ஆட்டோக்களின் மீட்டர்கள் வெறும் காட்சிப் பொருளா?

ஊர் சுற்றிக் குறிப்புகள்:

சென்னையில் ஆட்டோக்களிலும் வாடகை கார்களிலும் தொடர்ந்து பயணிக்கிறவர்கள் படும்பாடெல்லாம், எந்தப் போக்குவரத்துத் துறை அமைச்சரும் அறிவதில்லை.

ஆம்னி பஸ்களின் கட்டணத்தை எப்படி அரசால் ஒழுங்குபடுத்த முடியவில்லையோ, அதே மாதிரிதான் ஆட்டோ மற்றும் வாடகை டேக்ஸிகளின் நிலையும்.

எதனால், குறிப்பிட்ட தூரத்திற்குச் செல்ல அதிகக் கட்டணத்தைக் கேட்கிறார்கள் என்பதை எந்தப் பயணியும் உரிமையுடன் கேட்க முடியாது.

திங்கட்கிழமை என்றால் ஒரு ரேட். விழாக்கள் மற்றும் முகூர்த்தங்கள் என்றால் தனி ரேட். இந்த விலையேற்றத்தை யார் கண்காணிப்பது?

யார்தான் நடவடிக்கை எடுப்பது?

பக்கத்தில் உள்ள கேரளாவைத் திரும்பிப் பார்த்தால், அங்கு மாநில அரசே பயணிகளுக்கும் ஓட்டுநர்களுக்கும் பயன்படும் விதத்தில் சில ‘ஆப்’களை உருவாக்கியிருக்கிறது. 

அதுமாதிரி தமிழ்நாட்டிலும் ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும், ஏன் தமிழக அரசுக்குமே பயன்படக்கூடிய விதத்தில் அத்தகைய ஆப் களை இங்குள்ள அரசே உருவாக்கக் கூடாது.

இதேநிலைதான் தமிழ்நாட்டில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களுக்கும் பொருந்தக் கூடியதாக இருக்கிறது. 

பக்கத்து மாநிலங்களில் ஆட்டோ மீட்டர் கட்டணங்கள், அந்த ஆட்டோக்களை ஓட்டுகிறவர்கள் விருப்பப்படி அல்லது தேவைப்படி மாற்றியமைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான ஆட்டோக்கள் ஓடினாலும் அவற்றில் உள்ள மீட்டர்கள் செயல்படாதபடி வெறும் காட்சிப் பொருளாகவே இருக்கின்றன.

ஒரு காலத்தில் இதே தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம் மிகுந்த வலிமையுடனும் ஒற்றுமை உணர்வுடனும் செயல்பட்டு ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்தி இருக்கின்றன.

அந்த காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இருந்த தொழிற்சங்க வலிமை இப்போது எங்கே போனது.

பிரபல ஆப் நிறுவனங்களுக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருபுறமும் இந்த ஆட்களை விரும்பாமல் பழைய நிலையிலேயே உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் ஒருபுறமும் சென்னை மட்டுமல்ல, தமிழகம் முழுக்க இம்மாதிரி இரண்டு பிரிவுகளாக ஆட்டோக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. 

தனியாக இயங்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில், எவ்வளவோ கோரிக்கைகள் வைக்கப்பட்டும் ஆட்சிகள் மாறியும் இன்னும் ஆட்டோக்கான மீட்டர் விஷயத்தில் இருந்துவரும் குழப்பம் அப்படியே நீடிக்கிறது.

இதனால், பாதிப்படைவது லட்சக்கணக்கான ஆட்டோ ஓட்டுநர்கள் மட்டுமல்ல, அந்த ஆட்டோக்களில் பயணிப்பவர்களும் தான். 

தமிழ்நாட்டில் இத்தகைய ஆட்டோக்களில் பயணம் செய்யும் எவருமே அந்த ஆட்டோ ஓட்டுநர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடியும்.

தேர்தல் நெருங்கும் வேளையிலாவது இப்படிப்பட்ட ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்களின் குரல் போக்குவரத்துத் துறை அமைச்சருக்குப் போய்ச் சேருமா?

சென்னையில் அடர்ந்துவரும் ஜனத்தொகை ஒருபுறம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நிலையில், சென்னையின் போக்குவரத்து நெரிசலை ஓரளவுக்காவது சமன்படுத்துகிற ஆட்டோ மற்றும் கார் ஓட்டுநர்கள் குரலைப் பரீசிலிப்பது காலத்தின் தேவை.

– யூகி

Comments (0)
Add Comment