பணமழையில் நனையும் இந்திய கிரிக்கெட்!

மற்ற நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் எல்லாம் பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு, உலகின் பணக்கார விளையாட்டு அமைப்பாக வளர்ந்து விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ).

கடந்த நிதியாண்டில் மட்டும் பிசிசிஐக்கு கிடைத்துள்ள வருமானம் எவ்வளவு தெரியுமா?

9,741.7 கோடி ரூபாய்.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு கடந்த நிதியாண்டில் அதிக வருமானம் தந்த விஷயமாக ஐபிஎல் இருக்கிறது.

கடந்த ஐபிஎல் தொடர் மூலமாக மட்டும் 5,761 கோடி ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது பிசிசிஐ. இது பிசிசிஐயின் மொத்த வருமானத்தில் 60 சதவீதம்.

”கடந்த 2007-ம் ஆண்டில் பிசிசிஐ ஒரு தங்க முட்டையிடும் வாத்தைக் கண்டுபிடித்தது. அதன் பெயர் ஐபிஎல். அது ஆண்டுதோறும் பிசிசிஐக்காக ஏராளமான தங்க முட்டைகளைப் போட்டு வருகிறது.

ஒருபக்கம் உள்ளூர் கிரிக்கெட் வீரர்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் ஐபிஎல், மற்றொரு பக்கம் ஒவ்வொரு ஆண்டிலும் தனது வருவாயை பெருக்கிக்கொண்டே போகிறது” என்கிறார் பிசினஸ் லைன் பத்திரிகையின் வர்த்தகக் கொள்கை வகுப்பாளரான லாயிட் மத்தியாஸ்.

ஐபிஎல்லுக்கு அடுத்ததாக வங்கிகள் மற்றும் முதலீட்டு நிறுவனங்களில் இருந்து கிடைக்கும் வட்டியின் மூலம் மட்டுமே பிசிசிஐக்கு சுமார் 1,000 கோடி ரூபாய் வருமானமாக கிடைக்கிறது.

வட்டியிலேயே இவ்வளவு வருமானம் என்றால், பிசிசிஐ எத்தனை கோடி ரூபாய் முதலீடு செய்திருக்கும் என்று கேட்கிறீர்களா?

அதிகமில்லை… ஜஸ்ட் 30 ஆயிரம் கோடி ரூபாய்தான். எல்லாம் கிரிக்கெட் ரசிகர்கள் கொடுத்த பணம்.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைத் தவிர, ஐபிஎல் அல்லாத பிற கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமையை தொலைக்காட்சிகளுக்கு விற்பதன் மூலமும் பிசிசிஐக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

இதன்மூலம் பிசிசிஐக்கு கடந்த ஆண்டில் 361 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.

இந்தியாவில் நடக்கும் கிரிக்கெட் தொடர்களுக்கான ஒளிபரப்பு உரிமையை வழங்குவது, பெண்களுக்கான கிர்க்கெட் லீக் போன்ற தொடர்களின் உரிமையை வழங்குவது ஆகியவற்றின் மூலம் இந்த வருவாய் கிடைத்துள்ளது.

ரெடிபியூஷன் அமைப்பின் தலைவரான சந்தீப் கோயல் இதுபற்றி கூறும்போது, “ஐபிஎல் போட்டிகள் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டுமின்றி ரஞ்சிக் கோப்பை, துலீப் கோப்பை, சி.கே.நாயுடு கோப்பை போன்ற கிரிக்கெட் தொடர்கள் மூலமும் பிசிசிஐக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.

அதனால் 30,000 கோடி ரூபாய்வரை சேமித்து வைத்திருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த மதிப்பு சுமார் 10 முதல் 12 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. பிசிசிஐ எவ்வளவு பணம் கேட்டாலும் கொட்டிக் கொடுக்க விளம்பர நிறுவனங்களும், தொலைக்காட்சி நிறுவனங்களும் தயாராக இருக்கின்றன” என்கிறார்.

பிசிசிஐயிடம் இருக்கும் இந்த செல்வத்தால், சர்வதேச கிரிக்கெட் கமிட்டியே அதனிடம் கைகட்டித்தான் நிற்கிறது.

ஒவ்வொரு முக்கிய தொடரிலும் பிசிசிஐ வைத்ததுதான் சட்டமாக இருக்கிறது.

இந்தியா – பாகிஸ்தான் இடையே எல்லையில் போர் பதற்றம் இருந்தபோதும், தொடரை நிறுத்தச் சொல்லாமல் மற்ற நாடுகள் தங்கள் வீரர்களை இந்தியாவில் ஆட அனுமதித்தற்கு இதுதான் காரணம்.

சர்வதேச அளவில் இந்தியா வல்லரசு ஆகிறதோ இல்லையோ, கிரிக்கெட் உலகில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வல்லரசாகி இருக்கிறது.

– பி.எம்.சுதிர்

Comments (0)
Add Comment