ஓவியர் மாருதி குறித்து எழுத்தாளர் தமிழ்மகன் பேசியவை:
“ஓவியர் மாருதி தூரிகையால் வரையக்கூடிய ஓவியர். நிறைய ஓவியர்கள் பேனாவால் முதலில் வரைந்து, பின்பு கலர் வாஷ் செய்வார்கள். ஆனால், ஓவியர் மாருதி, அனைத்து ஓவியங்களையுமே ஃப்ரெஷால் வரையக் கூடியவர்.
இன்னும் சொல்லப்போனால், அவருடைய சிறப்பே, அவரது கையெழுத்தை ஃப்ரெஷால் போடுவதுதான். வாஷ் டிராயிங் என்று சொல்லப்படக்கூடிய ஓவியத்தில் இவர் கைதேர்ந்தவர்.
இதில் நிறைய ஆச்சர்யங்களையும் புதுமைகளையும் படைத்தவர். அவர் ஃப்ரெஷ் கொண்டு வரையும் பெண்களின் படம் ஒளிரும் தன்மை கொண்டது.
குறிப்பாக, பெண்களின் தலைமுடி, இமைகள் போன்றவை நிஜமாகவே ஒளிர்வதாகவே இருக்கும். அவருடைய வாஷ் டிராயிங் ஓவியங்களில், பிரபல ஓவியர் ரவி வர்மாவின் சாயல் இருக்கும். இதை நுணுக்கமாக எடுத்துக் கொண்டு பிரபல வார, மாத இதழ்களின் படங்களுக்கு எல்லாம் உயிரூட்டினார்.
அவர் வரையாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லலாம். நிறைய பத்திரிகைகள் வெளியிட்ட தீபாவளி மலர், பொங்கல் மலர் சிறப்பு இதழ்களுக்கு எல்லாம் இவர்தான் அட்டைப்படம் வரைந்திருப்பார்.
பண்டிகைகளுக்குரிய சிறப்பு எஃபெக்ட் கிடைக்கும் என்பதாலேயே இவரிடம் வரையக் கொடுப்பார்கள்.
குறிப்பாக, ’தேவியின் கண்மணி’ என்ற இதழ் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் அவர்தான் அட்டைப்படம் வரைந்து கொண்டிருந்தார். இதில் எத்தனையோ பெண்கள் படங்களை வரைந்திருந்தாலும், அவையனைத்தையும் மிகக் கண்ணியத்துடன் வரையக்கூடியவர்.
இறுதிவரை யாரிடமும் இறங்கிப்போய் வாய்ப்பு கேட்காமலேயே இருந்தார். வாய்ப்பு வந்தால் வரைந்து கொடுப்பார். சுயமரியாதைக்காரர்.
நேர்மையாகவும் அன்பாகவும் எளிமையாகவும் பழகக்கூடிய நல்ல மனிதர். அவருடைய மனைவி உடல்நிலையால் பாதிக்கப்பட்டு இருந்தபோது, அவருக்கான தேவைகள் அனைத்தையும் செய்தவர் மாருதிதான்.
அவருடைய உதவிக்கு ஓர் செவிலியரைக்கூட வைக்கவில்லை. கூடவே இருந்து இவரே பார்த்துக் கொண்டார். கொஞ்ச நாட்களுக்கு முன்புதான் அவருடைய மனைவி இறந்துபோனார்.
’விகடன்’ குழுமத்திற்காக பிரபல 20 ஓவியர்கள் ஒன்றிணைக்கப்பட்ட விழா ஒன்று நடைபெற்றது. அதில் மாருதியும் கலந்து கொண்டார். அன்றுதான் நான் அவரைக் கடைசியாகச் சந்தித்தேன்” என்றார் வேதனையுடன்.
நன்றி: புதிய தலைமுறை