பிரகாசமில்லாத, சற்று மங்கிய antic பொருட்களை எனக்குப் பிடிக்கும். நேற்று மாலை மருங்கூர் சென்றிருந்தோம்.
கோயிலில் எங்கள் உபயம். கல்யாண உபயம். அர்ஜூனனுக்கும் திரௌபதிக்கும் கல்யாணம். விசயன், பாஞ்சாலி, சொரூபங்களைப் பார்க்கிறேன். அது என்னுடைய பால்ய பிராயம். ஊர்ப் பெரியவர்கள் கூடினர்.
மரச் சிற்பத்தை மாற்றி கோயில் மூலவர்களை செம்பில் வார்ப்படம் செய்ய ஆலோசித்தார்கள். அப்படி உருவானவைதான் இந்த செப்புச் சிலைகள்.
கருவூலத்தில் அலங்காரம் இல்லாமல் இருந்து எடுத்து வந்த சிலைகள்.
லா.ச.ரா வா? சாண்டில்யனா? ஞாபகம் இல்லை. – இந்த நிலையை நிர்மால்யம் என்பார்கள். அது அதிகாலையில் பார்க்கும் சாமியின் உருவம். நேற்றிரவு பார்த்த சாமியல்ல அது. தன் பட்டாடைகளை, மாலையை, மரியாதையைக் களைந்து நிர்மால்யமாக இருக்கும் சாமி.
சில வேளை அந்தி வானத்தைப் பார்ப்பேன். மேகக்கூட்டங்கள் இல்லாமல், குழப்பங்கள் இல்லாமல், அவ்வளவு நிர்மால்யமாக இருக்கும்.
காண்டீபனும் கருப்பியும் (கிருஷ்ணை என்று பாஞ்சாலிக்கு ஒரு பெயருண்டு. காண்டீபன் காமத்தால் அவளை கருப்பி என்றழைத்திருப்பான்) அப்படித்தான். கல்யாண கோலம் கொள்ளும் முன் நிர்மால்யமாக இருந்தார்கள். அங்கிருந்து, கவனிக்கிறேன்.
அன்புத் தங்கை அம்பிகா என்னுடைய ‘கருப்பு வெள்ளைக் காலம்’ நூலின் முதல் பார்வையைப் பகிர்ந்திருந்தார். அன்புச் சகோதரன் லார்க் பாஸ்கரன், என் பழங்காலத்தை என் நிலத்தின் வண்ணமெடுத்து மீளுருவாக்கம் செய்திருந்தார். எனக்கொரு நல்ல சமிக்ஞையாகப் பட்டது.
எனது கடந்த காலத்தின் எச்சம்தான் கருப்பு வெள்ளைக் காலம். நிர்மால்யம் என்றால் Remains என்றும் பொருளுண்டு.
கடந்த காலம் என்பது, ஏதோ கருப்பட்டிபோல இனிப்பது மட்டும் இல்லை. அதில் கசப்பும் இருக்கிறது. ஆனாலும் அந்தக் கசப்பு வேம்பின் கசப்பை ஒத்தது.
எனது கடந்த காலம் ஒரு கம்பா நதி. அது மறைந்துபோன நதி. பஃறுளி போல அது இப்போது இல்லை. என் தந்தையைப்போல அது இப்போது இல்லை.
ஆனாலும் கடந்த காலத்தின் உலராத ஈரத்தை எங்களூர் வழியாகப் பாயும் வெள்ளாறு வைத்திருக்கவே செய்கிறது.
கடந்த காலத்தைப் பருகியவைதான் எம் நிலங்கள். எக்களூரில் இருக்கும் பழைய ஆல், வேம்பு இவையனைத்தும் கடந்த காலத்தை உண்டு எஞ்சியிருப்பவை.
அதன் ஓர் இலையில் தந்தையை, கடந்த காலத்தை தரிசிப்பவன், அனுபவிப்பவன் கரிகாலன்.
அப்படி சில பழம், இலைகளை சேகரித்து வைத்திருக்கும் ஹெர்பேரியம்தான் ‘கருப்பு வெள்ளைக் காலம்’.
என்றோ வீதியில் விழுந்து கிடந்த அஞ்சலை சூடிய ஒற்றை சாமந்திப் பூவும், எந்தையின் ஒரு துளி கண்ணீரும் இந்த ஹெர்பேரியத்தில் பதங்கமாகி இருக்கிறது.
இது என்னுடைய இறந்த காலம் மட்டும் இல்லை. இது நம்முடைய இறந்த காலம். இன்றையப் பொழுதின் வேர்கள் இதில் பரவிக்கிடக்கிறது.
கனியை ருசித்து, அதன் நன்மைகளை அனுபவித்து, அடடா இதைத் தந்தது காலத்தின் பழமையைக் குடித்த இதன் வேரல்லவா? என நீங்கள் விட்டுவந்த வீரனை, காடனை, பெரியக் கருப்புவை, உங்கள் அம்மாவை, உங்கள் தந்தையை எரித்த இடத்தைத் தேடிப்போவீர்கள் அல்லவா? கரிகாலன் உங்கள் சகோதரன். அவனும் உங்களோடு வருகிறான்.
இந்த வழி புத்தனும் வள்ளுவனும் வள்ளலாரும் நடந்த அன்பின் பாதை. இந்தப் பாதைதான் என்றும் மறையாமல் நம் நினைவில் கம்பா நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது.
எனது பிறந்தநாளையொட்டி வெளிவரும் கருப்பு வெள்ளைக் காலத்தைப் பருகுங்கள். அதன் நிழலில் இளைப்பாறுங்கள். காலத்தை வசப்படுத்த சிந்தியுங்கள்.
நன்றி: பேஸ்புக் பதிவு