கண்ணதாசனின் கனிவும் இளையராஜாவின் ஆர்வமும்!

கவிஞர் கண்ணதாசனிடம் நான் பார்த்த சிறந்த குணங்களில் ஒன்று, பெரிய காரியங்களை அவர் மிகுந்த அடக்கத்துடன் செய்தது.
 
சிலர் மற்றவர்களுக்கு உதவுகின்றபோது, மிகுந்த ஆர்ப்பாட்டத்துடன் அதை வெளிக்காட்டிக் கொள்வார்கள்.
 
கவிஞர் பெரிய காரியங்களை வெளியே தெரியாமல் அடக்கமாக செய்து முடித்து விடுவார்.
 
1969 என்ற நினைவு. நான் ஒரு நாடகம் தயாரித்தேன். அதற்கு இசையமைத்தவர் இளையராஜா. அப்போது அவர் சினிமாத் துறையில் பிரபலமாகவில்லை.
 
அவருடைய மூத்த சகோதரர் பாவலர் வரதராஜன் தலைமையில் இளையராஜாவும் சகோதரர்களும் சேர்ந்து இசைக்குழு நடத்தி வந்த நேரமது.
 
கவிஞர் கண்ணதாசனின் பாடல்களுக்கு இசை அமைப்பதற்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமென இளையராஜா என்னிடம் சொன்னார்.
 
கண்ணதாசன் திரையுலகில் அப்போது ரொம்பவும் பிஸியாக இருந்தார். அந்த நிலையில் அவரிடம் போய் நாடகத்திற்குப் பாட்டெழுதிக் கொடுங்கள் என கேட்பது, எனக்கு சரியாக இருக்குமா என நான் தயங்கினேன்.
 
இளையராஜா வற்புறுத்தவே, நான் கண்ணதாசனிடம் சென்றேன். “பாட்டு எழுதி வாங்கி வந்துவிடுங்கள் போட்டுக் கொள்ளலாம்” என்று இளையராஜா சொன்னார்.
 
காலை 10 மணி இருக்கும். அவருடைய சினிமா கம்பெனி ஒன்றில் கண்ணதாசன் இருந்தாா். அறைக்குள்ளே காலை சிற்றுண்டி அருந்திக் கொண்டிருந்தார். வெளியில் பாட்டு எழுதி வாங்குவதற்காக பல தயாரிப்பாளர்கள் காத்திருந்தார்கள்.
 
எனக்கு கொஞ்சம் தர்மசங்கடமாகிவிட்டது. நான் வந்திருப்பதை அறிந்ததும், உடனே உள்ளே கூப்பிட்டார். விஷயத்தைக் கேட்டார்.
 
நாடகத்திற்கு ஒன்றிரண்டு பாட்டாவது எழுதித் தரவேண்டும் என்று சொன்னேன். கொஞ்சமும் தயங்காமல் சிச்சுவேஷன் என்ன என்று கேட்டார்.
 
இரண்டு சிச்சுவேஷன்களைச் சொன்னேன். உடனே இரண்டு பாடல்களை அவர் டிக்டேட் செய்ய, பஞ்சு அருணாசலம் எழுதினார். எனக்கு ரொம்ப திருப்தி.
 
நாடகக் கதை நன்றாக இருக்கவே, வேறு முக்கியமான சிச்சுவேஷன்கள் என்ன என கேட்டார்.
 
நான் சொல்ல மேலும் மூன்று பாடல்கள் பிறந்தது. மொத்தம் ஐந்தாறு பாடல்கள். ஏறத்தாழ ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.
 
வெளியில் காத்துக் கொண்டிருந்த இரண்டொரு தயாரிப்பாளர்கள் கதவைத் திறந்து உள்ளே எட்டிப் பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
 
அதற்கு மேலும் அங்கிருப்பது மரியாதையாக இருக்காது என எண்ணிய நான், கவிஞருக்கு நன்றி கூறிப் புறப்பட்டேன்.
 
படத்திற்கு ஐந்து பாட்டுகள் எழுதினால் கவிஞர் 20 முதல் 30 ஆயிரம் வரை வாங்கி இருப்பார் என்று எனக்கு தெரியும். இலவசமாக பாடல்களை வாங்கிச் செல்வது என்னவோபோல் இருந்ததால், நான் கொஞ்சம் தயங்கினேன்.
 
புரிந்து கொண்ட கவிஞர், “டியூன் நன்றாக போடச் சொல்லுங்கள், நாடக அரங்கேற்றத்திற்கு வருகிறேன்” எனச் சொல்லி புன் சிரிப்புடன் என்னை அனுப்பி வைத்தார்.
 
இளையராஜா அருமையாக டியூன் அமைத்தாா். ஐந்து பாடல்களும் நாடகம் பாா்க்க வந்தவா்களின் அமோக வரவேற்பினைப் பெற்றன.
 
கவிஞா் கண்ணதாசனின் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்தது என்னுடைய நாடகத்திற்காகத்தான் இருக்க வேண்டும்.
 
கவிஞர் கண்ணதாசனுடன் பல ஆண்டுகள் நான் நெருங்கிப் பழகி இருக்கிறேன். எத்தனையோ பசுமையான நினைவுகள் உண்டு.
 
குறிப்பாக அவர் எந்த ஆர்ப்பாட்டமுமின்றி எனக்கு செய்த இந்த உதவியை நான் என்றைக்குமே மறக்க முடியாது.
 
– ‘தலைவா்களுடன் எனது அனுபவங்கள்’ என்ற நூலில் பி.சி.கணேசன் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி…
 
#இளையராஜா #கண்ணதாசன் #பாவலர்வரதராஜன் #பஞ்சுஅருணாசலம் #தலைவா்களுடன்எனது அனுபவங்கள்நூல் #பிசிகணேசன் #pcganeshan #ilayaraja #kannadhasan #pavalarvaratharajan #panjuarunachalam #thalaivargalunenathuanupavangalbook #தமிழ்மூன்றும்வழிவகை #தமிழ்சினிமா #தமிழ்அறிஞர்கள் #தமிழ்நூல்கள் #tamillegends #tamilcinemahistory #autobiography #tamilliterature
Comments (0)
Add Comment