உலகளவில் புகழ்பெற்ற சில ஆக்ஷன் படங்களைப் பார்க்கையில் பிரமிப்பு தொற்றிக் கொள்ளும். தொடர்ச்சியாக ஆக்ஷன் காட்சிகளை அமைக்கிற வகையில் மிகச்சிறிய கதையைக் கையில் எடுத்துக்கொண்டு திரையில் மாயாஜாலத்தை நிகழ்த்தியிருப்பார்கள்.
அப்படிப்பட்ட முயற்சிகள் தமிழ் திரையில் அவ்வப்போது நிகழ்ந்திருக்கின்றன. ஆனால், அவை பெரியளவில் வரவேற்பைப் பெற்றதில்லை. ‘அதனை மாற்றிக் காட்டுகிறோம்’ என்று களமிறங்கியிருக்கிறது ‘பீனிக்ஸ்’.
அதன் அர்த்தம் என்னவென்று கேட்பவர்களுக்காகவே, ‘வீழான்’ என்ற வார்த்தையை டேக்லைன் போலச் சேர்த்திருக்கிறது படக்குழு.
ஸ்டண்ட் மாஸ்டர் அனல் அரசு தயாரித்து இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி மகன் சூர்யா நாயகனாக அறிமுகம் ஆகியிருக்கிறார்.
சம்பத்ராஜ், முத்துகுமார், திலீபன், அஜய் கோஷ், வரலட்சுமி சரத்குமார், தேவதர்ஷினி, ஸ்ரீஜித் ரவி, ஆடுகளம் நரேன், ஹரிஷ் உத்தமன், அபி நட்சத்திரா, காக்கா முட்டை விக்னேஷ் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இதற்கு இசையமைத்திருக்கிறார்.
விஜய் சேதுபதியின் மகன் சூர்யாவுக்கு நல்லதொரு அறிமுகத்தைத் தந்திருக்கிறதா ‘பீனிக்ஸ்’?
‘பீனிக்ஸ்’ கதை!
வடசென்னையில் உள்ள ஆர்.கே.நகர் பகுதி. அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான கரிகாலனை (சம்பத் ராஜ்) கொலை செய்த குற்றத்திற்காகச் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்படுகிறார் சூர்யா (சூர்யா சேதுபதி).
அவரது தாயோ (தேவதர்ஷினி), இதர உறவினர்களோ மிகச்சாதாரணர்களாக இருக்கின்றனர். அவர்களால் சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்தில் சந்திப்பதே கடினம் என்கிற சூழல் நிலவுகிறது.
அதேநேரத்தில், கொலையான கரிகாலனின் மனைவியோ (வரலட்சுமி சரத்குமார்) ‘அந்த பையனைக் கொன்னுட்டு என்கிட்ட வந்து பேசுங்க’ என்று தங்களது ஆட்களிடம் கர்ஜிக்கிறார்.
அவரது தந்தை அமைச்சர் (அஜய் கோஷ்) என்பதால், அதிகார பலத்தின் துணையோடு சூர்யாவைக் கூர்நோக்கு இல்லத்தில் வைத்துக் கொலை செய்யச் சில முயற்சிகள் நடக்கின்றன.
அதிலிருந்து சூர்யா தப்பித்தாரா, இல்லையா என்பதைச் சொல்கிறது ‘பீனிக்ஸ்’. கூடவே, இப்படியொரு கொலைப்பழி விழும் அளவுக்குச் சூர்யாவின் வாழ்வில் அப்படியென்ன நிகழ்ந்தது என்பதையும் கூறுகிறது.
உண்மையைச் சொன்னால், இது மிகச்சாதாரணமான ‘பழிவாங்கல்’ கதை. ஆனால், அதனை ‘ஆக்ஷன் காட்சிகள்’ வழியே இயக்குநர் அனல் அரசு சொல்லியிருக்கும் விதம் ‘ஆக்ஷன் பட பிரியர்களை’க் கொண்டாட வைக்கும். அதுவே இப்படத்தின் யுஎஸ்பி.
ஜெயித்தாரா சூர்யா..?
‘விஜய் சேதுபதி மகன் விடலைப் பையனா இருக்காரே. அவரை வச்சு என்ன கதை பண்ண முடியும்’ என்று ‘நெகட்டிவ்’வாக யோசிக்காமல், அதையே முக்கிய அம்சமாக வைத்து ஒரு ஆக்ஷன் கதை சொல்லலாமே என்று களமிறங்கியிருக்கிறார் அனல் அரசு.
அனல் பறக்கும் சண்டைக் காட்சிகள் தந்த ஒரு ஸ்டண்ட் இயக்குநரின் முதல் படம் இப்படியிருந்தால் ‘செம’யாக இருக்கும் எனும்படியாக ‘பீனிக்ஸ்’ தந்திருக்கிறார்.
கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் புதுமுகமாக அறிமுகமாகும் நாயகர்களின் படங்கள் ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன், செண்டிமெண்ட் என்று அனைத்தும் கலந்த மசாலா படமாக அல்லது முழுக்கக் கல்லூரிக் காலத்து காதலை, மோதலைச் சொல்கிற படங்களாகவே இருந்திருக்கின்றன.
கார்த்தி, விக்ரம் பிரபு போன்றவர்கள் இதில் விதிவிலக்கு.
அதேநேரத்தில் ‘நாளைய தீர்ப்பு’வில் அறிமுகமான விஜய்க்கு ஆக்ஷன் காட்சிகளை அள்ளிக் கொடுத்திருந்தார் அவரது தந்தையான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன்.
கிட்டத்தட்ட அந்த வழியில் அமைந்திருக்கிறது விஜய் சேதுபதி மகன் சூர்யாவின் அறிமுகம்.
படம் முழுக்க ஆக்ஷன் காட்சிகள் இருந்தாலும், அவரது இருப்பு போரடிக்கவில்லை. அதுவே அவரது மிகப்பெரிய வெற்றி.
அவரது பாத்திரத்திற்கு ரொமான்ஸ், காமெடி செய்கிற வாய்ப்புகள் தரப்படாத காரணத்தினால், மிக எளிதாக ‘எஸ்கேப்’ ஆகியிருக்கிறார். அதனால், அடுத்தடுத்த படங்களில் தான் அவற்றை எப்படி கைக்கொள்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.
இதில் நாயகி என்று யாருமில்லை. அதேநேரத்தில் ‘காக்கா முட்டை’ படத்தில் ஐஸ்வர்யாவின் மூத்த மகனாக வந்த விக்னேஷ் மற்றும் ‘அயலி’ அபி நட்சத்திரா இதில் காதல் ஜோடியாகத் தோன்றியிருக்கின்றனர்.
அவர்கள் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஈர்க்கின்றன. ‘மிக்ஸ்டு மார்ஷியல் ஆர்ட்ஸ் (MMA) வீரராகத் தோன்ற தன் உருவத்தையே விக்னேஷ் மாற்றிக் கொண்டிருப்பது ஆச்சர்யப்பட வைக்கிறது.
நாயகனின் தாயாக வருகிற தேவதர்ஷினி, படம் முழுக்க அழுது வடிந்துகொண்டே இருக்கிறார். ஆனால், அப்பாத்திரத்தில் அவர் வேறுமாதிரியாகத் தெரிகிறார் என்பதே அந்த நடிப்பின் சிறப்பு.
எம்.எல்.ஏ.வாக வரும் சம்பத் ராஜ், வரலட்சுமி சரத்குமார், அவர்களது மகன்களாக நடித்தவர்கள், அடியாட்களாக நடித்திருக்கும் நந்தா சரவணன் உள்ளிட்டோர்,
அஜய் கோஷ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் உத்தமன், திலீபன், சிறைத்துறை அதிகாரிகளாக வருகிற ஸ்ரீஜித் ரவி,
ஆடுகளம் முருகதாஸ், ஒளிப்பதிவாளர் வேல்ராஜ், முன்னாள் எம்.எல்.ஏ.வாக வரும் முத்துகுமார், மூணார் ரமேஷ், கூர்நோக்கு இல்லத்தில் நாயகனின் அறைவாசிகளாக வருபவர்கள்,
இளம் வயது ரவுடிகள் என்று திரை முழுக்க நடிப்புக் கலைஞர்களின் முகங்கள் வந்துகொண்டே இருக்கின்றன. அதற்கு ஏற்றாற் போன்று திரைக்கதையில் அவர்கள் மீது வெளிச்சம் பாய்ச்சியிருப்பது அழகு.
இதில் அபி நட்சத்திராவின் பெற்றோராக நடித்தவர்களும் நாம் ஏற்கனவே திரையில் பார்த்தவர்கள் தான். ஆனால், அவர்களோடு வர்ஷா விஸ்வநாத் என்பவரும் சில பிரேம்களில் வந்து போயிருக்கிறார்.
அவர் யார் என்பது மட்டும் திரைக்கதையில் எங்குமே குறிப்பிடப்படவில்லை. படத்தொகுப்பு மேஜையில் அது கபளீகரம் ஆகியிருக்கும் போல.
இந்த படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் அனல் அரசு. ஒரு நாயகனுக்கு ‘பில்ட் ஷாட்கள்’ எப்படி அமைய வேண்டும்?
அது கிண்டல், கேலிக்குரியதாக மாறிவிடாமல் இருக்க எப்படித் திரையில் கதை சொல்ல வேண்டும் என்பதில் அவர் செலுத்தியிருக்கும் கவனம் அபாரம். அதுவே இப்படத்தைச் செறிவுமிக்கதாக மாற்றியிருக்கிறது.
‘பீனிக்ஸ்’ என்ற வார்த்தைக்கு ஹரிஷ் உத்தமன் பாத்திரம் விளக்கம் சொல்லும் வரைக்கும் திரைக்கதை ‘ஜிவ்’வென்று பறக்கிறது. அந்த கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி ஆறாவது விரல்தான்.
ஆனாலும், படம் முழுக்க இருக்கை நுனியில் அமர்ந்து பார்க்கச் செய்ய வேண்டுமென்பதில் உறுதி காட்டியிருக்கிறார் இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
அவரது பின்னணி இசையில் சத்தம் அதிகம் என்றாலும், அதுவே ‘கூஸ்பம்ஸ்’ மொமண்ட்களை அடிக்கோடிட்டுக் காட்டவும் உதவியிருக்கிறது. அந்த வகையில் படத்தில் வருகிற இரண்டு பாடல்கள் கொசுறுதான்.
‘யதார்த்தம்’ என்று எண்ண வைக்கிற திரைக்கதை ட்ரீட்மெண்ட் கொண்ட கதை சொல்லலுக்கு ஏற்பச் செறிவுமிக்க உழைப்பைக் கொட்டியிருக்கிறது ஒளிப்பதிவாளர் ஆர்.வேல்ராஜ், படத்தொகுப்பாளர் பிரவீன் கே.எல்., கலை இயக்குனர் மதன், கலரிஸ்ட் சண்முகபாண்டியன் உள்ளிட்டோர் அடங்கிய தொழில்நுட்பக் கலைஞர்கள் குழு.
இரண்டாம் பாதியில் எதிர்பார்ப்புக்கு ஏற்றவாறு வருகிற பிளாஷ்பேக், ரௌத்திரம் மற்றும் அழுகையைத் தவிர்த்து பிற உணர்வுகளுக்கு இடம் தராத காட்சியமைப்பு, மிக வழக்கமான கிளைமேக்ஸ் சண்டைக்காட்சி என்று ‘பீனிக்ஸ்’ஸில் குறைகளையும் அடுக்க முடியும்.
ஆனாலும், தான் தேர்ந்தெடுத்த சூர்யா சேதுபதியின் ப்ளஸ்களை அறிந்து அவரை ‘ஆக்ஷன் நாயகனாக’ வெற்றிகரமாகக் காட்டியிருக்கிறார் இயக்குநர் அனல் அரசு.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் படம் பார்ப்பவர்கள் ரசிக்கிற வகையில் ஒரு ஆக்ஷன் படம் தந்திருக்கிறார்.
‘ஐயோ சண்டைப் படம் பார்த்தாலே எனக்கு தலைவலி வந்துரும்’ என்பவர்கள் தவிர்த்து, மற்றனைவரும் ரசிக்கிற ஒரு ‘சுமார்’ ரகத்திற்கும் மேலான திரையனுபவத்தை இந்த ‘பீனிக்ஸ்’ நிச்சயம் தரும்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்