வியாசன சமேதம் – இதுவும் ஒருவகை நகைச்சுவை படமே!

சோகமான விஷயமொன்றைத் திரையில் நகைச்சுவையாகக் காட்ட முடியுமா? இந்த கேள்வியை எழுப்பியது ‘வியாசன சமேதம் பந்துமித்ராதிகள்’ ட்ரெய்லர்.

இயக்குனர் விபின் தாஸ் தயாரிப்பில் எஸ்.விபின் எழுதி இயக்கியுள்ள இப்படத்தில் அனஸ்வரா ராஜன், அஸீஸ் நெடுமங்காடு, சிஜு சன்னி, ஜோமோன் ஜோதிர், பைஜு சந்தோஷ், மல்லிகா சுகுமாரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கடந்த 13-ம் தேதியன்று ‘வியாசனசமேதம் பந்துமித்ராதிகள்’ தியேட்டர்களில் வெளியானது.

எப்படிப்பட்ட திரையனுபவத்தைத் தருகிறது இப்படம்?

’வி.ப.’ கதை!

ஒரு தினசரியில் இருக்கிற ‘அஞ்சலி’ விளம்பரத்தை மொபைலில் புகைப்படம் எடுக்கிற சாவித்திரி (மல்லிகா சுகுமாரன்), அதனைப் பேத்தி அஞ்சலியிடம் (அனஸ்வரா ராஜன்) கொடுத்து தனது வாட்ஸ்அப் ‘டிபி’யாக வைக்கச் சொல்கிறார். ‘பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ற மாதிரி இதுவும் இருக்கட்டுமே’ என்கிறார்.

அஞ்சலியோ, தனக்குப் பார்த்து வைத்துள்ள மாப்பிள்ளையின் சந்தேகக் குணத்தை நினைத்துப் பொருமிக் கொண்டிருக்கிறார். வேண்டாவெறுப்பாக அதனைச் செய்கிறார்.

தந்தை முரளி (அஸீஸ் நெடுமங்காடு), தாய் சுதா (அஸ்வதி சாந்த் கிஷோர்) இருவரும் அஞ்சலிக்கு அமைந்த வரன் நிச்சயமானால்தான் தங்களுக்குக் கௌரவம் என்று நினைக்கின்றனர்.

இந்த திருமண ஏற்பாடுகளுக்குத் தூணாகத் தான் விளங்குவதாக நினைத்துக் கொண்டிருக்கிறார் காரயோகம் சங்கத் தலைவர் மணியன்குட்டி (பைஜு சந்தோஷ்). முரளியிடம் அவர் ஒரு இன்ஸ்டாகிராம் வீடியோவை காட்டுகிறார்.

அதில் அஞ்சலியின் அழகழகான புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்த வீடியோவை இட்டவர் பெயர் சுஹைல் (சிஜு சன்னி). “அந்த பையனோட உன் பொண்ணு கல்யாணத்தன்னிக்கு ஓடிப் போயிராம.. அதுக்குள்ள விஷயத்தைப் பொண்ணுகிட்ட கேட்டு க்ளியர் பண்ணு” என்கிறார்.

அதனைக் கேட்டதும் தலை போகிற வேதனையை அடைகிற முரளி, உடனடியாக வீடு திரும்புகிறார். அஞ்சலியிடம் அது பற்றிக் கேட்கிறார்.

அந்த இளைஞன் தனது காலேஜ் சீனியர் என்றும், தன் பின்னால் காதலிப்பதாகச் சொல்லிச் சுற்றியதாகவும் கூறுகிறார். ஆனால், தான் அவரை அப்படி பார்த்ததே இல்லை என்கிறார்.

அதே நேரத்தில், தனக்குப் பார்த்திருக்கிற மணமகன் ‘டாக்ஸிக்’ ஆக இருப்பதையும் சொல்கிறார்.

முரளியும் சரி, சுதாவும் சரி, சுஹைலை காதலிப்பதாலேயே மகள் ’கல்யாணத்தில் இஷ்டமில்லை’ என்று சொல்வதாக நினைக்கின்றனர். அதனை எப்படி தெளிவுபடுத்துவது என்று தெரியாமல் அஞ்சலி மனதுக்குள் புழுங்குகிறார்.

ஆனால், பாட்டி சாவித்திரியோ தனது பேத்தியின் பேச்சில் தெளிவு இருப்பதாக எண்ணுகிறார்.

அடுத்த நாள் காலை பொழுது புலர்கிறது.

நெஞ்சுவலி என்று துடிக்கிற சாவித்திரியை முரளி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அங்கு அவரது உயிர் பிரிகிறது.

வாழ்நாள் முழுவதும் தன்னைச் சுற்றியுள்ள அனைவரும் நலமாக வாழ வேண்டும் என்று நினைத்துச் செயல்பட்டவர் சாவித்திரி.

அதனால் அவரது ஈமச்சடங்குகள் சுமூகமாக நிகழ வேண்டும் என்பதே குடும்பத்தினரின் விருப்பம்.

அவ்வாறு நிகழவிடாமல் செய்வதற்கான அனைத்து காரியங்களும் அடுத்தடுத்து நிகழ்கின்றன. வந்தவர் போனவர் என்று வேறுபாடில்லாமல் சிலர் அந்த கைங்கர்யத்தைச் செய்கின்றனர்.

சிலர் அதனைத் தடுக்க முடியாமல் வேடிக்கை பார்க்கின்றனர். அப்படியொரு இக்கட்டான நிலையில் அதிகமிருப்பது முரளிதான்.

ஒருகட்டத்தில் அன்றைய தினமே சாவித்திரியின் இறுதிச்சடங்கு நிறைவுறுமா என்ற கேள்வி எழும் அளவுக்கு நிலைமை மோசமாகிறது.

அதன்பின் என்னவானது என்று சொல்கிறது படத்தின் மீதி.

உண்மையைச் சொன்னால், இது ஒரு சோகமான கதை. இதனைச் சிரிக்கச் சிரிக்கத் திரையில் சொன்ன விதத்தில் கவர்கிறது ‘வியாசன சமேதம் பந்து மித்ராதிகள்’.

இதுவும் ஒருவகை நகைச்சுவை படம் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதோடு, இறுதியாக நாம் வாழ்கிற சமூகத்தின் மீதான கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்கிறது. அந்த வகையில் இந்த படத்தின் உள்ளடக்கம் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது.

‘வருந்துகிறோம்’ சுவரொட்டிகளில் ‘சோகத்துடன் குடும்பத்தினர், நண்பர்கள்’ என்ற வார்த்தைகள் இடம்பெறும் அல்லவா? அதுதான் இந்த டைட்டிலுக்கான அர்த்தம்.

மகிழ முடியாத சிரிப்பு..!

துக்கம் நிகழ்ந்த வீட்டில் எல்லோருமே சோகம் கப்பிய முகத்துடன் இருப்பார்கள் என்று சொல்லிவிட முடியாது. அதுவரை நெஞ்சில் புதைந்திருந்த கோபம், வன்மம், எரிச்சல் என்று தனிப்பட்ட வெறுப்புகளை அந்த நிகழ்வில் திணிப்பது சிலரது வழக்கமாக இருக்கும்.

ஏதேனும் ஒன்றைக் கொளுத்திப் போட்டு பற்றி எரிவதை வேடிக்கை பார்ப்பது சிலரது பிறவிக்குணமாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் உறவினர்களாக, சுற்றத்தினராக, ஊர்க்காரர்களாக வாய்த்தால் எப்படியிருக்கும் என்பதை விமர்சனமாக முன்வைக்கிறார் எழுத்தாக்கம் செய்திருக்கும் இயக்குனர் எஸ்.விபின்.

அது நமக்கு நகைச்சுவையாகப் படுகிறது. ஆனால், அது மகிழ முடியாத சிரிப்பாக அமைகிறது.

அந்த முரணைச் சமநிலையில் சமாளித்திருப்பதே இயக்குனர் எஸ்.விபின் அடைந்துள்ள வெற்றி.

’கேரளாவுல எந்த இடத்துல ப்ரேம் வச்சாலும் அழகா இருக்கும்’ என்பார்கள். அதனைப் பூர்த்தி செய்திருப்பதோடு, படம் முழுக்கச் சில மணி நேரங்களில் நிகழ்ந்ததாக உணர வைத்திருப்பது ஒளிப்பதிவாளர் ரஹீம் அபுபக்கரின் வெற்றி. துக்கம் நிகழ்ந்த வீட்டில் நாம் இருக்கிற உணர்வை ஏற்படுத்துகிறார்.

ஜான்குட்டியின் படத்தொகுப்பானது, ஒரு நிகழ்வை நாம் நேரில் பார்க்கிற எண்ணத்தை விதைக்கிறது.

அங்கீத் மேனனின் பின்னணி இசை இப்படத்தின் மிகப்பெரிய பலம். பதற்றம் ஏற்படுத்தக்கூடிய காட்சிகளில் ஆங்காங்கே நகைச்சுவையும் இடம்பெறுவதற்கேற்ப அவரது உழைப்பு அமைந்திருக்கிறது.

பாடல்களும் துள்ளலை விதைப்பதாக, உற்சாகமூட்டுவதாக உள்ளன. இந்தக் கதையில் அப்படியொரு ரசனையை உருவாக்க முயன்றதற்குப் பாராட்டுகள்..!

பாபு பிள்ளையின் கலை வடிவமைப்பு, அருண் மணியின் ஒலி வடிவமைப்பு, சுதி சுரேந்திரனின் ஒப்பனை, அஸ்வதி ஜெயக்குமாரின் ஆடை வடிவமைப்பு ஆகியன கதை நிகழும் களத்தை உண்மை என்று நம்பச் செய்வதில் முக்கியப் பங்காற்றியிருக்கின்றன.

இது போக விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட இதர தொழில்நுட்ப அம்சங்களும் படத்தைச் செறிவானதாக மாற்றியிருக்கின்றன.

நடிப்பைப் பொறுத்தவரை, இந்தப் படத்தின் அனைவரது பங்களிப்பும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

தாயை இழந்த மகளாக அஸ்வதி சாந்த் கிஷோரின் அழுகையும், தன்னைப் புரிந்துகொண்ட ஒரே ஜீவனான பாட்டியைப் பிரிந்த அனஸ்வரா ராஜனின் வேதனையும், வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கிற தன்னை மகனாகப் பாவித்த மாமியாரை இழந்த அஸீஸ் நெடுமங்காடின் துக்கமும் மிகப்பொருத்தமாகப் படம் நெடுகத் தெரிவதே அவர்களது நடிப்புத் திறமையைச் சொல்லும்.

இவர்களோடு தாங்கள் ஏற்ற பாத்திரத்தின் தன்மையைச் சரியாகக் கடத்தியிருக்கும் பைஜு சந்தோஷ், சிஜு சன்னி, ஜோமோன் ஜோதிர், நோபி மார்கோஸ் உட்படப் பலர் அற்புதமான நடிப்பைத் தந்திருக்கின்றனர்.

முக்கியமாக, பாதைத் தகராறில் நீதிமன்றம் வரை சென்ற பக்கத்துவீட்டுக்காரராக வரும் சஜி சபானா மற்றும் அவரது மனைவியாக வருபவரின் நடிப்பு ‘பக்கா’.

தமிழில் ‘எம்டன் மகன்’, ‘பெருசு’, ‘ஏ1’ உட்படச் சில படங்களில் துக்க வீடுகளில் நடக்கிற நிகழ்வுகள் ‘காமெடி’ ஆக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால், அவை அனைத்துமே ‘அவல நகைச்சுவை’ ரகத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ‘துக்க நகைச்சுவை’ என்றொரு வகைமையையே உண்டாக்கியிருக்கிறார் எஸ்.விபின்.

“எழவு வீடா? அங்க அழுறவங்களை பார்த்தா எனக்கு சிரிப்பு சிரிப்பா வரும்” என்று ஒரு பாத்திரம் சொல்வது கொஞ்சம் ‘சென்சிடிவ்’வானவர்களுக்கு அபத்தமானதாகத் தெரியலாம்.

ஆனால், அப்படிப்பட்டவர்களையும் சிரிக்க வைத்துவிடும் பல காட்சிகள் இப்படத்தின் பலம்..

’சின்ன கல்லு பெத்த லாபம்’ என்று கேரளாவில் வசூல் அள்ளும் இப்படம், ஓடிடி வெளியீட்டின்போது மிகப்பெரியளவில் ரசிகர்களை ஈர்க்கவல்லது..!

  • உதயசங்கரன் பாடகலிங்கம்
Comments (0)
Add Comment