இப்படியும் சில ‘பெயர்’ விநோதங்கள்!

சிலருக்குச் சூட்டப்பட்ட பெயர்களைக் கேட்டால் வியப்பாக இருக்கும்.

குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக அமலாகாத நேரத்தில் தமிழகத்தின் தென்பகுதிக் கிராமங்களில். ‘போதும் பொண்ணு’ என்கிற பெயர் சாதாரணம்.

முல்லைப் பெரியாறு அணை கட்ட சொந்தப் பணத்தையும் போட்டுக் கட்டிய ஆங்கிலேய அதிகாரியான பென்னிகுக்கின் பெயர் பெரியாறு பாசனப் பகுதிகளில் பல குழந்தைகளுக்கு வைக்கப்பட்டிருக்கிறது.

பொதுவுடமைக் கட்சித் தலைவர்களான மார்க்ஸ், லெனின், ஸ்டாலின், டிராட்ஸ்கி, பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், ஜீவா என்று பலருடைய பெயர்கள் தமிழகத்தில் வைக்கப்பட்டிருப்பதும் இயல்பாக நடந்திருக்கிறது.

சேலத்தில் பொதுவுடமைப் பிடிப்புக் கொண்ட ஒருவர் தன்னுடைய மகன்களுக்கு வைத்த பெயர்கள் சோஷலிசம், கம்யூனிசம், லெனினிசம்.

இதில் தனது மகன் சோஷலிசத்திற்குப் பெண் தேடியபோது, உறவினரின் மகளையே தேர்வு செய்திருக்கிறார். அவருடைய பெயர் ‘மம்தா பானர்ஜி’.

மணமகன் சோஷலிசத்திற்கும், மணமகள் மம்தாவுக்கும் சேலத்தில் நடந்த திருமணம், பெயர் வித்தியாசத்தால் ஊடகங்களில் செய்தியானது.

நடிகர் எம்.ஆர்.ராதா தன்னுடைய மகளுக்கு ‘ரஷ்யா’ என்று பெயர் வைத்தபோது, அது பற்றிக் கேள்வி கேட்டவர்களுக்கு அவருடைய பாணியில் சொன்ன பதில்:

“ஏம்ப்பா.. நீங்க பழனி, திருப்பதின்னு ஊருங்க பெயரை வைக்கும்போது, நான் என் மகளுக்கு ரஷ்யான்னு பெயர் வைக்கக் கூடாதாப்பா..”

– அகில் அரவிந்தன்

Comments (0)
Add Comment