சென்னை உருவாகி 386 ஆண்டுகள்!

சென்னை உருவாகி இன்றுடன் 386 ஆண்டுகள் ஆகின்றன. சென்னை தினம் என்பது, 1639-ம் ஆண்டு இதே ஆகஸ்ட் 22-ம் தேதி ஆங்கிலேயர்கள் இங்கே காலூன்றிய நாளாகும். அதிலிருந்து சுமார் முந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் அவர்கள் இந்தியாவையே ஆண்டது தனிக்கதை.

ஆங்கிலேயர்கள் ஏன் இந்தியா வந்தனர், சென்னை எப்படி உருவானது என்ற கதை ரொம்பவே சுவாரஸ்யமானது. ஸ்பைஸி ஐயிட்டங்கள் எனச் சொல்லக்கூடிய மசாலா பொருட்களுக்காகவே ஆங்கிலேயர்கள் கடல் கடந்து இந்தியாவை நோக்கி வந்தனர்.

குறிப்பாக மிளகு, ஏலக்காய், சாதிக்காய், இலவங்கம், கிராம்பு உள்ளிட்ட பொருட்களுக்காகவும், காட்டன் துணிகளுக்காகவும் வந்தவர்கள் அவர்கள்.  

ஏற்கனவே இந்தப் பொருட்களுக்காக 16-ம் நூற்றாண்டிலேயே இந்தியா வந்தவர்கள் போர்த்துகீசியர்கள். போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோடகாமா இந்தியாவிற்கான கடல்வழியை கண்டறிய அவர்கள் இங்கே வணிகத்தில் திளைக்க ஆரம்பித்தனர்.

கிழக்குக் கடற்கரை எனும் கோரமண்டல் கடற்கரையில் ஏகபோக உரிமையைக் கொண்டாடினர். சென்னையின் சாந்தோம் இவர்களின் குடியேற்றப் பகுதியானது.

இதன்பிறகு, டச்சுக்காரர்களும் இந்தியா பக்கமாக தங்கள் கொடியை நிலைநாட்ட நினைத்தனர். ஆனால், ஏற்கனவே போர்த்துகீசியர்கள் இங்கே இருந்ததால் அவர்கள் மலாய் தீவுகள் பக்கமாக நகர்ந்தனர்.

மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா உள்ளிட்ட தீவுக் கூட்டங்கள், ‘மலாய் தீவுகள்’ எனப்பட்டன.

அதன்பிறகு டச்சுக்காரர்கள் 1610-ம் ஆண்டு இந்தியாவில் இதே கோரமண்டல் கடற்கரையில் ‘புலிகாட்’ என அழைக்கப்படும் பழவேற்காட்டில் ஒரு கோட்டையைக் கட்டி நிர்மாணித்தனர். அந்தக் கோட்டையின் பெயர் கெல்ட்ரியா! அதன் எச்சம் இன்றும் பழவேற்காட்டில் உள்ளது.

இந்நிலையில் ஆங்கிலேயர்களும் இங்கிலாந்தில் இருந்து வணிகத்திற்காக இந்தியாவிற்கு புறப்பட்டனர். இதற்குக் காரணம், மலாய் தீவில் கிடைத்த மிளகு உள்ளிட்ட மசாலாப் பொருட்களுக்கு ஐரோப்பிய மார்க்கெட்டில் டச்சுக்காரர்கள் கூடுதல் விலையை விதித்ததுதான்.

இதனால் பெருங்கோபம் கொண்ட லண்டன் வியாபாரிகள், 1599ம் வருடம், ‘Merchant Adventurers’ என்ற அமைப்பை நிறுவி கிழக்கின் செல்வத்தைத் தேடிச் செல்ல தங்களுக்கு அனுமதி அளிக்கும்படி இங்கிலாந்து ராணியிடம் வேண்டினர்.

அவரின் அனுமதி கிடைத்ததும் அடுத்த ஆண்டே அதாவது 1600-ல் 24 இயக்குநர்கள் கொண்ட குழுவிடம் வணிக நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டது. அப்படியாக கிழக்கிந்திய நிறுவனத்தின் கப்பல்கள் கிழக்கு நோக்கி பாய்ந்தன.

ஆரம்பத்தில் அவர்களும் இந்தியா பக்கம் வரவில்லை. சுமத்ரா, ஜாவா பகுதியிலேயே தங்கள் கொடியை நிலைநிறுத்தினர்.

அப்போது ஆங்கிலேயர்கள் இங்கிலாந்திலிருந்து கொண்டு வந்த துணிகள், தகரம், ஈயம், கண்ணாடி, தட்டுகள் போன்றவற்றை இறக்குமதி செய்துவிட்டு அதற்கு பதிலாக மிளகு, சாதிக்காய், கிராம்பு, மூலப்பட்டு ஆகியவற்றை எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையே டச்சுக்காரர்களுக்கும் ஆங்கிலேயர்களுக்கும் வணிகப் போட்டியில் சண்டைகள் எல்லாம் நடந்தன.

இந்தியா பக்கம் ஈர்த்த கவனம்…:

இந்நேரம் மலாய்த் தீவுகளில் இந்தியாவிலிருந்து உற்பத்தியாகும் காலிகோ துணிகளுக்கு ஏக டிமாண்ட் இருப்பது தெரியவர, ஆங்கிலேயர்கள் அங்கிருந்து தங்கள் கவனத்தை இந்தியா பக்கமாகத் திருப்பினர்.

அந்தவகையில் முதன்முதலாக 1608-ம் ஆண்டு சூரத் நகரத்தில் நங்கூரமிட்டது ஆங்கிலேய கப்பல்கள்.

அப்போது இந்தியாவின் பல பாகங்களை முகலாய மன்னர் ஜஹாங்கீர் ஆண்டு வந்தார். அவரிடம் பேசி தங்கள் வணிகத்திற்கு பிள்ளையார்  சுழிப்போட்டனர். சூரத் வணிகர்களிடம் தங்கள் பொருட்களைக் கொடுத்துவிட்டு பதிலுக்கு காலிகோ, பருத்தி துணிகளை மலாய் தீவுகளுக்கு எடுத்துச் சென்றனர்.

தொடர்ந்து இந்திய வணிகத்தில் திளைத்த ஆங்கிலேயர்கள் இங்கேயே ஒரு கோட்டை நிறுவ நினைத்தனர். அப்படியாக கோரமண்டல் கடற்கரையிலிருந்த மசூலிப்பட்டிணத்தில் கோல்கொண்டா சுல்தானின் தயவுடன் முதன்முதலாக ஒரு கம்பெனியை நிர்மானித்தனர். அப்போது மசூலிப்பட்டிணம் கோல்கொண்டாவின் தலைமை துறைமுகமாக இருந்து வந்தது.

ஆனால், அங்கே போட்டியாளர்களாக டச்சுக்காரர்களும், போர்த்துகீசியர்களும் இருக்க இவர்களால் வியாபாரத்தில் முன்னேற முடியவில்லை. இதனால், கம்பெனியை வேறு இடத்தில் அமைக்க முயன்றனர்.

இதனையடுத்து, 1626-ம் ஆண்டு மசூலிப்பட்டிணத்திலிருந்து சற்று உள்ளே தள்ளியிருந்த ‘ஆர்மகான்’ என்ற இடத்தில் கம்பெனியும், கோட்டையையும் நிர்மாணித்தனர். ஆறுமுகம் என்பவர் பெயரில் அந்த இடம் இருந்தால் அதை, ‘ஆர்மகான்’ என ஆங்கிலேயர்கள் உச்சரித்ததாகச் சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த இடம் துறைமுகத்திலிருந்து தள்ளியிருந்ததால் வணிகத்திற்கு ஏற்றதாக இல்லை. அதனால், மசூலிப்பட்டிணத்தின் ஏஜென்ட்டான தாமஸ் கிளார்க்கும், ஆர்மகானின் தலைமைப் பொறுப்பாளர் பிரான்சிஸ் டேயும் வணிகத்திற்கு ஏற்ற ஒரு நல்ல இடத்தைத் தேடினர்.

அப்போது ஃபிரான்சிஸ் டே மசூலிப்பட்டிணத்தில் இருந்து தெற்கே கடலையொட்டி ஒருபகுதியைக் கண்டறிந்தார். அந்தப் பகுதி வணிகத்திற்கு தோதில்லாததாக இருந்தது.

ஆனாலும் அருகிலிருந்த கூவம் நதி, கம்பெனியின் பாதுகாப்பிற்கு ஏற்றதாக இருக்குமென கணித்தார் ஃபிரான்சிஸ் டே.

பின்னர் 1639-ம் ஆண்டு ஆகஸ்ட் 22-ம் தேதி இந்தப் பகுதிகளை ஆண்டு வந்த நாயக்கர் தமர்ல வெங்கடாத்ரியிடம் பேசி கடற்கரை அருகே ஒரு சிறிய நிலத்தில் வணிகம் செய்து கொள்ள ஒப்பந்தம் போட்டனர். அந்த நாள்தான் இன்று சென்னை தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்த மணல்திட்டான இடத்தில் ஆங்கிலேயர்கள் ஒரு கோட்டையை எழுப்பினர். இந்தக் கோட்டையும் அதனைச் சுற்றி எழுந்த நகரமே இன்று தமிழ்நாட்டின் தலைநகரமாக மிளிரும் சென்னை மாநகரம்!

– கவின்

Comments (0)
Add Comment