அண்மையில் மாமல்லபுரம் அருகில் பாமக தலைவரான அன்புமணி நடத்திய பொதுக்குழு, நடப்பதற்கு முன்பே அது சம்பந்தமான ஒரு பெரும் சர்ச்சையைக் கிளம்பிவிட்டது.
ஒரு வழியாக நீதிமன்றத்திற்கு போய் முந்தினநாள் இரவில் அனுமதி பெற்று, மறுநாள் நடந்தது பொதுக்குழு.
பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்ட இந்தப் பொதுக்குழுவில் பேசிய அனைவருமே நிறுவனரான ராமதாசைப் பற்றி கடுமையாக பேசுவார்கள் என்று ஊடகங்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், அவரைக் கடுமையாகத் தாக்கி அவ்வளவாக யாரும் பேசவில்லை.
மாறாக, மருத்துவர் ராமதாசைத் தூண்டிவிட்டவர்கள் என்று அவருக்கு பக்கத்தில் இருப்பதாகச் சொல்லி சிலரை மட்டும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.
பாமகவின் முக்கிய பிரமுகரான வழக்கறிஞர் பாலு பேசும்போது, “மருத்துவர் ராமதாசைப் பற்றி மிகவும் மென்மையாக குறிப்பிட்டவர், நிறுவனர் என்கிற முறையில் மருத்துவர் ராமதாஸ் ஐயாவிற்கு மதிப்பு கொடுக்கிறோம். அதைப்போலவே தற்போதைய தலைவரான அன்புமணிக்கும் நாங்கள் மதிப்பு கொடுக்கிறோம்” என்றார்.
அடுத்துப் பேச வந்த பாமகவின் தலைமை பொறுப்பில் இருப்பவரான திலகபாமா சற்று ஆவேசமாகவே மருத்துவர் அன்புமணி ராமதாஸுக்கு ஆதரவான விமர்சனங்களை முன்வைத்து பேசியபோது பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் அதற்கு பரவலான ஆதரவு இருந்தது.
நிறைவாக அன்புமணி ராமதாஸ் பேசுவதற்கு முன்பு பாமகவின் முக்கியப் பிரமுகரான வடிவேலு ராவணன் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் நேரம் குறைவாக இருந்ததால் அவர் பேச அனுமதிக்கப்படாத நிலையில் டாக்டர். அன்புமணி ராமதாஸ் பேச்சை துவக்கினார்.
ஏறத்தாழ பொதுக்குழுவிற்கு வந்திருந்த நிர்வாகிகள் பட்டியலை நீண்ட நேரம் அவர் வாசித்தார்.
விழுப்புரம் துவங்கி, நாகர்கோவில் வரை வந்திருந்த பல்வேறு பிரமுகர்களின் பெயர்களையெல்லாம் வரிசைப்படுத்திக் குறிப்பிட்டுப் பேசி, பொதுக்குழுவிற்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்த டாக்டர். அன்புமணி ராமதாஸ் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே தன்னுடைய பேச்சைத் துவங்கினார்.
தன்னுடைய அப்பாவைப் பற்றி பேசும்போது, “அவருடைய கனவுகளை என்றும் நாம் நிறைவேற்றக்கூடிய நிலையில் தான் இருக்கிறோம். அவருடைய நீண்ட கால கனவான வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டு கனவை எப்படியாவது நிறைவேற்றுவோம். அது எங்களது முதல் கடமையாக என்றும் இருக்கும்” என்றவர்,
“அதற்கான இட ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை தீவிரமான அளவில் முன்னெடுத்து தமிழகச் சிறைகளை அதிக அளவில் நிரப்பும் போராட்டமாக மாற்றுவோம்” என்று கடுமையான ஒரு ஆவேசத்தைத் திமுகவுக்கு எதிராக வெளிப்படுத்தினார்.
வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக தான் தமிழ்நாடு முதல்வரான மு.க.ஸ்டாலினை சந்தித்தபோது, எப்படியும் ஒரு குறுகிய காலத்தில் நிறைவேற்றிவிடலாம். அதை, செய்வதாக ஸ்டாலின் உறுதிமொழி அளித்ததாகச் சொன்ன அன்புமணி, வன்னியர்களுக்கு ஸ்டாலின் துரோகம் இழைத்துவிட்டார் என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
எங்களுக்கு எதிராக இடஒதுக்கீட்டை அழிக்க மறுத்த திமுக அரசை ஆட்சியைவிட்டு இறக்குவதுதான் எங்களுடைய முதல் வேலையாக இருக்கும். அதை நாங்கள் எப்பாடு பட்டாவது செய்வோம் என்று சொன்னவர், அடுத்தடுத்து திமுக அரசில் தற்போது நடந்து வரும் பல்வேறு முறைகேடுகளைப் பட்டியலிட்டார்.
முக்கியமாக தமிழ்நாட்டில் மதுவிலக்கு பிரச்சனையைப் பேசியவர், தற்போது மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களின் நடமாற்றம் அதிகமாக இருப்பதால்தான், தற்போது பாலியல் குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன என்பதைக் குறிப்பிட்டுப் பேசியவர், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அப்படிப்பட்ட மது மற்றும் போதைப் பொருட்களின் நடமாட்டத்தை முழுக்கத் தடுத்து நிறுத்துவோம்.
அப்படி மீறி யாராவது அதில் ஈடுபட முடிந்தால் அவர்கள் இருக்கமாட்டார்கள். அது மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். அப்படிப்பட்ட ஆட்சியைத்தான் நாங்கள் நடத்துவோம்.
அது முழுக்க முழுக்க மக்கள் நலனுக்கான ஆட்சியாக இருக்கும் என்று முடித்தவர், கடைசியாக தனக்கும் ஐயாவுக்கும் இடையில் தற்போதும் நல்லுறவு இருக்கிறது. தொடர்ந்து அவருடன் பேசுவதற்கு 40 தடவைக்கு மேல் முயற்சித்தேன். அவர் சரியாக பிடிகொடுத்துப் பேசவில்லை. மாறாக நான் பொய் சொல்வதாக அவர் சொல்கிறார்.
ஆனால், எங்கள் பரிசினை நாங்கள் பேசிக்கொள்வோம். கண்டிப்பாக அவரிடம் நான் பேசுவேன்.
இப்போதும் நான் சொல்கிறேன். நான் பிடிவாதமாக இல்லை, நான் உறுதியாக இருக்கிறேன். உறுதியாக இருக்கிறேன் என்பதைத்தான் சிலர் பிடிவாதமாக இருக்கிறேன் என்று சொல்கிறார்கள். அப்படி எல்லாம் இல்லை. நான் அவருடன் எப்போதும் பேசத் தயாராகவே இருக்கிறேன்.
பாமக எப்போதும் வலுவான ஒரு சக்தியாக ஒருங்கிணைய வேண்டும் என்பதில் எங்கள் இருவருக்குமே அக்கறை உண்டு. அவர் காப்பாற்றி வளர்த்த இயக்கம் தான் இது என்பதில் எனக்கு மாறுபட்ட கருத்தே இல்லை.
அடுத்து ஓராண்டுக்கு என்னைத் தலைவராக தேர்ந்தெடுத்து இருக்கும் பொதுக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் இவ்வளவுப் பிரச்சினைகளுக்கு இடையில் அவர்கள் கலந்து கொண்டிருப்பதற்கு மிகவும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.
கண்டிப்பாக நாம் அனைவரும் ஒன்றுதிரண்டு திமுக ஆட்சியை கீழே இறக்குவதற்கான வேலைகளை செய்வோம். அதற்கு இப்போதிருந்தே அதற்கான வேலைகளைத் துவக்குவோம் என்று புன்னகையோடு பேச்சை நிறைவு செய்தார் அன்புமணி ராமதாஸ்.
எல்லோரும் மிகவும் ஆவேசமான நிலையில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட பாமக பொதுக்குழு, படுநிதானமாக, மருத்துவரான நிறுவனர் ராமதாசுக்கு எதிரான பெரும் கண்டனங்களையோ, பதில் உரைகளையோ அளிக்காமல், என்ன செய்திருக்கிறோம், இனி என்ன செய்ய இருக்கிறோம் என்பதை மட்டும் வலியுறுத்திய நிலையில் நிறுவடைந்தது.
– அகில் அரவிந்தன்