சீசன் பழ வரிசையில் தற்போது நாவல் பழத்தின் சீசன் ஆரம்பமாகியிருக்கிறது. ஜூலையில் தொடங்கி செப்டம்பர் மாதம் வரை இருக்கும் நாவல் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
இதில் இருக்கும் புரோட்டீன், மெக்னீசியம், வைட்டமின்-பி, குளுக்கோஸ், நார்ச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்ற சத்துக்கள் உடலுக்குத் தேவையான பல நன்மைகளைத் தரக்கூடியதாக இருக்கிறது.
இதில் வைட்டமின் சி அதிகம் இருப்பதால் மிகச்சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்படுவதால் தோல் வறட்சி நீங்கி புத்துணர்ச்சியுடன் இருக்க செய்கிறது. நாவல் பழத்தில் வைட்டமின் ஏ, சி அதிகம் இருப்பதால், பார்வைத் திறனை மேம்படுத்த உதவுகிறது.
நாவல் பழங்களைத் தொடர்ந்து சாப்பிடும்போது கல்லீரல் மற்றும் சிறுநீர்ப்பை பிரச்சனை இருப்பவர்களுக்கு நல்ல மருந்தாக செயல்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
இப்படி பல்வேறு நன்மைகளைக் கொண்ட நாவல் பழத்தை, சீசனில் கிடைக்கும்போது பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்தப் பழத்தைக் கொண்டு வித்தியாசமான முறையில் சுவையான நாவல் பழ சட்னி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நாவல் பழ சட்னி:
தேவையான பொருட்கள்:
1. தேங்காய் – 1/4 கப்
2. பச்சை மிளகாய் – 5
3. கொத்தமல்லி – 1 கைப்பிடி
4. மிளகு – 1 டீஸ்பூன்
5. சீரகம் – 1 ஸ்பூன்
6 புளி – நெல்லிக்காய் அளவு
7. வெல்லம் – 1 ஸ்பூன்
8. உப்பு – தே.அ
9. நாவல் பழம் – 1 கப்
செய்முறை: தரமான நாவல் பழங்களை வாங்கி உப்பு போட்டு நன்கு கழுவி அதன் கொட்டைகளை நீக்கி ஒரு பாத்திரத்தில் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும்.
அதன் பிறகு நறுக்கிய நாவல் பழங்கள், கால் மூடி துருவிய தேங்காய், பச்சை மிளகாய், சிறிது கொத்தமல்லி, புளி, ஒரு டீஸ்பூன் மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், ஒரு டீஸ்பூன் வெல்லம் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்க்கவும்.
தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்
தாளிக்கத் தேவையானது: ஒரு வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றிக் கலக்கினால் சுவையான நாவல் பழ சட்னி தயார்.
இந்த சட்னி இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
நாவல் பழ நன்மைகள்:
நாவல் பழம் பிடிக்காதவர்களுக்கு மாற்று யோசனையாக இந்த மாதிரி சட்னி செய்து கொடுத்தால் இந்த பழத்தில் இருக்கும் சத்துக்கள் முழுமையாக உடலுக்கு கிடைக்கும்.
அதே போல் சர்க்கரை நோய் இருப்பவர்கள் சீசன் இருக்கும் போது இப்படி சட்னி செய்து நாள் ஒன்றுக்கு ஒரு முறை எடுத்துக்கொண்டு வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வரும் என்கிறார்கள் மருத்துவர்கள்.
மேலும் பற்கள் மற்றும் ஈறுகளில் பிரச்சனை இருப்பவர்கள் நாவல் பழ இலையைப் பொடி செய்து, தொடர்ந்து பல்துலக்கி வந்தால் பற்கள் ஆரோக்கியமாகவும் பளிச்சென்று இருக்கும் என்றும் கூறுகின்றனர்.
வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்களுக்கு நாவல் பழத்தை ஜூஸ் போட்டு, அதில் சிறிது கல் உப்பு கலந்து குடித்து வந்தால் நல்ல நிவாரணம் கிடைக்கும்.
சீசனில் கிடைக்கும் நாவல் பழம் தோலின் ஆரோக்கியத்தை பாதுகாத்து ஈரத்தன்மையுடன் வைத்திருக்க உதவுகிறது.
பல நன்மைகளைக் கொண்ட இந்தப் பழத்தை ஒதுக்காமல் கிடைக்கும்போது எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக நாவல் பழத்துடன் சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிட்டால் தொண்டையை இறுக்காமல் இருக்கும். நாள் ஒன்றுக்கு 20 பழம் எடுத்துக்கொள்ளலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதே போன்று நாவல் பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. நாவல் பழம் சாப்பிடும் போது அதனுடன் பால் அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
பால் எடுத்துக் கொண்டால் ஒவ்வாமை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
இப்படி பழ, இலை போன்றவற்றில், பல ஊட்டச்சத்துக்களை அடக்கி வைத்திருக்கும் நாவல் பழத்தை, சீசன் இருக்கும்போது பயன்படுத்திக் கொள்வோம்.
– யாழினி சோமு