போராட்டமே வாழ்க்கையாக வாழ்ந்த தோழர் நல்லகண்ணு!

“காலுக்கு செருப்புமில்லை, கால் வயிற்றுக் கூழுமில்லை, பாழுக்கு உழைத்தோமடா, என் தோழா, பசையற்று போனோமடா”

தோழர் ஜீவாவின் எழுச்சியான இந்தப் பாடல் வரிகளை, மூத்தத் தோழரான “ஆர்.என்.கே” என்று தோழமையோடு அழைக்கப்பட்டவரான ஆர்.நல்லக்கண்ணு அடிக்கடி மேடைகளில் பயன்படுத்துவார்.

இதை தன்னுடைய குரலில் நேரடியாக பாடிக்காட்டும்போது அவர், உணர்ச்சிவயப்படுவதை பார்த்திருக்கிறேன்.

அவருடைய வாழ்வியல் முன்னோடியாக ஜீவானந்தம் இருந்தார். அகில இந்திய அளவில் பல பொதுவுடைமை இயக்கத் தோழர்கள் இருந்தார்கள்.

தற்போது இருக்கும் இளைய தலைமுறையினருக்கு தோழர் நல்லகண்ணுவைப் பற்றிக் கேட்டால் எந்த அளவிற்கு தெரிந்திருக்கும் அல்லது தெரியப்படுத்தப்பட்டிருக்கும்?

நாற்பத்தைந்தாண்டுகளுக்கும் மேலான எனது ஊடகத்துறை அனுபவத்தில் நான் சந்தித்து வியந்த தலைவர்களில் ஒருவர் தோழர் நல்லகண்ணு.

அவருடைய முழு வாழ்வையும் வெளிப்படுத்தும் விதத்தில், நான் பணியாற்றிய ‘புதிய பார்வை’ இதழுக்காக அவரை விரிவாக நேர்காணல் எடுத்தபோது, மூன்று அமர்வுகளுக்கு மேல் அவருடன் பேசியபோதுதான் அவருடைய வாழ்க்கையின் பல்வேறு வீரியமான பங்களிப்புகள் வெளிப்பட்டன.

1925 டிசம்பர் 25 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில் பிறந்த இவரது பெற்றோர் ராமசாமி – கருப்பாயி.

வீட்டில் மொத்தம் 9 பிள்ளைகள். வீட்டிற்கு 3-வது பிள்ளையாக பிறந்த இவருக்கு அரசியலில் வழியாட்டியது காங்கிரசில் ஆர்வமாக இருந்த இவருடைய அண்ணன் முத்துராமலிங்கம்.

மிக எளிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், பள்ளியில் படிக்கும்போதே பாரதியின் பாடல்களைப் பாடுவதில் ஈடுபாட்டுடன் இருந்தார். பிறகு, பொதுவுடைமை இயக்கத்தின் மீது ஈடுபாடு அதிகரித்ததும் அவரது வாழ்வே மாறியது.

பல நில மீட்புப் போராட்டங்களை முன்னின்று நடத்தி எளிய விவசாயிகளுக்கு நிலத்தை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

அதற்கான போராட்டங்களில் பலமுறை சிறைக்கும் சென்றிருக்கிறார். குறிப்பாக நெல்லை சதி வழக்கு உள்ளிட்ட பல வழக்குகளில் இவர் கைதாகி சிறைக்குப் போயிருக்கிறார். 

இதுகுறித்து நேரடியாக என்னிடம் பேசும்போது, “அப்போது பலமுறை நான் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறேன். கிராமத்தில் பெரும்பாலும் தாழ்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்த சகோதரர்களின் வீட்டில் நான் தங்கியிருப்பேன்.

அவர்களும் உணவுப் பரிமாறி அடைக்கலம் கொடுத்து என்னை சொந்த சகோதரனைப் போல நடத்தியதையெல்லாம் என் வாழ்நாளில் மறக்க முடியாது.

ஒருமுறை அப்படி ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, பையில் வெடிகுண்டுகளை வைத்திருந்தேன். அந்த வெடிகுண்டுகளை கைப்பற்றி காவல்துறையினர் என்னை கைது செய்தார்கள்” என்று விவரித்துக் கொண்டுபோனவர் ஒரு அனுபவத்தைச் சொல்லும்போது மட்டும் மிகவும் கண்கலங்கிப் பேசினார்.

“அப்போது, மதுரை சிறையில் சக தோழர்களுடன் நான் சிறையில் இருந்தபோது தான், பொதுவுடைமைத் தோழரான தூக்குமேடை பாலு என்று அழைக்கப்பட்ட பாலுவை அதிகாலை நேரத்தில், தூக்கிலிடுவதற்காக சிறை அதிகாரிகள் அழைத்துச் சென்றார்கள்.

அந்த நேரத்தில் கூட சிந்தாபாத் என்ற முழக்கத்தை எழுப்பியபடியே அவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களுக்கு முன்னால் போனபோது, எங்களில் பலரும் உணர்ச்சி வசப்பட்டோம். சிலர் கதறினார்கள்.

ஆனால், மரணம் நெருங்கிய அந்த இறுதிக் கணத்தில் கூட எந்த கலக்கமும் இல்லாமல், மரணத்தை எதிர்கொண்ட தூக்குமேடை பாலுவின் கடைசி தருணத்தை நானும் பார்க்க நேர்ந்ததை அவ்வளவு சுலபமாக மறக்க முடியாது.

இப்படி எத்தனையோ தோழர்களின் தியாகமும், போராட்டக் குணமும் சேர்ந்துதான் என்ன பொதுவுடைமைக்காரனாக ஆக்கி இருக்கிறது” என்றபடி அவர் தன்னுடைய போராட்ட வாழ்வின் முக்கியமான தருணங்களை நினைவு கூர்ந்த அந்த நேர்காணல்,

புதிய பார்வை இதழில் அட்டைப்பட கட்டுரையாக வெளியானபோது, அந்த நேர்காணலுக்கு வைத்திருந்த தலைப்பு “வெடிகுண்டுகளுடன் கைதானேன்“.

சென்னை நகரில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளிலும் இதே வாசகங்கள் தான் இருந்தன.

விரிவாக தன்னை வெளிப்படுத்தியிருந்த அந்தப் பேட்டி வெளியானதும் இன்னும் நெருக்கமானார் தோழர் நல்லகண்ணு.

“வெடிகுண்டுகளுடன் கைது என்றெல்லாம் தலைப்புப் போட்டு ஒரு பரபரப்புடன் என்னுடைய நேர்காணலைப் படிக்கச் செய்துவிட்டீர்கள்” என்றார் கிண்டலும் கேலியுமாக.

விரிவான அந்த நேர்காணல் தற்போதும் ‘போராட்டமே வாழ்க்கை’ என்கின்ற தலைப்பில் தனிப் புத்தகமாக வெளிவந்திருக்கிறது. 

இதற்கெல்லாம் பின்னணியாக இருந்தவர்கள் அவரது அன்பு கலந்த தோழர்கள்தான். 

தமிழிலும் ஆங்கிலத்திலம் பல முக்கியமான புத்தகங்களை ஆழ்ந்து வாசிக்கும் ரசனை அவருக்கு இருந்ததை அவருடைய நேர்ப் பேச்சில் அடிக்கடி உணரமுடியும்.

முதுமையின் அலுப்பே இல்லாமல், அண்மைக்காலம் வரை பல்வேறு கூட்டங்களிலும் போராட்டங்களிலும் தயக்கமின்றி தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறவராகவே அவர் இருந்தார். 

கடந்த 20 ஆண்டுகளில், பலமுறை அவரை சந்தித்திருக்கிறேன். பேட்டி எடுத்திருக்கிறேன். என்னுடைய இரண்டு புத்தகங்களுக்கு அவர் தன் கைப்பட முன்னுரை எழுதிக் கொடுத்திருக்கிறார்.

தினமணிக்கும் நூல் விமர்சனமாக எழுதியிருக்கிறார். நான் எழுதி ‘உயிர்மை’ பதிப்பகம் முதலில் வெளியிட்ட ‘தமிழகத் தடங்கள்’ என்கின்ற நூலை சென்னையில் அவர் வெளியிட்டு பேசியது அவர் அன்பால் செய்த சிறப்பு.

பல கூட்டங்களில் அந்த புத்தகத்தைப் பற்றிப் பேசியிருக்கிறார். என்னுடைய ‘சொல்வது நிஜம்’ என்கின்ற நூலுக்கும் முன்னுரை எழுதித் தந்திருக்கிறார்.

காட்சி ஊடகத்தில் நான் இயங்கிக் கொண்டிருந்தபோது, தமிழகத்தில் உள்ள ஆற்றுப் படுகையிலிருந்து மணல் கொள்ளை நடப்பதை எதிர்த்து அவர் வழக்குத் தொடர்ந்தபோது, அதற்கு பல தரப்பட்ட மிரட்டல்கள்.

அந்தச் சந்தர்ப்பத்தில் மதுரையில் உள்ள ஒரு ஹோட்டலில் கேமரா குழுவினருடன் நான் அவரை சந்தித்தபோது, அவர் அளித்த பேட்டி ஆவேசம் மிக்கதாக இருந்தது.

“நதிகளை பாழடித்து அதிலுள்ள மணலை அள்ளி இயற்கையைப் பாழ்ப்படுத்த வேண்டுமா? என்பதற்காகத்தான் நான் வழக்குத் தொடர்ந்தேன்.

அதற்காக மிரட்டல்கள் வரும் என்பதையும் எதிர்பார்த்துத்தான். நான் இதில் இறங்கியிருக்கிறேன். இதற்காக தனிப் பாதுகாப்பை எல்லாம், அரசிடம் நான் கோரமாட்டேன்.” 

மணற்கொள்ளை தொடர்பான காட்சிகளுடன் கூடிய அவருடைய பேட்டி நான் அப்போது சம்பந்தப்பட்டிருந்த தனியார் தொலைக்காட்சியில் வெளியானது.

ஒருமுறை அரசியல் பங்களிப்புப் பற்றி பேச்சு வந்தபோது அவரிடம் கேட்டேன். “இவ்வளவு காலம் நீங்கள் தொடர்ந்து போராடியும் நேர்மையாக உழைத்தும்கூட கோவையில் நடந்த தேர்தலில் உங்களுக்கு வெற்றிக் கிடைக்காததைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்” என்று கேட்டபோது, வழக்கமான புன்சிரிப்புடன் அவர் சொன்ன பதில்,

“நான் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறவில்லை என்பதை சாதாரணமாகவே எடுத்துக் கொண்டேன்.

மக்கள் அந்த நேரத்தில், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கருதுகிறார்களோ அவர்களுக்கு வாக்களிக்கிறார்கள்.

எனக்கு வாக்களிக்கவில்லை என்றால், என்னுடைய செயல்பாடுகள் அவர்களுக்கு சரியாக போய்ச் சேரவில்லை என்பதற்காக என்னைத்தான் குறைசொல்ல வேண்டுமே தவிர மக்களை குறை சொல்லக் கூடாது.

ஏன்? காமராஜரே விருதுநகரில் தோற்கடிக்கப்படவில்லையா? அதனால் அரசியலில் இதையெல்லாம் சாதாரணமாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்.” என்று சொன்ன அவர் பல சந்திப்புகளில் அடிக்கடி வெளிப்படுத்திய விஷயம் இரு பிரிவுகளாக இயங்கும் பொதுவுடைமை இயக்கங்கள் காலத்தின் தேவை கருதி ஒன்றாக இணைய வேண்டும்” என்பதைத்தான்.

இதுமாதிரி அவருடன் பல அனுபவம். 

பள்ளி ஆசிரியையாக பணியாற்றிய அவரது மனைவி ரஞ்சிதம், 2016-ல் மறைந்தபோது அவருடைய வீட்டிற்குப் போயிருந்தேன். 

கனத்த மௌனத்துடன் இருந்தார். சில நாட்கள் கழித்து அவருடைய மனைவியைப் பற்றிய பேட்டிக்காக அவரைச் சந்தித்தபோது, தனது வாழ்வில் மனைவியின் பங்களிப்பு எந்த அளவுக்கு முக்கியமானதாக இருந்தது என்பதை உணர்வுவயப்பட்ட நிலையில் சொல்லிக்கொண்டு போனார். குமுதம் வார இதழில் அது வெளியானது.

“ஒரு போராட்டக்காரனாகவே வாழ்ந்து அடிக்கடி சிறைக்குப் போன ஒருவருடன் வாழ்க்கையை நடத்தியதற்கு பின்னால், இருந்தது அவர் என்னை புரிந்துகொண்ட விதம்தான்” என்றார் முகத்தில் கவிந்த துயரத்தோடு.

பல ஆண்டுகளுக்கு முன்பு அவருடைய பிறந்தநாளின்போது, அரசியல் பிரமுகர் ஒருவருடன் அவருடைய வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அந்த அரசியல் பிரமுகர் அவருக்குப் பரிசாகப் பட்டு வேட்டியும், அவரது மனைவிக்குப் பட்டுப் புடவையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார். மிகவும் சங்கடப்பட்ட முகத்துடன் அதை மறுத்தார் தோழர்.

இன்னொரு சமயம் அவருக்கு நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் விருதை வழங்க நண்பர் மஹபூப் பாட்ஷா என்னைத் தொடர்புகொண்டபோது, தோழர் ஆர்.என்.கே.விடம் சொன்னேன்.

முதலில் அதை வேண்டாம் என்று மறுத்தவர், நண்பர்கள் வலியுறுத்திச் சொன்னதன் பேரில் அதற்காக சென்னையில் நடந்த விழாவில் கலந்துகொண்டு அந்த விருதைப் பெற்றுக் கொண்டார்.

தனிப்பட்ட முறையில், என்னுடைய உடல் நலத்தில் தோழமை உணர்வுடன் அக்கறை காட்டக் கூடியவராகவும் இருந்தார். 

ஒருமுறை மாரடைப்பு ஏற்பட்டு நான் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியிருந்த நேரத்தில், என்னுடைய நலன் குறித்து விசாரித்தவர், அவருக்கும் உடல் நலிந்திருந்த நேரத்திலும் கூட, “உங்களை நேரில் வீட்டிற்கு வந்து பார்க்கட்டுமா” என்று கேட்டபோது, அவருடைய உடல்நலம் கருதி மென்மையாக மறுத்தேன்.

மிக அண்மையில், அவருடைய நூற்றாண்டு துவங்கியிருந்த நேரத்தில் சென்னையில் அவருக்கான விழா சிறப்பாக நடத்தப்பட்டபோது, விழா நடந்த கலைவாணர் அரங்கிற்குள் உள்ளே செல்ல முடியாத அளவுக்கு கூட்டம். பல நெருக்கடிகள்.

விழா அரங்கிற்குள் செல்ல முடியாமல் நான் திரும்ப நேரிட்டது குறித்து அவரிடம் சொன்னபோது, மெலிதான சிரிப்புடன் அதற்கு வருத்தமும் தெரிவித்தார்.

சமீபத்தில் ‘போராட்டமே வாழ்க்கை’ என்கின்ற அவருடைய முழு வாழ்வையும் சொல்லும் நேர்காணல் நூலை உயிர்மை பதிப்பகம் வெளியிட்டபோது, அதை வெளியிடுவதற்காக சென்னையில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்தபோது நல்ல கூட்டம். நிறைய தோழர்கள் நிறைந்திருந்தார்கள்.

வழக்கம்போல ஒரு பனியனும் மேலே ஒரு துண்டும் போட்டபடி இருந்த நல்லகண்ணுவை நான் நெருங்கி வாழ்த்து தெரிவித்தபோது, முகமலர்ச்சியோடு விசாரித்தார்.

என்னுடன் வந்திருந்த எம்ஜிஆர் ஜானகி மகளிர் கல்லூரியின் தலைவரான முனைவர் திரு.குமார் ராஜேந்திரனை அறிமுகப்படுத்தினேன்.

அவர் நூலை வெளியிட எளிமையாகப் பெற்றுக் கொண்டார் தோழர் நல்லகண்ணு.

வீட்டின் உள்ளே டி.ராஜா உள்ளிட்ட பல பிரமுகர்கள் இருந்தபோதும், உடல் நலிவிற்கு இடையிலும் அவர் காட்டிய தோழமை உணர்வும் அழியாத எழுத்தைப் போல வைத்திருந்த நினைவுகளும் ஆச்சர்யப்படுத்தின. 

விடைபெறும்போது “இன்னொரு நாளைக்கு வாங்க… விரிவாகப் பேசலாம்” என்று அவருடைய வழக்கமான புன்னகையோடு கரம்பற்றி அவர் விடைகொடுத்த தருணம் நெகிழ்வானதாக இருந்தது. 

இதை இப்போது எழுதும் நேரத்தில் கூட நேசமான அந்தக் கரங்களின் இளம் கதகதப்பு மனசில் ஒட்டியிருக்கிறது. 

தன்னைப்பற்றி எந்த பெருமிதத்தையும் வெளிப்படுத்திக் கொள்ளாமல் நிறைகுடத்தைப் போல ததும்பாமல் வாழ்ந்த அவரைப் பற்றி இக்கணத்தில் நினைக்கும்போதும் கண் ததும்பாமல் இருக்க முடியவில்லை.

என்னவொரு தோழமையான வாழ்வு!

– மணா

Comments (0)
Add Comment