இந்தியக் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத பல தருணங்களைப் பரிசளித்த மைதானம் லார்ட்ஸ். கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் இந்த மைதானத்தில்தான் இந்திய அணி முதன்முதலாக 1983-ம் ஆண்டில் உலகக் கோப்பையை வென்றது.
இதே லார்ட்ஸ் மைதானத்தில்தான் இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான திலீப் வெங்சர்கார் அடுத்தடுத்து 3 சதங்களை அடித்தார்.
அதன்பின் இதே லார்ட்ஸ் மைதானத்தில் வைத்து நேட்வெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியை வீழ்த்திய மகிழ்ச்சியில், தனது சட்டையைக் கழற்றி தலைக்கு மேல் சுழற்றி கர்ஜித்தார் கங்குலி.
இப்படி இந்தியாவுக்கு தித்திப்பான பல தருணங்களைத் தந்த லார்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜூலை 10) இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி நடக்கிறது.
பும்ரா இல்லாமலேயே கடந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தங்களை வீழ்த்திய அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்து இன்னும் மீளவில்லை.
இந்தச் சூழலில் 3-வது டெஸ்ட் போட்டியில் அது இந்தியாவைச் சந்திக்கிறது.
முன்பெல்லாம் இங்கிலாந்து ஆடுகளங்கள் பெரும்பாலும் பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும்.
ஆனால், இங்கிலாந்து அணியின் பயிற்சியாளராக பிரண்டன் மெக்கல்லம் வந்த பிறகு இந்த நிலை மாறிப்போனது.
வழக்கமான டெஸ்ட் கிரிக்கெட் பாணிக்கு பதில் பேஸ்பால் கிரிக்கெட் என்ற புதிய உத்தியைக் கையிலெடுத்தார் மெக்கல்லம்.
டெஸ்ட் போட்டியில் ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டிகளைப் போல் பேட்டிங் செய்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவிக்கும் முறைக்குப் பெயர்தான் பேஸ்பால் கிரிக்கெட்.
பேஸ்பால் ஆடுபவர்களைப் போல இங்கிலாந்து வீரர்கள் பேட்டை சுழற்றி ஆடுவதால் அதற்கு பேஸ்பால் கிரிக்கெட் என்று பெயர்.
புதிய பேஸ்பால் முறைப்படி பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்கு, பழைய ஆடுகளங்கள் சரிப்பட்டு வரவில்லை. அதனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளமாக மாற்றினார்கள்.
இது இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு கைகொடுத்ததோ இல்லையோ, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நன்றாக கைகொடுத்துள்ளது.
அதனாலேயே முதல் 2 போட்டிகளில் இந்திய வீரர்கள் பின்னி பெடலெடுத்துவிட்டார்கள்.
அதிலும் கடந்த 2 டெஸ்ட் போட்டிகளில் 2 இன்னிங்ஸ்களிலுமாகச் சேர்த்து 1000 ரன்களைக் கடந்து சாதனை படைத்தது இந்தியா.
இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்தியாவின் சுப்மன் கில் 585 ரன்களையும், ரிஷப் பந்த் 342 ரன்களையும், கே.எல்.ராகுல் 236 ரன்களையும், ஜெய்ஸ்வால் 220 ரன்களையும் குவித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இந்தியாவின் முதல் 5 பேட்ஸ்மேன்கள் இந்த அளவுக்கு ரன்களைக் குவித்த்தில்லை.
பேஸ்பால் கிரிக்கெட் கைகொடுக்காத நிலையில், லார்ட்ஸின் ஆடுகளத்தை பந்துவீச்சாளர்களுக்கு சாதகமான ஆடுகளமாக மாற்ற இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன் 150 கிலோமீட்டர் வேகம் வரை அதிரடியாக பந்துவீசும் ஜோஃப்ரா ஆர்ச்சரையும் இந்த போட்டியில் சேர்த்துள்ளது இங்கிலாந்து.
லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கும் 3-வது போட்டியில் எப்படியும் தோற்றுவிடக் கூடாது என்பதற்காக இந்த முயற்சிகளை இங்கிலாந்து செய்துள்ளது.
ஆனால், இந்தியாவும் அதைச் சமாளிக்க ஒரு ப்ளான் பி-யை வைத்திருக்கிறது. இங்கிலாந்து அணி ஆர்ச்சரை களம் இறக்கும் அதே நேரத்தில் இந்தியாவின் சார்பில் பும்ரா ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதற்காக பிரசித் கிருஷ்ணா அணியில் இருந்து நீக்கப்படலாம். பும்ரா – சிராஜ் – ஆகாஷ்தீப் என்று இங்கிலாந்து அணி மீது மும்முனை தாக்குதல் நடத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
மற்றபடி இந்திய அணியில் பெரிய மாற்றம் ஏதும் இருக்காது என்று கூறப்படுகிறது.
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்தபோது விராட் கோலி கேப்டன்.
அப்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த போட்டியை மறக்க முடியாது.
இந்தியாவை வெற்றிகொள்ள 273 ரன்களை எடுக்கவேண்டும் என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து ஆடவந்தது.
ஆனால், கோலியும் அவரது படையும் அதை எடுக்க விடவில்லை. 120 ரன்களுக்குள் இங்கிலாந்தை சுருட்டிவிட்டது.
அதே போன்றதொரு வெற்றியை லார்ட்ஸ் மீண்டும் நமக்கு பரிசளிக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
– பி.எம். சுதிர்