பி.ஆர்.பந்துலு, மூத்த திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளில் படங்களை இயக்கியுள்ளார்.
‘சபாஷ் மீனா’, ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘கப்பலோட்டிய தமிழன்’, ‘கர்ணன்’, ‘பலே பாண்டியா’, ‘முரடன் முத்து’ என சிவாஜி கணேசனின் பல படங்களை இயக்கியவர், எம்.ஜி.ஆரின் ‘ஆயிரத்தில் ஒருவன், ‘நாடோடி’, ‘தேடி வந்த மாப்பிள்ளை’, ‘ரகசிய போலீஸ் 115’ படங்களையும் இயக்கியுள்ளார்.
இவற்றில் பெரும்பாலானவை மிகப்பெரிய வெற்றிபெற்ற வெள்ளிவிழாப் படங்கள்.
இந்தப் படங்கள் பெரும்பாலானவற்றில் பி.ஆர்.பந்துலுவிடம் உதவி இயக்குநராக வேலை பார்த்தவர் ஆர்.கே.சண்முகம். தவிர சண்முகம், பல படங்களுக்கு வசனமும் எழுதியுள்ளார்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தில் எம்.ஜி.ஆரும் நம்பியாரும் மோதிக்கொள்ளும் காட்சியில்,
நம்பியார்: கேவலம் ஒரு பெண்ணுக்காக நட்பை கெடுத்து கொள்ளாதே. யோசித்து சொல்.
எம்.ஜி.ஆர்: யோசிக்க வேண்டியவன் நானல்ல… அவளை யாசிப்பதை விடுங்கள்.
நம்பியார்: உயிர் மீது உனக்கு ஆசை இல்லையா?
எம்.ஜி.ஆர்: இதே கேள்வியை நானும் கேட்கலாமா?
நம்பியார்: மோதுவது தான் உன் முடிவா?
எம்.ஜி.ஆர்: உங்களுக்கு அதைத்தவிர வேறு வழியில்லை என்றால் நான் தயார்.
நம்பியார்: அவளை அடைந்தே தீருவேன்.
எம்.ஜி.ஆர்: அது தான் நடக்காது.
நம்பியார்: (கோபத்தோடு) என்னையே எதிர்க்கத் துணிந்து விட்டாய். மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர்: சினம் கொண்ட சிங்கத்துடன் தோற்று ஓடும்.
நம்பியார்: தோல்வியே அடையாதவன் நான்.
எம்.ஜி.ஆர்: தோல்வியை எதிரிகளுக்குப் பரிசளித்தே பழகியவன் நான்.
நம்பியார்: நாவை அடக்கு. நான் உன் தலைவன்.
எம்.ஜி.ஆர்: ஆனால் உங்கள் நடத்தை அப்படி இல்லையே.
- எம்.ஜி.ஆர் கண்ணன்