எம்.ஜி.ஆருடன் பணியாற்ற முடியாதது வருத்தம்!

தினேஷ் மாஸ்டரின் மலரும் நினைவுகள்

தமிழ் சினிமாவின் முன்னணி ஃபைட் மாஸ்டர்களில் ஒருவர் ‘தளபதி’ தினேஷ்.

யூடியூப் சேனல் ஒன்றில் தனது திரை உலக அனுபவங்கள் குறித்து பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்.

அவற்றில் சில :

“நான் பிறக்கும் போதே என்னுடைய தந்தையார் இறந்துவிட்டார். நான் வீட்டிற்கு ஒரே பையன். தாயார் தான் வீட்டு வேலை செய்து என்னை வளர்த்து ஆளாக்கினார். என்னுடைய அம்மாவை மிகவும் பிடிக்கும். இதனால் தான் என் வீட்டிற்கு அம்மாவின் பெயரை வைத்துள்ளேன்.

வீடு முழுவதும் நான் இணைந்து பணியாற்றிய பிரபலங்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் நிறைந்திருக்கும்.

ரஜினிகாந்த் முதல் சிவராஜ்குமார் வரை பலருடன் நான் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வீட்டை அலங்கரிக்கின்றன. 

கருணாநிதி, ஜெயலலிதா, என்.டி.ராமாராவ், எடப்பாடி பழனிசாமி ஆகியோரிடம் இருந்து விருதுகள் வாங்கியுள்ளேன். இதுபோல் பல அமைப்பினரிடம் இருந்து பெற்ற விருதுகளை அடுக்கி வைப்பதற்கு வீட்டில் இடம் இல்லை.

நான் சினிமாவில் நுழைந்த தருணத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சர் ஆகிவிட்டார். இதனால், அவருடன் இணைந்து பணியாற்ற முடியவில்லை என்ற வருத்தம் மட்டும் இருக்கிறது.

‘சந்திரமுகி’ திரைப்படத்தில் பணியாற்றியபோது என் தாயாரை முதன்முதலாக விமானத்தில் அழைத்துச் சென்று நட்சத்திர விடுதியில் தங்க வைத்தேன்.

அப்போது, ரஜினிகாந்துடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டோம். அந்த நாட்களை என்னால் மறக்கவே முடியாது.

நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னர் ஒரு சீரியலில் ஹீரோவாக நடித்தார். அதில் வில்லனாக நான் நடித்த அனுபவத்தை மறக்க முடியாது” என்று மாஸ்டர் தளபதி தினேஷ் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

  • பாப்பாங்குளம் பாரதி.
Comments (0)
Add Comment