பொன்மனச் செம்ம எம்.ஜி.ஆரின் சமாதியை ஒரே ஒரு முறையாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் எழுத்தாளர் லா.ச.ரா.
இதை அவரது மகன் சப்தரிஷி சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவாக எழுதி இருந்தார். அதைப் படித்த எனக்கு வியப்பாக இருந்தது.
ஏனென்றால் லா.ச.ரா போன்ற இலக்கிய மேதைகளைக் கூட ஏதோ ஒரு வகையில் எம்.ஜி.ஆர். கவர்ந்திருக்கிறார்.
அது பற்றி சப்தரிஷி பகிர்ந்ததில் இருந்து…
ஒரு நாள் தன் மகன் சப்தரிஷியை அழைத்தாராம் லா.ச.ரா.
“கண்ணா… எல்லாரும் எம்.ஜி.ஆர். சமாதி, எம்.ஜி.ஆர்.சமாதிங்கறாளே, என்னை ஒரு தடவை அழைச்சுண்டு போய் காண்பிச்சுடு!”
இதைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காமல் ஆச்சரியம் அடைந்தாராம் சப்தரிஷி. ஆனாலும் தன் அப்பாவின் விருப்பப்படியே அவரை எம்.ஜி.ஆர். சமாதிக்கு அழைத்துச் சென்றாராம்.
சமாதி அருகே போய், செருப்பைக் கழற்றி விட்டு, சமாதியை ஒருதடவை சுற்றி வந்து தொட்டுக் கும்பிட்டாராம் லா.ச.ரா.
அதன் பின் அங்கிருந்து புறப்பட்ட லா.ச.ரா, பஸ் ஸ்டாப்புக்கு வந்து பஸ்ஸில் ஏறும் வரைக்கும் எதுவுமே பேசவில்லையாம்.
பஸ் நகர ஆரம்பித்த பிறகு சப்தரிஷி – லா.ச.ரா.விடம் கேட்டாராம்:
“அப்பா, உன்கிட்ட ஒண்ணு கேட்கணும்.”
“நீ கேப்பேன்னு எதிர்பார்த்தேன். கேக்கணும்னும் எதிர்பார்த்தேன் கேளு.”
“ஏம்பா எம்.ஜி.ஆர் சமாதியைத் தொட்டுக் கும்புட்டே..?”
சப்தரிஷியின் இந்தக் கேள்விக்கு சற்று நேர மௌனத்துக்குப் பின் லா.ச.ரா இப்படிப் பதில் சொன்னாராம்:
“செத்துப் போனவருக்கு ஜாதி, மதம், சிறியவர், பெரியவர் என எதுவுமே கிடையாது. அவர் காலமானதால் மனிதர்களைவிட மேலானவர். தவிர, உலகத்துல இருக்கற எல்லாருக்குமே செத்துப் போனப்பறமும் உசுரோட இருக்கணும்னுதான் ஆசை. நாம எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறோம். அவர் செஞ்சுட்டார். நான் வணங்கினது அந்தச் சாதனைக்குத்தான்!”
இந்த விஷயத்தைப் படித்து முடித்த பிறகு ஒன்று தோன்றியது. மாயையைக் கடந்து உண்மையைக் காண்பவர்கள் மனிதர்களில் தெய்வத்தைக் காண்கிறார்கள். அவர்களும் கூட தெய்வமாகவே ஆகிப் போகிறார்கள்.
– ஜான் துரை ஆசிர் செல்லையா
- நன்றி: தேவராஜ் ஆண்ட்ரியூஸ் முகநூல் பதிவு