லவ் மேரேஜ் – ரசிகர்களுக்கு இனிக்கும் காதலா?

’காமெடி வொர்க் அவுட் ஆகுமா’ என்கிற பயத்துடன் உருவாக்கப்படுகிற நகைச்சுவைப் படங்களின் எண்ணிக்கை மிக அதிகம்.

நடிப்பில், ஆக்கத்தில் ஜாம்பவானாகத் திகழ்பவர்களுக்கும் அது நிச்சயம் இருக்கும். காரணம், திரையில் இருந்து பிறக்கிற அலைவரிசையோடு ரசிகர்கள் ஒன்றினால் மட்டுமே அப்படம் வெற்றி பெறும். அதனாலேயே, நகைச்சுவைப் படத்தைப் பார்ப்பதென்பது ரசிகர்களுக்கும் ‘ரிஸ்க்’கான விஷயம்.

ஆனால், ‘டைமிங்’ சரியாக அமைந்துவிட்டால் அந்த நகைச்சுவைப் படத்தைத் தலைமீது வைத்துக்கொண்டாடுவார்கள் ரசிகர்கள்.

அப்படியொரு படமாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியது ‘லவ் மேரேஜ்’ ட்ரெய்லர் மற்றும் சில நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் தெரிவித்த சில கருத்துகள்.

சண்முக பிரியன் எழுதி இயக்கியிருக்கிற இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கிறார்.

விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி த் இனேஷ், ரமேஷ் திலக், கஜராஜ், அருள்தாஸ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு, யாசர் ஆகியோருடன் சத்யராஜ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

சரி, மனதைக் கவர்கிற நகைச்சுவையைத் தருகிறதா ‘லவ் மேரேஜ்’?

‘ல.மே.’ கதை!

மதுரை வட்டாரத்தில் வாழ்ந்து வருகிறார் ராமச்சந்திரன் என்கிற ராம் (விக்ரம் பிரபு).

சொந்தமாகக் கடை வைத்திருக்கும் அவருக்குக் குடும்பத்தினர் நீண்ட காலமாக வரன் பார்த்து வருகின்றனர்.

ஆனாலும், சரியான பெண் கிடைக்காமல் தடுமாறி நிற்கின்றனர். ராமின் வயது 33.

இந்த நிலையில், தரகர் (கோடாங்கி வடிவேலு) மூலமாகக் கோபிச்செட்டிபாளையத்தில் இருக்கும் ஒரு பெண்ணைக் காணக் குடும்பத்தினர், உறவினர்களுடன் செல்கிறார் ராமச்சந்திரன்.

அப்பெண்ணின் குடும்பத்தினர் வேறு சாதியைச் சேர்ந்தவர்கள். ஆனாலும், பெண் அமைந்தால் போதும் என்ற நோக்கோடு அவர்கள் பயணம் அமைகிறது.

ஏற்கனவே எதில் குறையைக் கண்டுபிடிக்கலாம் என்றிருக்கிற ராம் உறவினர்களுக்கு இந்த விஷயம் ‘மெல்லக் கிடைத்த அவலாக’ இருக்கிறது.

அவர்களைச் சமாளிக்க முடியாமல் திணறுகிற ராம், தனக்குத் திருமணமானால் போதும் என்று அமைதியாக இருக்கிறார்.

பெண் வீட்டார் வீட்டில் உபசரிப்பு தடபுடலாக இருக்கிறது. அதற்கு நடுவே, அம்பிகாவை (சுஷ்மிதா பட்) பார்த்ததுமே ‘ஓகே’ சொல்லிவிடுகிறார் ராம். உடனே, இருவரது வீட்டாரும் ‘நிச்சயம்’ செய்து கொள்கின்றனர்.

ஆனால், அதனைக் காண்கிற அம்பிகாவின் முகம் மகிழ்ச்சியாக இல்லை.

அன்று மாலை ராம் குடும்பத்தினர் ஊருக்குக் கிளம்ப எத்தனிக்கின்றனர். அது நிகழாதவாறு அவர்கள் வந்த பேருந்து ‘ரிப்பேர்’ ஆகிறது.

அதனால், அன்றிரவு அனைவரும் அம்பிகா வீட்டில் தங்க நேரிடுகிறது.

அடுத்த நாள் கோவிட் – 19 காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்படுகிறது. அதனால், எங்கும் எவராலும் வேறு இடங்களுக்குச் செல்ல முடியாத நிலை.

அதையே சாக்காக வைத்து அம்பிகா உடன் காதல் வளர்க்கலாம் என்று நினைக்கிறார் ராம். அவரது முயற்சிகள் தோல்வியிலேயே முடிகின்றன.

நாட்கள் ஆக ஆக, அம்பிகாவின் விலகல் அதிகமாவதாக உணர்கிறார் ராம். அதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று நினைக்கிறார்.

இரு வீட்டாரும் உடனடியாகத் திருமணத்தை நடத்தி விடலாம் என்று சொல்லும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

அடுத்த நாள் காலையில், அம்பிகா வீட்டை விட்டு வெளியேறுகிறார். அதனைக் கேள்விப்பட்டதும் ராம் உறவினர்கள் ‘குய்யோ முய்யோ’ என்று குதிக்கத் தொடங்குகின்றனர்.

அம்பிகா எங்கு, எதற்காகச் சென்றார்? ராம் உடனான திருமணத்தில் அவருக்கு விருப்பமில்லையா?

இறுதியாக, ராமுக்குத் திருமணம் ஆனதா, இல்லையா? இப்படிப் பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘லவ் மேரேஜ்’.

சிரிப்புக்கான இடங்கள்!

தெலுங்கில் ரவி கிரண் கோலாவின் எழுத்தாக்கத்தில் ஆக்கப்பட்ட ‘அசோக வனம்லோ அர்ஜுனா கல்யாணம்’ திரைப்படத்தைத் தழுவி உருவாக்கப்பட்டுள்ளது ‘லவ் மேரேஜ்’.

கூடுதல் திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும் சண்முக பிரியன், இக்கதையானது மதுரை, கோபிச்செட்டிபாளையம் வட்டாரத்தில் நிகழ்வதாக வடிவமைத்திருக்கிறார்.

அதனால், அவை சார்ந்த சில விஷயங்கள் ஆங்காங்கே நம்மைச் சிரிப்பூட்டுகின்றன.

அது போதாதென்று இக்கதையில் வரும் சில முக்கியப் பாத்திரங்கள் வழக்கத்திற்கு மாறானதாக வடிவமைக்கப்பட்டிருக்கின்றன.

கல்யாணத் தரகர், எதற்கெடுத்தாலும் குறை சொல்கிற உறவினர், விழுந்து விழுந்து விருந்தினர்களைக் கவனிக்கிற பெண்ணின் தாய்மாமன் என்று ‘டெம்ப்ளேட்’டாக சில பாத்திரங்கள் வார்க்கப்பட்டிருந்தாலும் அவை சில இடங்களில் நம்மை ரசிக்க வைக்கின்றன; சிரிக்க வைக்கின்றன.

முழுக்க ‘யதார்த்தமான’ திரைக்கதை ட்ரீட்மெண்ட் இல்லாமல் ‘சினிமாத்தனத்தை’ ஆங்காங்கே நிறைத்து இப்படத்தை ஆக்கினால் போதும்.

கதையில், காட்சிகளில் இருக்கிற உணர்வுகள் ரசிகர்களைச் சென்றடைந்தால் போதும். அந்த நோக்கத்தில் சரியாகக் கவனம் செலுத்தியிருக்கிறார் இயக்குனர் சண்முக பிரியன்.

அதேநேரத்தில், சில காட்சிகளின் தன்மையை, பாத்திரங்களில் உணர்வு வெளிப்பாட்டை அதிகப்படுத்தியும் குறைத்தும் மாற்றியமைத்திருக்கலாம் என்று சொல்ல வைத்திருக்கிறார்.

‘லாக் டவுன்’ பற்றிய காட்சிகள் படத்தில் அதிகமில்லையோ என்கிற உணர்வு எழுகிறது. நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட காட்சிகளை அதிகரித்து இன்னும் கொஞ்சம் அழுத்தமாகக் கதை சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணமும் தலை தூக்குகிறது.

மதன் கிறிஸ்டோபரின் ஒளிப்பதிவு, திரையில் ‘கலர்ஃபுல்’ பிரேம்களை காட்டுகிறது.

பரத் விக்ரமனின் படத்தொகுப்பு, முடிந்தவரை சுவாரஸ்யமான காட்சிகளை ‘கட்’ செய்தால் போதும் என்று எல்லை வகுத்துச் செயல்பட்டிருக்கிறது.

எம்.முரளியின் தயாரிப்பு வடிவமைப்பு அழகியல் மிளிர்வதோடு, காட்சியின் தன்மையும் திரையில் தெரிய மெனக்கெட்டிருக்கிறது.

பாடல்களிலும் சரி, பின்னணி இசையிலும் சரி, ‘ஏற்கனவே எங்கேயோ கேட்டிருக்கிறோமே’ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறார் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன்.

பல காட்சிகளில் நடிப்புக் கலைஞர்களின் ‘டைமிங்’ அபாரமாக உள்ளது; அதனை அடிக்கோடிட்டாற் போல ஷான் ரோல்டன் அமைத்திருக்கும் பின்னணி இசை ரசிகர்களின் சிரிப்பை உறுதிப்படுத்துவதாக உள்ளது.

‘கும்கி’ காலகட்டத்தில் இருந்ததைப் போலத் திரையில் தோற்றமளிக்க முயற்சித்து, அதில் வெற்றி பெற்றிருக்கிறார் விக்ரம் பிரபு. ‘ஓகே’ ரகத்தில் ‘லவ் மேரேஜ்’ காட்சியனுபவம் அமைந்தாலும், படத்தில் அவரது இருப்பு ‘அருமை’ என்று சொல்லும்படியாகவே இருக்கிறது.

படம் முழுக்க நாயகி சுஷ்மிதா பட் ஒரு பொம்மை போல வந்து போயிருக்கிறார். ஓரிடத்தில் அது வசனமாகவும் வந்து போகிறது.

அவரது தங்கையாக வரும் மீனாட்சி தினேஷ் துறுதுறுவென்று திரையில் திரிகிறார். தான் ஏற்ற பாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார். ஆனாலும், ‘கொஞ்சம் வயது அதிகமோ’ எனும்படியாக உள்ளது அவரது தோற்றம்.

இந்தப் படத்தில் ‘காமெடிக்கு நான் கியாரண்டி’ என்று சொல்லும்படியாகச் சிலர் வந்து போயிருக்கின்றனர்.

அவர்களில் முதலிடம் பெறுகிறார் அருள்தாஸ். எதற்கெடுத்தாலும் குறை சொல்கிற உறவினராக வந்து நம்மை வயிறு வலிக்கச் செய்திருக்கிறார்.

ரமேஷ் திலக், அவருடன் திரியும் யாசர் மற்றும் கோடாங்கி வடிவேலு கூட்டணி ஆங்காங்கே கிச்சுகிச்சு மூட்டிக்கொண்டே இருக்கிறது. அடுத்தடுத்து அவர்களது ‘காமெடி ஒன்லைனர்கள்’ வருவதால், சிலவற்றுக்குச் சிரிக்கத் தவறிவிடுவதும் நிகழ்கிறது.

இவர்களோடு கே.ஜி.மோகன், முருகானந்தம், கஜராஜ், வின்னர் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சத்யராஜ் கௌரவ தோற்றத்தில் ஒரு காட்சிக்கு வந்து சென்றிருக்கிறார். அதுவும் ‘கிச்சுகிச்சு’ மூட்டக் கூடியதே.

அருள்தாஸின் மகளாக வருபவர் ஒரு இளைஞரோடு பழகுவதாகச் சில ஷாட்கள் இந்தப் படத்தில் காட்டப்படுகின்றனன. ஆனால், அதன் ’பாலோஅப்’ திரைக்கதையில் இல்லை. இறுதி ‘ட்ரிம்’மிங்கில் அவை வெட்டப்பட்டிருக்கலாம்.

அதுபோன்ற குறைகளைச் சரி செய்து, நடிகர் நடிகைகளின் பெர்பார்மன்ஸுக்கு இன்னும் கொஞ்சம் முக்கியத்துவம் தந்திருந்தால் ‘சிரிப்பை’ அதிகப்படுத்தியிருக்கலாம்.

ஆனால், இப்போது ஒன்றும் பெரிய குறைபாடு நிகழ்ந்துவிடவில்லை. ‘லவ் மேரேஜ்’ பார்க்கிற ரசிகர்கள் தியேட்டரில் சிரிக்கத்தான் செய்கின்றனர்.

ரொம்ப வித்தியாசமான கதையோ, களமோ இல்லை என்றபோதும், ‘ஒரு ஆணும் பெண்ணும் எதற்காகத் திருமணம் செய்துகொள்ள வேண்டும், அதனை எப்போது செய்துகொள்ள வேண்டும்’ என்று சொன்ன வகையில் கவர்கிறது இப்படம்.

அதனைக் காணத் தயாராக இருப்பவர்களுக்கு இப்படம் இனிக்கும். இதில் வரும் காதலும் கல்யாணமும் பிடிக்கும்..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம் 
Comments (0)
Add Comment