான்ஸ்லேட் மட்டுமல்லாமல் வீடியோவுக்காக ‘யூடியூப்’பும் உள்ளது.

இன்னும் மின்னஞ்சல், காணொலி நேரலை, காலண்டர், சேமிப்பகம், ஆவணப்படுத்துதல் சேவை, குறிப்பேடு செயலி மற்றும் ஆண்ட்ராய்டு மொபைல், வீட்டு உபயோகப் பொருட்கள், கண்காணிப்பு சாதனங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த பயன்பாடுகள் என்று பரந்து விரிந்திருக்கிறது ‘கூகுள்’.

உலக அளவில் சுமார் 490 கோடி பேர் கூகுளை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவில் மட்டும் ஒரு மாதத்தில் சுமார் 1,200 கோடி முறை தேடலுக்காக கூகுள் பயன்படுத்தப்படுகிறது. அமெரிக்காவுக்குப் பிறகு அந்நிறுவனத்திற்கான இரண்டாவது பெரிய சந்தையாக நம் நாடு உள்ளது. கிட்டத்தட்ட 40 கோடி இந்தியர்கள் தினமும் அதனைப் பயன்படுத்துகின்றனர்.

ஏதாவது ஒரு சந்தேகம் என்றால் அகராதி, கலைக்களஞ்சியம் மற்றும் நூலகத்தில் உள்ள முக்கிய நூல்களை மணிக்கணக்கில் தேடுவதற்குப் பதிலாக, ‘என்னது தெரியலையா.. கூகுள் பண்ணி பார்ப்போமா..?’ என்று இறங்கிவிடுகிறோம்.

இந்த மாற்றம் நிகழச் சில ஆண்டுகள் ஆகியிருக்கின்றன; அதற்காகப் பலர் உழைத்திருக்கின்றனர் என்பதுவே ‘கூகுள்’ பிறந்தநாள் கொண்டாட்டத்தின் சிறப்பு.

இருபதாண்டுகளுக்கு முன்னர் சுமார் 1,000 டாலரை கூகுள் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்கள், இன்று அதன் மதிப்பான 32,000 டாலருக்கு சொந்தக்காரர்களாக இருப்பார்கள் என்கிறது ஒரு தரவு.

இது போன்ற தகவல்கள் எல்லாமே கணினி யுகத்தில் புதிதாகத் தொழில் தொடங்க முனைபவர்களுக்கு ஊக்கமூட்டுகிற விதத்தில் உள்ளன. ஆகவே, கூகுளின் பிறந்தநாளைக் கொண்டாடுவது நம்மில் பல புதிய நூற்றாண்டுக்கான தொழில்முனைவோர்களை உருவாக்க வகை செய்யும்..!

– மாபா

Comments (0)
Add Comment