5 முதலமைச்சர்களுக்கு பாடல் எழுதிய கவிஞர்!

கவிஞர், பாடலாசிரியர் என பன்முகம் கொண்டவரான பூவை செங்குட்டுவன் திரைத்துறையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையிசைப் பாடல்களையும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட சுயாதீனப் பாடல்களையும், ஐந்தாயிரத்திற்கும் மேலான பக்திப் பாடல்களையும் எழுதியுள்ளார்.

1980-ம் ஆண்டு இவருக்கு கலைமாமணி விருது கொடுத்து கெளரவிக்கப்பட்டது. திரையிசைப் பாடல்களில் இவர் எழுதிய ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா…’ பாடலும் ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை…’ பாடலும் காலத்தால் அழியா புகழ் பெற்றவை.

குறிப்பாக இவர் எழுதிய ‘நாலும் தெரிந்தவன் நிலவுக்கே போகலாம்…’ என்ற பாடல் ஆர்ம்ஸ்ட்ராங் நிலவில் கால் பதித்தபோது, இலங்கை வானொலியில் அன்றைய தினம் முழுவதும் ஒலிபரப்பப்பட்ட பாடலாகும்.

பாடல்கள் எழுதுவது மட்டுமல்லாது நாட்டிய நாடகங்கள், தொலைக்காட்சி நாடகங்கள் பலவும் எழுதியிருக்கிறார். தமிழகத்தின் ஐந்து முதல்வர்களுக்கு பாடல் எழுதிய பெருமையும் இவருக்கு உண்டு.

அறிஞர் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் ‘அறிஞர் அண்ணா ஆட்சிதானிது’ என்று இவர் எழுதிய தனியிசை பாடல் பொதுக்கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவும், கூட்டம் நிறைவுபெறும் போதும் ஒலிபரப்பப்பட்டது.

கலைஞர் கருணாநிதிக்காக ‘கருணையும் நிதியும் ஒன்றாய் சேர்ந்தால் கருணாநிதியாகும்’ என்ற பாடலும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்காக ‘நான் உங்கள் வீட்டுப்பிள்ளை’ என்ற பாடலும், புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் முதன்முதலாக பாடிய இரண்டு அம்மன் பாடல்களையும் எழுதியவர் கவிஞர் பூவையார்.

மேலும், இன்றைய முதல்வர் ஸ்டாலின் அவர்களின் பல நாடகங்களுக்கும் பாடல்கள் எழுதியுள்ளார் பூவை செங்குட்டுவன்.

 

முருகவேல் காந்தி தமிழ்ப் பற்றினால், தனக்கு ‘பூவை செங்குட்டுவன்’ என்ற புனைபெயரைச் சூடிக் கொண்டார். திரையுலகில் சாதிப்பதற்காக சென்னைக்கு வந்த கவிஞர் பூவை செங்குட்டுவன், ஆரம்ப காலங்களில் நாடகங்களை எழுதினார்.
 
இவருடைய நாடகங்களுக்கு அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., ஏ.பி.நாகராஜன், கவிஞர் கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் தலமையேற்று வாழ்த்தியுள்ளனர்.
 
தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது,’மகாகவி பாரதியார் விருது’ ஆகிய விருதுகள் கவிஞர் பூவை செங்குட்டவன் பெற்ற விருதுகளில் குறிப்பிடத்தக்க விருதுகள்.


பக்தி மற்றும் புராண படங்களை எடுப்பதில் வல்லவரான இயக்குனர் ஏ பி நாகராஜன் மட்டும் தொடர்ந்து பூவை செங்கோட்டையனுக்கு வாய்ப்பு அளித்தார். அந்த வகையில் இன்றும் காதில் கேட்டால் சலிக்கவே சலிக்காத ஒரு பாடல், தாயிற் சிறந்த கோயில் இல்லை தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என செங்குட்டுவன் எழுதிய காலத்தால் அழிக்க முடியாத பாடல்.

இலக்கிய நயத்துடன் கூடிய பாடல்களைப் படைப்பதில் திறமையானவர் பூவை செங்குட்டுவன். 4000-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ள இவர், 3 படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார். 2 படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார்.

இதுதவிர மேடை நாடகங்கள், வானொலி நாடகங்கள், நாட்டிய நாடகங்கள் என பெரும் பணியாற்றியுள்ளார்.

இப்படி ஏராளமான திரைப்பட பாடல்களை எழுதிய பூவை செங்குட்டுவன், வயது மூப்பு காரணமாக இயற்கை எய்தினார். அவருக்கு வயது 90. அவரது உடல் சென்னையில் கலைத் துறையினர், பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment