வாசிப்பின் ருசி:
புறப்படுவதற்கு முதல் நாள் அனுசூயாவிடம் விடைபெற்றுக் கொள்வதற்காகப் போனான் பூவராகன். சாப்பிட்டுவிட்டுப் பகல் வேளைக்குப் போனவன் இரவு ஒன்பது மணிக்குத்தான் எழுந்தான். அவனுக்காகவே அவள் நாளை ஒழித்து வைத்திருந்தாள் போலிருக்கிறது.
யாரும் வரவில்லை. கூப்பிடு மணி அடிக்கவில்லை. டெலிபோன்கூட அடிக்கவில்லை. இருவரும் பேசினார்கள். பேசினார்கள், அப்படிப்பேசினார்கள்.
கூப்பிடு மணியை அடித்து, கதவு திறந்ததுமே அவனை வா என்று ஒரு கையால் அணைத்துக் கொண்டே உள்ளே அழைத்துப் போனாள் அனுசூயா.
வழக்கம்போல கீழே பாய்மீதே உட்கார்ந்து கையைப் பிடித்துக் கொண்டே பேசிக் கொண்டிருந்தாள் அவள். சற்று நெருங்கிய நண்பர்களாயிருந்தால் அவள் அப்படி அணைத்துக் கொண்டேதான் வரவேற்கிற வழக்கம்.
தொட்டுத் தொட்டுத்தான் பேசுகிற பழக்கம். ஏதாவது சாதுர்யமாகச் சொல்லிவிட்டால், சட்டென்று பாய்ந்து கையால் தழுவிக் கொண்டு சிரிப்பாள். சந்தோஷத்தை அதற்குக் குறைவாக காண்பிக்க முடியாது அவளால்.
தனியாக இருக்கிறபோது மட்டுமில்லை. எத்தனைபேர் இருந்தாலும் இப்படித்தான். ஏதாவது நினைத்துக் கொள்ளப் போகிறார்களே என்று தயங்கத் தெரியாது.
கையைப் பிடித்துக்கொண்டே அவள் பேசும்போது பெண்ணின் மெல்லிய கை என்ற உணர்வைத் தவிர வேறு ஒன்றும் மனத்தில் தோன்றாமல் இருப்பது ஓர் ஆச்சரியம்!
- தி.ஜானகிராமனின் உயிர்த்தேன் நாவலிலிருந்து ஒரு சிறு துளி.
#எழுத்தாளர்திஜானகிராமன் #உயிர்த்தேன்நாவல் #எழுத்தாளர்திஜா #திஜானகிராமன் #திஜா #writerthijanakiraman #thija #uyirthennovel #writerthija